சாலை விபத்தில் தேவேந்திரனும் நாரதரும் அகால மரணம்.

அங்கமுத்துவுடன் சென்ற தேவேந்திரனும் நாரதரும் வெளியே நின்றுகொண்டிருந்த காரில் ஏறிக்கொண்டார்கள்.அண்ணாசாலையை நெருங்கியபோது எதிரே வேகமாக வந்த தண்ணீர் லாரி இவர்களின் காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் கார் அப்பளமாக நொறுங்கியது.தேவேந்திரனும் நாரதரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.அங்கமுத்து சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
அந்த வினாடியே அங்கு தோன்றிய சாத்தான் இருவரின் உயிர்களையும் தன்னகத்தே வாங்கிக் கொண்டு அவர்களைப் போலவே தேவ உருக்கள் கொண்டு தேவலோகம் சென்றான்.

முற்றியது.

பின்னுரை:மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வலைப்பதிவர் அனுராதாவின் கணவன் நான்.

நோயின் கொடுமையை மறப்பதற்காக அவளிடம் தினமும் பல நகைச்சுவை கலந்த கதைகளைச் சொல்வேன்.அப்போது தோன்றியது தான் இந்தக் கதையும்.தற்போது அனுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.கிட்டத்தட்ட சுயநினைவு இழந்த நிலையில் இருக்கிறாள்.கதைசொல்லும் நிலையில் நானோ,கேட்கும் நிலையில் அவளோ நிச்சயமாக இல்லை.இந்நிலையில் இந்தத் தொடரைத் தொடர்ந்து எழுத முடியாத நிலைமையில் உள்ளேன்.தொடர்ந்து மாற்றங்கள் ஏற்படும்.அதற்கான காலம் கனியும்.அப்போது தொடர்கிறேன்.

இந்தத் தொடரை நான் பணி புரிந்த ஊரான திண்டுக்கல்லைச் சேர்ந்த சக வலைப் பதிவரான சரவணன் என்கிற உண்மைத் தமிழன் அவர்களுக்கும்,சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மற்றுமொரு சக வலைப் பதிவரான கிருஷ்ணகுமார் என்கிற லக்கிலுக் அவர்களுக்கும் காணிக்கை ஆக்குகிறேன்.நேரமும் காலமும் ஒத்துழைத்தால் பின்னொரு நாளில் இவர்களைச் சந்திப்பேன்.

நியமனத்திற்கு முன்பே ராஜினாமாக் கடிதம் பெறப்பட்டது!!!

"சரி.எங்கே தங்கியிருக்கீங்க?"என்று கேட்டார் துரைமுருகன்.

"இனிமெத் தான் பாக்கணும்."இது நாரதர்.

"ஏன் அங்கே இங்கேன்னு இடம் பாத்துகிட்டு?பேசாமெ ஸ்டேட் கஸ்ட் ஹவுசிலெ போய்த் தங்கலாமே.நா ஏற்பாடு பண்ணிட்றேன்."

தேவேந்திரனும் நாரதரும் தலையசைத்து ஒப்புதலைத் தெரிவித்தனர்.

"சரி.நீங்க பாக்கப் போற ரகசிய வேலை என்னன்னு தெரிஞ்சிக்கலாமா"

"அதெல்லாம் யார் கிட்டேயும் சொல்லக் கூடாது.சொன்னா அதுக்குப் பேரு ரகசியமில்லே."

"சரி என்னிக்கு வேலையெ ஆரம்பிக்கப் போறீங்க?"

"நாளைக்கே"

"ஓ.அப்படியா!மீண்டும் நாளைக்குச் சந்திப்போமா?"

"இல்லீங்க ,நாளைக்கே நாங்க வந்த வேலையெ ஆரம்பிச்சுடுவோம்.நாங்க கட்சி உறுப்பினர்கள் என்பதையோ பொறுப்பிலெ இருக்கிறவங்க என்பதையோ அனாவசியமா வெளியெ காட்டிக்கமாட்டோம்.தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே சொல்லுவோம்.எங்க நியமனக் கடிதத்தையும் உறுப்பினர் கார்டுகளையும் கொடுத்தனுப்பியிருங்க.பின்னாலெ தேவெபட்டா சந்திப்போம்.நாங்க வரட்டுங்களா?"

கலைஞர் துரைமுருகனைப் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்தார்.

துரைமுருகனும் உடனே தலையை ஆட்டிக் கொண்டே எழுந்து கழக லெட்டர் பேடை எடுத்து தேவேந்திரனிடமும் நாரதரிடமும் ஆளுக்கு நாலைந்து தாட்களைக் கிழித்துக் கொடுத்தார்.

"இதுலெ ஒவ்வொண்ணுலேயும் கீழே கையெழுத்துப் போட்டுக் கொடுங்க."
இருவரும் முழித்தார்கள்.

"என்ன இது?"

"உங்க ரெண்டு பேர்களையும் பொறுப்புகள்லெ நியமிக்கிறோம்லியா.ஏதாச்சும் பிரச்சனை வந்தா நீங்க ராஜினமா செஞ்சிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததா உபயோகிச்சுக்குவோம்லெ."

"அதுக்கு ஒரு கையெழுத்துப் போறும்லெ"

"ஒவ்வொண்ணும் ஒவ்வொரு காரியத்துக்குப் பயன்படுங்கிறதுக்குத் தான் மொத்தமா வாங்கி வச்சுக்கிறது.வருத்தம் தெரிவிக்கிறதுக்கு,மன்னிப்புக் கேக்குறதுக்கு,தேவப்பட்டா உங்க பேர்லெ அறிக்கை வெளியிட்றதுக்கு இப்பிடி பலது இருக்கே"

தேவேந்திரன் இதை எதிர்பார்க்கவில்லை.கலைஞர் ஏதாவது சொல்வாரென்று அவர் முகத்தைப் பார்த்தான்.அவரோ காலையிலிருந்து இவ்வளவு நேரம் வரை இன்னும் யாரும் தன் காலில் விழவில்லையே என்ற கடுப்பில் இருந்ததினால் ரொம்பவும் இறுகிய முகத்துடன் காணப்பட்டார்.

துரைமுருகன் பேனாவை நீட்டினார்.

நாரதர்"வேண்டாம் வேண்டாம் எங்க பேனாவிலேயே கையெழுத்துப் போடுகிறோம்"என்று தனது சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்துத் தேவேந்திரனிடம் நீட்டினார்.தேவேந்திரன் கையொப்பம் போட்டபிறகு தானும் கையொப்பம் போட்டு அவ்வளவு தாட்களையும் துரைமுருகனிடம் நீட்டினார்.அவைகளைப் பெற்றுக் கொண்ட துரைமுருகன் ஒவ்வொரு தாளையும் ஒன்றுக்கு இரண்டு மூன்று தடவை கையெழுத்து இருக்கிறதா என்பதைப் பார்த்து உறுதி செய்து கொண்டார். பிறகு இருவரையும் கூட்டிக் கொண்டு வெளியே வந்தார்.அங்கு நின்றிருந்த தனது அரசியல் பிஏவான அங்கமுத்துவிடம் அறிமுகப் படுத்தினார்.

"அங்கமுத்து.இவங்க ரெண்டு பேர்களுமே தலமெக்கு ரொம்பவும் விசுவாசமான ஆளுங்க.இவங்களெ ஸ்டேட் கஸ்ட் ஹவுசிலெ கூட்டிகிட்டுப் போயி தங்க வச்சிருங்க.அப்பிடியே அறிவாலயம் போயி இவங்க ரெண்டு பேருக்குமே நா சொல்ற மாதிரி நியமனக் கடிதத்தயும் உறுப்பினர் அட்டைகளையுந் தயாரிச்சுகிட்டு மீண்டும் இங்கே வாங்க."

அங்கமுத்து கேட்டார். "கோல்டா சில்வரா?"

"மடையா மடையா.ரெண்டுமே பிளாட்டினண்டா.சீக்கிரம் போ"

உடனே அங்கமுத்துவின் முகம் ஆச்சரியத்தால் வாய் பிளந்தார்.பிளாட்டினமா!"

"ஆமா.போயி விசயத்தெக் கவனமா முடிச்சிட்டு வா.வேணுன்னா கூட ஒரு ஐஜியையும் அனுப்புறேன்.சீக்கிரம் போ."

"மிகப் பலமான பணிவுடன் அங்கமுத்து இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

திமுகவில் தேவேந்திரனுக்குப் பொறுப்பும்,கலைஞரின் எதிர்பார்ப்பும்

"அதெ அப்புறம் பாத்துக்கலாந்தலைவரே.இவங்களெ நியமிச்சுட்டா அப்புறம் ஏற்கனவே இருக்கிற மாநிலப் பொறுப்பாளரெ என்ன செய்றது?"அதனாலெ பேசாமெ புதுசா ஒரு பிரிவு உருவாக்கணும்.ஏற்கனவே கட்சியிலெ ஒவ்வொரு மாவட்டத்துலேயும் நிறைய பேருங்க பொறுப்புக் கேட்டு வரீசெயிலெ நிக்குறானுங்க.அவங்களுக்கும் கொடுத்தமாதிரி இருக்கும் தலைவரே."

துரைமுருகன் சொன்னதைக் கேட்ட கலைஞரின் முகம் மலர்ந்தது."அப்படின்னா இவங்களெ 'மாநிலங்களுக்கிடையே நல்லுறவை வளர்க்கும் பிரிவு'ன்னு ஒண்ணெ ஏற்படுத்தி அதுலெ ஆந்திர மாநிலத்துக்குப் பொறுப்பாளராப் போட்றலாம்."

தேவேந்திரன் இதனை ஆட்சேபித்தான்."அதெல்லாம் வேண்டாம்
தலைவரே.நான் பொறந்தது மட்டுமே ஆந்திரா தவிர அங்கே எனக்கு யாரையுந் தெரியாது.ஸோ..(ஆங்கிலம்!)பேசாமெ என்னெ வெளிநாடுகள் பிரிவு அப்படின்னு ஒரு பிரிவை ஏற்படுத்தி அதிலெ என்னெப் பொறுப்பாளராவும் என் பிஏ நாரதரெ துணைப் பொறுப்பாளராவும் நியமிச்சுருங்க.அதுதான் எல்லாருக்கும் செளகர்யமா இருக்கும்"என்றான் தேவேந்திரன்.

கலைஞர் யோசனையுடன் துரைமுருகனையும் ஸ்டாலினையும் பார்த்தார்.இருவரும் ஒன்றும் சொல்லவில்லை.

பிறகு கலைஞர் தேவேந்திரனைப் பார்த்தார்."உங்களைப் பார்த்தால் நல்ல புத்திக் கூர்மையுடையவரென்று தெரிகிறது.சரி.உங்கள் விருப்பப்படியே நியமிக்கிறேன்.மகிழ்ச்சி தானே"என்றார்.

"மிகவும் நன்றி தலைவரே மிகவும் நன்றி."

இப்படிச் சொல்லிவிட்டுத் தேவேந்திரன் தன் கால்களில் சாஷ்டாங்கமாக விழுவானென்று கலைஞர் ரொம்பவும் எதிர்பார்த்தார்.ஆனால் அப்படியெல்லாம் தேவேந்திரன் விழவில்லை.சும்மா நன்றி சொன்னதோடு நிறுத்திக் கொண்டான்.

ஸ்டாலினைப் பற்றிக் கலைஞரின் கவலை

ஸ்டாலின் கண்களை அகலமாகத் திறந்து ஆச்சரியத்துடன் தேவேந்திரனைப் பார்த்தார்.இவர்களின் உரையாடலைக் கேட்டாவாறே உள்ளே வந்து துரைமுருகனுக்குத் தலை சுற்றியது.கலைஞர் எப்போதும் போல் இறுகிய முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஸ்டாலின் தொடர்ந்தார்."என்னாலெ நம்பமுடியல்லியெ."

"சாயிபாபா கலைஞர் கிட்டெ என்கையெப் பிடிச்சிக் கொடுத்துகிட்டே எங்களெ அறிமுகப்படுத்தும்போது சொன்னாரே .நீங்க கவனிக்கலியா"

"கவனிச்சேன்.கவனிச்சேன்.ஆனாஅவர் தெலுகிலெ பேசினது கொஞ்சம் புரியல்லெ."

தேவேந்திரன் துரைமுருகனைப்பார்த்துக் கேட்டான்."ஏன் சார் நீங்க கூடக் கவனிக்கலியா?"

இப்போது துரைமுருகனுக்குக் கவலையாகிவிட்டது.கவனிக்கவில்லை என்று சொன்னால் தலைமையின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.கவனிச்சேன்னு சொன்னால் தேவேந்திரன் சொல்வதை மறுத்துப் பேச முடியாது.சாயிபாபா என்ன தான் சொன்னார் என்பது மூவருக்கும் சுத்தமாகத் தெரியாத நிலை.இந்த அருமையான சந்தர்ப்பத்தை எப்படியாகிலும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்துகொண்டார்.

"நான் நல்லாக் கவனிச்சேனே.அவரு உங்களெப்பத்தி கலைஞரு கிட்டெ இதெத்தானெ சொன்னாரு.அப்பவே நினெச்சேனே.நீங்க சாயிபாபாவுக்கு ரொம்ப ரொம்ப வேண்டியவருன்னு!"

துரைமுருகன் சொன்ன பதிலால் ஸ்டாலினும் கலைஞரும் திருப்தி அடைந்தார்கள்.

"சரி.வேறென்ன சொன்னார்?"

துரைமுருகன் ஏதோ சொல்லமுற்பட்டதற்குள் தேவேந்திரன் முந்திக் கொண்டான்."எனது ரகசிய வேலைகளையெல்லாம் இவர்கள் தான் முடித்துக் கொடுப்பார்கள்.எனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள்.தற்போது முக்கியமான மிகவும் ரகசியமான வேலை ஒன்று தமிழ்நாட்டில் செய்ய வேண்டியிருக்கிறது.எனவே ஒரு ஆறு மாதத்திற்கு இவர்கள் இருவரையும் உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள்.உங்களுக்கும் பிரயோசனமாக இருக்கும்.எனக்கும் வேலை முடிந்தாற்போல் இருக்கும்.வெளியே உங்கள் கட்சிக்காரராக அறிமுகப் படுத்தி வையுங்கள்.இதற்குக் கைம்மாறாக என்ன வேண்டுமோ இவர்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள்'என்று சொன்னாரே?!"

இப்போது துரைமுருகன்."ஆமா ஆமா சாயிபாபா அப்பிடித்தான் சொன்னாரு.கரெக்டு"

ஸ்டாலின் முகமும் கலைஞரின் முகமும் பிரகாசமானது.

"அப்படின்னா துரைமுருகன்.இவங்களுக்கு உறுப்பினர் கார்டு ரெடி பண்ணிருங்க.இவங்க தமிழ்நாடு பூரா சுத்திப் பாக்குறதுக்கு வசதியா ரெண்டு போஸ்டு கொடுத்திடலாம்.என்ன போஸ்டு கொடுக்கலாம்......?"என்றவாறே ஸ்டாலின் கலைஞரின் முகத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னார்.

"ஆந்திராவிலேர்ந்து வந்திருக்கிறதினாலெ நம்ம கச்சியுடைய ஆந்திரா மாநிலப் பொறுப்பாளரா நியமிச்சுடுவோமா?"

"கச்சின்னு சொல்லாதேன்னு எத்தனை வாட்டி சொல்லியிருக்கிறேன்.நல்லா நாக்கை மடக்கி கட்சி அப்பிடீன்னு உச்சரிக்கணும்"என்று திருத்தினார்
கலைஞர்.

"கச்சி"

"என்னிக்குத்தான் கட்சின்னு சொல்லப் போறியோ!.......(சிறிது மெளனம்).இந்த அழகுலெ எனக்கப்புறம் உன்னெ முதலமைச்சராக்கணும்னு சொல்றெ.என்ன செய்யறதுன்னே தெரியல்லெ.....தம்பி ஸ்டாலின்!மேடைப் பேச்சுத் தமிழுக்கென்றே பெயர் பெற்றதடா நம்ம கட்சி.எப்படித்தான் கட்டிக் காப்பாத்தப் போறியோ!"

கலைஞரின் முகத்தில் வேதனை ரேகைகள் ஓடின.

கலைஞருடன் அறிமுகம்

சிறிது நேரம் கழித்து சாயிபாபா வெளியே வந்தார்.உடனே அனைத்துக் கூட்டமும் முண்டி அடித்துக் கொண்டு சாயிபாபாவை நோக்கி முன்னேறியது.

பார்த்தான் தேவேந்திரன்.இப்போது விட்டால் அடுத்த சந்தர்ப்பம் கிடைப்பது சிரமம் என்பதை உணர்ந்தான்.உடனே நாரதரையும் இழுத்துக் கொண்டு கூட்டத்தில் மின்னலைப் போல முன்னேறி வாசலை அடைவதற்கும் சாயிபாபா வாசல் முதல்படியில் காலை வைத்தவாறே இறங்குவதற்கும் சரியாக இருந்தது.சாயிபாபாவின் கண்கள் தேவேந்திரனை நேருக்கு நேராகச் சந்தித்தன.இது போதாதா?தேவேந்திரனின் கண்களின் ஆகர்ஷணத்தைத் தாங்கமுடியாமல் சாயிபாபா திக்பிரமை பிடித்தவராய் நின்றார்.தேவேந்திரன் சாயிபாபாவின் அருகில் சென்று அவரது காதுகளில் ஏதோ ஓதினான்.உடனே சாயிபாபா சுயநினைவு வந்தவராய் தேவேந்திரனது இரு கைகளையும் பற்றிக் கொண்டு திரும்பி மீண்டும் கலைஞரின் வீட்டுக்குள் நுழைந்தார்.நாரதரும் இருவரையும் பின் தொடர்ந்தார்.சாயிபாபாவை வழியனுப்புவதற்காக வாசல் வரை வந்த துரைமுருகனுக்கு ஒன்றும் புரியவில்லை.அவரும் பின் தொடர்ந்தார்.

உள்ளே சென்ற சாயிபாபா நேராகக் கலைஞர் அமர்ந்திருந்த சோபாவின் அருகே சென்றார்.தேவேந்திரனின் இரு கைகளையும் இறுகப் பிடித்துக் கொண்டு கலைஞரிடம் நீட்டியவாறே ஏதோ சொன்னார்.சாயிபாபாவின் பின்னால் நின்றிருந்த அல்லக்கைகளுக்கே சாயிபாபா சொன்னது ஒன்றும் புரியவில்லை.எனவே அவர்கள் சாயிபாபா சொன்னதை மொழிபெயர்க்க முடியாமல் முழித்தனர்.அவர்கள் திணறலைக் கண்ட சாயிபாபா மீண்டும் கலைஞரிடம் ஏதோ சொன்னார்.ஹூஹும்!யாருக்கும் புரியவில்லை.பிறகு தேவேந்திரனின் இரு கைகளையும் கலைஞரிடம் ஒப்படைப்பதுபோல சாயிபாபா பாவனை செய்து அப்படியே தேவேந்திரனின் கண்களைப் பார்த்தார்.தேவேந்திரனின் கண்களில் முன்பு இருந்த ஆகர்ஷண சக்தி இப்போது இல்லை.உடனே சாயிபாபா இரு கரங்களையும் ஆசீர்வாதம் செய்வது போல உயர்த்தியபடி சிரித்துக் கொண்டே மீண்டும் வெளியேறினார்.வழியனுப்புவதற்காகத் துரைமுருகன் சாயிபாபாவைப் பின்தொடர்ந்தார்.

இப்போது கலைஞரின் முன் தேவேந்திரனும் நாரதரும் நின்றிருந்தனர்.சுற்றிலும் கலைஞரின் குடும்பத்தினர்கள் நின்றிருந்தார்கள்.கலைஞர் இருவரையும் பார்த்துச் சிரித்தவாறே,"உக்காருங்க"என்றார்.இருவரும் அவரின் வலது பக்கத்தில் உள்ள நீண்ட சோபாவில் அமர்ந்தார்கள்.

ஸ்டாலின் தொண்டையைச் செறுமிக் கொண்டே பேச ஆரம்பித்தார்.

"நீங்க இருவரும் சாயிபாபாவுக்கு வேண்டியவர்களோ?"

ஆமாம் என்பதற்கு அடையாளமாகத் தேவேந்திரன் தலையசைத்தான்.

"நான் அப்பவே நினெச்சேன்.சாயிபாபா கையெப் பிடிச்சிகிட்டு வந்தப்பவே நெனச்சேன் ரெண்டு பேரும் அவருக்கு ரொம்ப வேண்டியவங்கன்னு."

"ஆமாங்க"என்றான் தேவேந்திரன்.

"பரவாயில்லையே.தமிழ் பேசுறீங்களே.சரி.உங்க பேரு?"

"எம்பேரு இந்திரன்.ஆந்திராவிலெ தேவகிரின்ற ஊரு.எம்பேரோட ஊரு பேரையுந்சேத்து தேவேந்திரன்னு மாத்திகிட்டேன்.இவரு என் பிஏ.பேரு நாரதரு"

'என்னடா பேரு நாரதருன்னு சொல்றாரு.ஒருவேளை ரெட்டிகாருன்னு சொல்றமாதிரி ஏதோ ஒரு "ரு".இதப் போயி விளக்கம் கேட்டா தப்பா நெனப்பாங்களோ.சரி.மேலே பேசுவோம்'இவ்வாறாக ஸ்டாலினின் சிந்தனை ஓடியது.

"ரெம்ப(ரொம்ப இல்லை.ரெம்ப தான்)மகிழ்ச்சி.என்ன தொழில் பண்றீங்க?"

"தொழிலா?ஏதொ ஒரு பத்துப் பதினெஞ்சு நாடுகள்ளெ கோல்டு பிசினெஸ் பண்ணிகிட்ருக்கேன்.சாயிபாபாவுக்குத் தங்க மோதிரம்,செயின்,சின்னச் சின்னதா சாமி சிலைகள்,சிவலிங்கம்ன்னு சப்ளை செய்றது நாந்தான்.ஹோல்சேல் ஏஜண்ட்னு வச்சுக்குங்களேன்."

கலைஞர் வீட்டில் சாயிபாபா

"சரி.திமுகவில் எப்படிச் சேருவது?"என்று கேட்டான் தேவேந்திரன்.

"நேரே கோபாலபுரம் சென்று கலைஞரைச் சந்திப்போம்.மற்ற ஐடியாவைச் சமயம் போல் ஏற்படுத்திக் கொள்ளலாம். "என்றார் நாரதர்.

இருவரும் கோபாலபுரத்தை அடைந்தனர்.கலைஞரின் வீட்டுக்கு முன்பு பெருங்கூட்டம் கூடி இருந்தது.கூட்டத்தை முண்டி அடித்துக் கொண்டு இருவரும் முன்னேறினர்.வீட்டு வாசலை அடைந்த போது கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த இரண்டு காவலர்கள் வழியை மறித்தனர்.
அருகில் நின்றிருந்த ஒருவரிடம் நாரதர் கேட்டார்


."ஏன் இவ்வளவு கூட்டம்?"

"சாயிபாபா வந்திருக்காருப்பா.தெலுங்கு கங்கைக் கால்வாயெ ரிப்பேர் செய்ய ரூவா தர்றதுக்கு வந்திருக்காருப்பா.உள்ளே போயிகிறாரு.என்னத்தெத் தரப் போராரோ.யாரு கண்டா?"

உள்ளே கலைஞரின் மனைவி தயாளு அம்மாள் சாயிபாபாவின் கால்களில் சாஷ்டங்கமாக விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டிருந்தார்.சாயிபாபா தனது இடதுகைவிரல்களின் இடுக்கில் மறைத்து வைத்திருந்த குங்குமக் கட்டிகளில் ஒன்றை வலது கைக்கு மாற்றி அப்படியே வட்டமாக இரண்டு மூன்று முறை சுற்றினார்.குங்குமக் கட்டியை ஆள்காட்டி விரல் கட்டை விரல் ஆகியவற்றின் நுனியில் கொண்டுவந்து பிசைந்து கொண்டே நீட்டினார்.என்ன ஆச்சரியம்?அவர் வலது கையிலிருந்து பொல பொலவென குங்குமம் பிரசாதமாக விழுந்தது.தயாளு அம்மாள் அதைப் பயபக்தியுடன் இரு கைகளிலும் பெற்றுக் கொண்டு கலைஞரிடம் நீட்ட,கலைஞர்,அதை எடுத்துத் தயாளுவின் நெற்றியில் நடு வகிட்டில் பூசினார்.

அருகில் நின்றிருந்த துரைமுருகன் பிரமித்தார்.'இதென்னடா,வெறுங்கையை இப்படி அப்படி ஆட்டிக் கொண்டே குங்குமத்தை வரவழைத்துத் தர்ராரே!நாமும் காலில் விழுந்தா என்ன?நமக்கு என்ன தருவார்?'என்று நினைத்துக் கொண்டே அவரும் காலில் விழுந்து கும்பிட்டார்.எழுந்து கொண்டே இரண்டு கைகளையும் நீட்டினார்.சாயிபாபா துரைமுருகனின் தலையில் கையை வைத்து ஆசீர்வாதம் செய்தவாறே மீண்டும் வலது கையை இப்படி அப்படி என்று சுழற்றினார்.அவர் போட்டிருந்த ஜிப்பாவின் வலதுகைப் பக்கத்திலிருந்து ஒரு மோதிரம் சாயிபாபாவின் உள்ளங்கையில் விழுந்தது.அதை அப்படியே துரைமுருகனிடம் நீட்டினார்.துரைமுருகனும் பயபக்தியுடன் மோதிரத்தைப் பெற்றுக் கொண்டார்.துரைமுருகனுக்குச் சந்தோசந் தாங்கவில்லை.காலில் விழுந்ததிற்கே மோதிரம் உடனடி சப்ளையாக இருக்கிறதே!வாயெல்லாம் பல்லாகச் சிரித்துக்கொண்டே அருகில் நின்றிருந்த கலைஞரின் மகன் ஸ்டாலினிடம் காட்டினார்.பிறகு ஸ்டாலின் பக்கம் கையைக் காட்டிக் கொண்டே சாயிபாபாவைப் பார்த்து,"தளபதி அண்ணனையும் ஆசீர்வாதம் பண்ணுங்கோ"என்றார்.உடனே ஸ்டாலினும் குனிந்து சாயிபாபாவின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டார்.அடுத்த விநாடி அவருக்கும் ஒரு தங்க மோதிரம்!இவ்வளவு கூத்துகளையும் கலைஞர் தன் சோபாவில் அமர்ந்தவாறே பார்த்த்க் கொண்டிருந்தார்.

இப்போது துரைமுருகன் யோசிக்க ஆரம்பித்தார்.இத்துடன் விட்டு விட்டால் சாயிபாபா போனதும் இந்த மோதிரத்தைக் கலைஞர் கேட்டுவிட்டால் என்ன செய்வது?உடனே சாயிபாபாவைப் பார்த்து அப்படியே தலைவருக்கும் ஒரு மோதிரம் கொடுங்களேன்.வேணுன்னா அவர் சார்பாக நான் காலில் விழுகிறேன்"என்றாரே பார்க்கலாம்!ஆனால் சாயிபாபா வேண்டாம் என்பதற்கு அடையாளமாகக் கைகளை ஆட்டியவாறே என்னமோ சொன்னார்.யாருக்கும் புரியவில்லை.அப்போது சாயிபாபாவின் அருகில் நின்றிருந்த ஒரு அல்லக் கை,"கலைஞருக்கு எதற்கு மோதிரம்?அவர் தான் என் இதயத்தில் இருக்கிறாரே என்று பாபா கூறுகிறார்.ஜெய் சாயிராம்!!" என்றார்.கலைஞரும் அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்தார்.

தேவேந்திரனும் நாரதரும் தங்களின் ஞானக் கண்களால் அந்தக் கண்ராவிக் காட்சிகளைக் கண்டார்கள்.

நாரதரின் அசத்தல் ஐடியா

"இதுவரை எடுத்த இரண்டு முயற்சிகளும் தோல்வி.இனி என்னசெய்வது?வேறு எங்கே போய் யாரைப் பார்ப்பது?"என்றார் நாரதர்.

"இந்திரலோகத்தில் யாரையாவது தேர்ந்தெடுக்கலாம் என்றாலோ யாருக்குமே தகுதி இல்லை என்று ஒரே அடியாக முருகப் பெருமான் அறிவித்து விட்டார்"என்று அலுத்துக் கொண்டான் தேவேந்திரன்.

"நீயே தேவேந்திரனாகத் தொடர்ந்து இருந்து விடேன்.பிரச்சனையும் முடியும்,எனக்கு அலைச்சலும் மிச்சம்"என்றார் நாரதர்.

"அது மட்டும் முடியாது நாரதரே.சொன்ன சொல்லைத் திரும்பப்பெற முடியாது."

"சரி.வேறு யாரைப் பார்க்கலாம்?பேசாமல் பூலோகத்திற்குச் செல்வோமா?அங்கே தான் பலவகையான நரபுருஷர்கள் இருக்கிறார்களே."

பூலோகமா என்று யோசித்தான் தேவேந்திரன்.

"என்ன தயக்கம்?நீ தான் பலமுறை பூலோகத்தில் வாழ்ந்திருக்கிறாயே.முன்பொருதடவை........"
"

போதும் நாரதரே,போதும்.முன்பொருதடவை என்று சொல்லிக் கொண்டே பழைய கதைகளை ஞாபகப்படுத்தாதீர்கள்.இப்போது ஆக வேண்டியதைப் பேசுவோம்"

"சரி.தேவேந்திரா,நன்றாக யோசனை செய்து பார்த்ததில் பூலோகத்திற்குச் சென்று தேடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்றே தோன்றுகிறது.போவோமா பூலோகம்"ஹம்சத்வனி ராகத்தில் பாடிக் கொண்டே கேட்டார் நாரதர்.

"ஆகட்டும் நாரதரே.பூலோகத்தில் எங்கே சென்று தேடுவது?"

"எல்லாம் நம் நற்றமிழ் நாட்டிலெ தான்.வேறெங்கே! என்றார் நாரதர்.

"சரி.நாம் இதே தோற்றத்தில் செல்வதா இல்லை...."

"இதே தோற்றத்தில் சென்றால் ஏதோ மோசடிப் பேர்வழிகள் என்று போலீசார் நம்மைப் பிடித்து கேஸ் போட்டு விடுவார்கள்."

"என்னது,என்னென்னமோ சொல்கிறீரே,போலீசார்...ம்..கேஸ்..என்று.என்ன அது."

"அந்தச் சொற்கள் ஆங்கிலம் என்றொரு மொழிக்குரியவை.போலீஸ் என்றால் தமிழில் காவல் துறை என்று அர்த்தம்.கேஸ் என்றால் வழக்கு என்று அர்த்தம்."

"அப்படியே தமிழிலேயே சொல்லி இருக்கலாமே நாரதரே,ஏன் திடீரென்று வேற்று மொழியைக் கலந்து பேசுகிறீர்கள்?"

"தேவேந்திரா.நாம் போவது தமிழ்நாடு.அதுவும் அதன் தலைநகரத்திற்குச் செல்கிறோம்.இங்கே ஏறத்தாழ அனைவருமே ஆங்கிலச் சொற்கள் கலந்து தான் பேசுவார்கள்.அதுவும் பிராம்மணார்த்திகள் ஆங்கிலத்திலேயே அங்கங்கே தமிழைக் கலந்து பேசுவார்கள்.நாம் தான் எச்சரிக்கையாகப் புரிந்து கொள்ள வேண்டும்"

"ஏன்?தமிழில் அதற்குறிய சொற்களே கிடையாதா?தமிழை விட ஆங்கிலம் அவ்வளவு வளமை வாய்ந்த மொழியா?"

"அப்படியெல்லாம் இல்லை.அந்தந்த மாநிலங்களில் அவரவர் மொழிகளில் மட்டுமே பேசுகின்றனர்.கர்நாடகத்தில் கன்னடம்,ஆந்திராவில் தெலுங்கு,கேரளாவில் மலையாளம்,வங்காளத்தில் வங்காளம்,ஒரிசாவில் ஒரியா.குஜராத்தில் குஜராத்தி,சில மாநிலங்களில் பெரும்பான்மையோர் இந்தி என அவரவர்கள் மொழிகளில் பேசுகிறார்கள்.ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்தக் கலப்படமொழி.இங்கே அப்படிப் பேசினால் தான் மற்றவர்கள் மதிப்பார்கள்.இந்தக் கலப்பட மொழிக்குத் தமிங்கிலீஸ் என்று பெயராம்."

"யார் இப்படியெல்லாம் தமிழைக் கேவலப்படுத்தியது?"

"ஹூம்?எல்லாம் நம்மை வைத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் தான்."

நாரதர் விலாவாரியாகத் தேவேந்திரனிடம் விளக்கினார்.

தேவேந்திரனுக்கு ஒரே திகைப்பாக இருந்தது."சரி நாரதரே.நமது தெய்வீக சக்தியைப் பயன்படுத்தி அத்தகைய புலமை பெற்றவர்களாக நம்மை மாற்றிக் கொள்வோம்"என்றான்.

"நான் எக்காலத்திலோ மாற்றிக் கொண்டு விட்டேன்.அடிக்கடி பூலோகப் பயணம் செய்கின்றவனல்லவா?நீ மாற்றிக்கொள்"

"சரி,நாரதரே,மாற்றிக்கொண்டு விட்டேன்.நடையும் தோற்றமும் மாறிவிட்டன.ஆனால் உடை?எப்படியும் பூலோகத்தில் சிறிது காலம் இருக்க வேண்டும்.அதற்கேற்றாற்போல் உடையும் அமைய வேண்டும்."

'நாமோ எந்த இடத்திலும் வேலை பார்க்கப் போவதில்லை.வேலையும் தர மாட்டார்கள் என்பது வேறு விஷயம்.தமிழ்நாட்டின் தேசீய உடை வேட்டி சட்டை தான்.அதை அணிந்துகொண்டு போனால் ஒரு பய மதிக்க மாட்டான்.ஹும்..?என்ன செய்யலாம்?'நாரருக்கு மின்னல் வெட்டினாற்போல ஒரு யோசனை உதித்தது.உதட்டில் புன்னகையும் தோன்றியது.'சபாஷ் நாரதா' என்று மனதுக்குள் தன்னைத் தானே பாராட்டிக் கொண்டார்.

"சீக்கிரம் சொல்லுங்கள் நாரதரே,என்ன உடை உடுத்தலாம்?"

"வேறென்ன அரசியல்வாதியின் உடை தான்"என்றார் நாரதர்.

"என்ன அரசியல்வாதியின் உடையா?அரசியல் வாதிக்கென்று ஒரு தனிப்பட்ட உடையா?

"அதெல்லாம் ஒன்றுமில்லை தேவேந்திரா.தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க உடை தான்.என்ன ஒரு சில சின்னஞ்சிறிய மாற்றங்களுடன் உடுத்தினால் அரசியல்வாதியின் உடை ஆகிவிடும்.வேட்டி தான்.ஆனால் என்றும் எப்போதும் வெள்ளை வெளேர் என்று இருக்க வேண்டும்.நாம் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களோ அந்தக் கட்சியை அடையாளப்படுத்திக் காட்டும் வண்ணங்கள் வேட்டியின் கரையாக இருக்க வேண்டும்.மேல் சட்டை முழுக்கை சட்டையாக இருக்க வேண்டும்.அதுவும் வெள்ளை வெளேர் தான்.சட்டையின் இடது பக்கத்தில் ஒரு பை.அதற்குள் என்ன வைக்கிறோமோ வைக்க மாட்டோமோ கட்சித் தலைவரின் உருவம் கொண்ட ஒரு அட்டை இருக்க வேண்டும்.அல்லது அவரது வாரிசுவின் உருவம் கூட இருக்கலாம்.ஆனால் பைக்குள் வைக்கும் அட்டை உருவம் மற்றவர்கள் பார்வைக்கு லேசாகத் தெரிய வேண்டும்.தோளில் ஒரு துண்டு கூடப் போர்த்திக் கொள்ளலாம்.அல்லது ஒரு பக்கமாகப் போட்டுக் கொள்ளலாம்.அதிலும் கட்சிக் கரையும்,சின்னமும் தெரிய வேண்டும்.அவ்வளவு தான்"

"அற்புதமாகச் சொல்கிறீர்கள் நாரதரே.அப்படியே உடுத்திக் கொள்வோம்.சரிஇங்கெல்லாம் எத்தனை கட்சிகள் இருக்கும்?ஏறத்தாழ..சீச்சீ..தமிழில் மட்டும் பேசிக் கொண்டிருக்கிறேனே.ஒரு ஆவரேஜா நான்கைந்து கட்சிகள் இருக்குமா?"

"நாசமாப் போச்சு.நான்கைந்தா?சொச்சம்?"

"நாரதரே.இதென்ன மொழி?

"ஓ!நாசங்கிறது சமஸ்கிருதம்.அதை நம்ம மொழின்னு இங்கிருக்கிறவா சொல்றா.சொச்சங்கிறது கலோக்கியலா சொல்றது.மீதம் என்ற சொல்லைத் தனியாகப் பயன்படுத்தாமல் 'மிச்சம் மீதம் என்கிறோமில்லையா!அந்த மிச்சத்தின் விகுதி சொச்சமாகி விட்டது"

"உங்கள் இலக்கணம் தவறு நரதரே.சொச்சமென்பது மிச்சத்தின்..."

நாரதர் குறுக்கிட்டார்."தவறோ சரியோ.அரசியல்வாதியின் பேச்சில் அர்த்தம்,தப்பு,தவறு கண்டுபிடிக்கக் கூடாது."

"பேசுவதில்கூட இவ்வளவு வசதி இருக்கிறதா?"

"பேசுவதில் மட்டுமா.இவர்கள் வாழ்றதைப் பார்த்தால் பிரமித்து போவாய்"

"சரி.உடை ஓகே.ஆனால் எந்தக் கட்சி உடை உடுத்துவது?"

"அது நம் விருப்பம் தேவேந்திரா.ஒரு நாளைக்கு ஒரு கட்சிக்கு ஒரு உடை."

"அது கூடாது நாரதரே.அவ்வாறு செய்வது தினம் தினம் கட்சி மாறுவதாக ஆகி விடுமல்லவா?"

"இங்கே என்ன வாழ்கிறதாம்.பலருக்கு அது தான் பொழைப்பே.பார்த்துக் கொண்டே வா?

"சரி முதலில் எந்தக் கட்சி உறுப்பினர் ஆகப் போகிறோம்?"

"இப்போதைக்குத் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் தி.மு..வில் தான்."

"மகாபலிச் சக்கரவர்த்தியும் மறுத்தார்"

சர்ப்பலோகத்திலிருந்து புறப்பட்ட நாரதர் நேராக வைகுந்தத்திற்குச் சென்றார். சர்ப்பலோகத்தில் நகுஷ சர்ப்பத்தைச் சந்தித்ததையும் அது தேவேந்திரப் பதவியை ஏற்க மறுத்ததையும் பரந்தாமனிடம் எடுத்துரைத்தார்.

"ஏன் நாரதரே.பாதாள லோகம் வரை போய் வந்திருக்கிறீர்கள்.அப்படியே மகாபலியிடமும் தேவேந்திரப் பதவியை ஏற்கச் சம்மதமா என்று ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே"

"நாராயணா,நான் நகுஷனிடம் மட்டுமே கேட்டு வரச் சொல்லி எனக்கு உத்தரவு போட்டீர்கள்.நானாக மற்றவர்களிடம் எவ்வாறு கேட்பது?"

"சரி.தேவேந்திரப் பதவியை ஏற்கத் தகுதியான நபரைச் சந்திக்கவும்,அவரின் சம்மதம் பெறவும் இப்போது உனக்கு அனுமதி வழங்கினேன்.இனி ஒவ்வொரு முறையும் இங்கு வந்து என்னைக் கேட்க வேண்டாம்.இனிமேல் நீயும் தனியாகப் போகவும் வேண்டாம்.தேவேந்திரனையும் கூடவே அழைத்துச் செல்."

"உத்தரவு பரந்தாமா"

வைகுந்தத்திலிருந்து கிளம்பிய நாரதர் அடுத்ததாக இந்திரலோகத்திற்குச் சென்று தேவேந்திரனிடம் விபரம் தெரிவித்தார்.

"அது சரி,நாரதரே.பாதாளலோகத்திற்கு நானும் வர வேண்டுமா?நீங்கள் மட்டும் போய் வாருங்களேன்."என்றான் தேவேந்திரன்.

"ஏனப்பா உனக்கு அப்படி என்ன வேறு வேலை காத்திருக்கிறதா?

"அதெல்லாம் ஒன்றுமில்லை.மகாபலிச் சக்கரவர்த்தி பாதாள லோகத்திற்கு அனுப்பப்பட்டதற்குக் காரணமே நான் தானே!இப்போது நானே அவரைப் போய்ப் பார்ப்பது என்றால் என் கவுரவத்திற்குப் பங்கம் நேராதா?

இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒரு அரதப் பழசான சம்பவத்தை ஞாபகப் படுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது.அதாவது மகாபலிச் சக்கரவர்த்தி பூலோகத்தை மிகுந்த சீரும் சிறப்புமாக ஆண்டு கொண்டிருந்தான்.அவனது செல்வாக்கும்,புகழும் தேவலோகம் வரை சென்றது.அனைத்து லோகங்களிலும் மகாபலிச் சக்கரவர்த்தியின் புகழ் பரவியது.ஒரு அற்ப மானுடன் தன்னைக் காட்டிலும் புகழ் பெறுவதை காணச் சகிக்காத தேவேந்திரன் மகாபலியைச் சக்கரவர்த்திப் பதவியிலிருந்து நீக்குமாறு பரந்தாமனிடம் முறையிட்டான்.அவனது கோரிக்கையில் நியாயம் இருப்பதை அந்தப் பள்ளி கொண்ட பெருமாள் ஏற்றுக் கொண்டார்.இது என்ன நியாயமோ என்ன எழவோ என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா?ஒரு மனுஷன் நியாயமாகவும் புகழோடும் வாழ்ந்தாலே அந்த இந்திராதி தேவர்களுக்குப் பொறுக்காதே!எனவே அந்த விஸ்வரூபனாகிய பரந்தாமன் வாமன அவதாரம் எடுத்துக் கொண்டு மகாபலியிடம் வந்து மூன்றடி நிலம் கேட்டார்.
இப்போதெல்லாம் மகாபலி இருந்தால் என்ன செய்திருப்பார்?
வாமனனிடம்,'நீ போய் மூன்றடி நிலம் எதற்காக வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி ஒரு மனு எழுதி தாசில்தாரிடம் கொடுத்து பரிந்துரை பெற்று வா.அதற்குப் பின் மூன்றடி நிலம் தருகிறேன்'என்று சொல்லி இருப்பார்.தாசில்தாரிடம் பரிந்துரை பெறுவதற்கு முன் கிராம நிருவாக அலுவலரிடமும்,ரெவின்யூ இன்ஸ்பெக்டரிடமும் சென்று சிபாரிசு செய்யச் சொல்லி எழுதி வாங்க வேண்டும்.அது இந்த ஜன்மத்தில் நடக்காது.அதுக்குப் பதிலாக மூன்றடி நிலமும் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று மகாபலியிடம் சரண்டர் ஆகிவிட்டு வாமனன் திரும்பப் போயிருப்பான்.இது இந்தக் காலம்.

ஆனால் அந்தக் காலம் அப்படி இல்லையே!உடனே வாமனன் கேட்ட மூன்றடி நிலம் கொடுக்க மகாபலி தயாரானார்.அவரது குல குருவான சுக்கிராச்சாரியார் 'வந்திருப்பவன் பரந்தாமன்.ஏதோ மோசடி வேலை செய்வதற்காக வந்திருக்கிறான்.நீ மூன்றடி நிலம் கொடுக்காதே'என்று எச்சரிக்கை செய்தான்.அதற்கு மகாபலி 'என்னிடம் மூன்றடி நிலம் யாசகம் கேட்டு அந்தப் பரந்தாமனே வந்திருப்பது என்னை மேலும் பெருமையுடையவன் ஆக்குமே' என்று சொல்லிப் புளகாங்கிதம் அடைந்தான்.மூன்றடி நிலத்தைத் தாரை வார்த்துத் தருவதற்காகக் கையில் உள்ள நீர்ப் பாத்திரத்தை(கெண்டி என்று சொல்வார்களாம்!)எடுத்தபோது சுக்கிராச்சாரியார்,எப்படியாகிலும் அதைத் தடுக்க வேண்டும் என்று முனைந்து ஒரு குளவி ரூபத்தில் அந்த நீர்ப் பாத்திரத்தின் மூக்கில் அமர்ந்து கொண்டார்.பாத்திரத்தை எவ்வளவோ சாய்த்தும் நீர் வராததைக் கண்ணுற்ற பரந்தாமன் தனது ஞானக் கண்ணால் காரணத்தைத் தெரிந்து கொண்டு தன் கையில் வைத்திருக்கும் தர்ப்பைப் புல்லினால் பாத்திரத்தின் மூக்கில் குத்தோ குத்து என்று குத்தினார்.குளவி ரூபத்தில் இருந்த சுக்கிராச்சாரியாரின் ஒரு கண் அவுட் ஆனது.வலி பொறுக்கமாட்டாது குளவி அந்தப் பாத்திரத்தை விட்டுப் பறந்தது.அத்துடன் பரந்தாமனின் மானமும் காற்றில் பறந்தது.

நீரை வார்த்து மூன்றடி நிலம் கொடுத்தான் மகாபலி.உடனே வாமனன் விஸ்வரூபம் எடுத்தான்.ஒரு காலால் உலகை அளந்தான்.மறு காலால் ஆகாயம் அளந்தான்.ஈரடி அளந்தேன்.மூன்றாவது அடி நிலம் எங்கே என்று கேட்டான்.மகாபலிச் சக்கரவர்த்தி பரந்தாமனைப் பணிந்து "இதோ என் சிரசு.தங்கள் சீரடியை என் சிரசில் வைத்து மூன்றாம் அடியாக எடுத்துக் கொள்ளுங்கள்"என்றான்.அப்படியே மகாபலியின் தலையில் காலை வைத்த பரந்தாமன் "இனி நீ பாதாள லோகத்தில் சென்று அரசாள்வாயாக"என்று கூறிக்கொண்டே ஒரே அமுக்காக அமுக்கிவிட்டார்.அன்றைக்குப் பாதாள லோகத்திற்குப் போனவன் தான் இந்த மகாபலிச் சக்கரவர்த்தி.

இதைத் தான் தேவேந்திரன் நாரதரிடம் நினைவுபடுத்தினான்.நாரதர் அதை அலட்சியப்படுத்திவிட்டார்.'உனக்குக் காரியம் ஆகவேண்டுமானால் கவுரவத்தைப் பாராமல் வா என்னுடன்'என்றார்.தேவேந்திரனால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.நாரதருடன் புறப்பட்டான்.

இருவரும் பாதாளலோகம் வந்தடைந்தனர்.உடனே மகாபலிச் சக்கரவர்த்தியையும் பார்த்தனர்.

விபரம் முழுதும் தெரிந்துகொண்ட மகாபலிச் சக்கரவர்த்தி ஒரே வார்த்தையில் மறுத்துவிட்டார்.

"எனக்குக் கொடுத்துத் தான் பழக்கமே ஒழிய வாங்கிப் பழக்கமில்லை.பூலோகத்தில் எனக்கிருந்த பேரையும் புகழையும் வைத்துத் தானே தேவேந்திரன் என் மீது பொறாமை அடைந்தான்.அவ்வாறு வாழ்வாங்கு வாழ்ந்த எனக்கு இந்தத் தேவேந்திரப் பதவி தூசு.இன்றைக்கும் பூலோகத்தில் எனக்கு இருக்கும் மதிப்பையும் மரியாதையையும் போய்ப் பாருங்கள்,உங்களுக்கே தெரியும்.போய் வாருங்கள்.என்று சொல்லி விடை கொடுத்தான் மகாபலிச் சக்கரவர்த்தி.

கூசிக் குறுகிப் போனான் தேவேந்திரன்.

"தேவேந்திரப் பதவியும் வேண்டாம்.அங்கே கிடைக்கும் பொங்கச் சோறும் வேண்டாம்"

நகுஷ சர்ப்பத்தைக் காணாமல் திகைத்துப் போன நாரதர் பாதாள லோகத்திலிருந்து அதற்கு அருகாமையில் இருக்கும் சர்ப்ப லோகத்திற்குச் சென்றார்.நாரதரைக் கண்டதும் சர்ப்ப ராஜன் அவரை எதிர்கொண்டழைத்து உரிய மரியாதைகள் செய்து உள்ளே அழைத்துச் சென்றான்.நகுஷ சர்ப்பத்தைப் பற்றிச் சர்ப்ப ராஜனிடம் விசாரித்தார்.நகுஷ சர்ப்பம் அங்கே இருப்பதாக சர்ப்பராஜன் ஒப்புக்கொண்டான்.

சர்ப்ப ராஜனின் இந்தப் பதிலைக் கேட்டு நாரதர் திகைப்படைந்தார்.இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

"சர்ப்ப ராஜனே.என்னை அவனிடம் அழைத்துச் செல்லமுடியுமா?"

"அவ்வாறே ஆகட்டும்.ஆனால் அங்கு சென்றாலும் உடனே பார்க்க முடியாது.'

"ஏன்"

"அவர் எங்கள் சர்ப்பலோகத்தின் இனப் பெருக்கத்திற்குப் பேருதவி செய்து கொண்டுள்ளார்.எனவே உடனடியாகப் பார்க்க முடியாது.இருந்தாலும் அங்கே சென்று காத்திருப்போம்."

நாரதர் இந்தப் பதிலைக் கேட்டுத் திகைத்தார்.சிறிது நேரம் அவருக்கு ஒன்றும் புரியவில்லை.'என்னவானாலும் ஆகட்டும்,முதலில் நகுஷ சர்ப்பம் இங்கிருப்பதைத் தெரிந்து கொண்டாயிற்று.அங்கே போய்த்தான் பார்ப்போமே'என்று எண்ணியவராய் சர்ப்ப ராஜனைப் பின் தொடர்ந்தார்.

சில யோசனை தூரம் சென்றதும் நகுஷ சர்ப்பம் இருக்கும் இடத்தை அடைந்தனர்.அங்கே கண்ட காட்சி நாரதரைத் திகைக்க வைத்தது.

எங்கு பார்த்தாலும் பலவகையான சர்ப்பங்கள் அங்கே ஊர்ந்துகொண்டும் நெளிந்துகொண்டும் இருந்தன.சின்னஞ்சிறு குட்டி சர்ப்பங்கள் முதல் பெரிய வகை சர்ப்பங்கள் வரை பலநிலைகளில் உலவிக்கொண்டிருந்தன.அங்கிருந்த விசாலமான பூங்காவில் இரண்டு பெரிய சர்ப்பங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவாறே சரச சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.

"அதோ பாருங்கள் நாரதரே.நகுஷ சர்ப்பத்தின் விளையாட்டை.சல்லாபத்தில் அவரை மிஞ்ச வேறு சர்ப்பமே இல்லை.இவரால் தான் இன்றைக்கு சர்ப்பலோகமே வெகுவாகப் பல்கிப் பெருகி இருக்கிறது."என்றான் சர்ப்ப ராஜன்.

வெகுநேரம் கழித்து இரண்டு சர்ப்பங்களும் ஒரு வழியாகப் பிரிந்தன.அவைகளில் ஒன்றான நகுஷ சர்ப்பம் நாரதரைப் பார்த்ததும்,அங்கே வரிசையில் காத்திருந்த மற்ற சர்ப்பங்களிடம் ஏதோ சொல்லிவிட்டு நாரதரை நோக்கி வந்தது.

"வாருங்கள் நாரதரே,தங்கள் வரவு நல்வரவாகுக"என்று முகமன் கூறியவாறே நாரதரை வரவேற்றது.

"என்ன நகுஷச் சக்கரவர்த்தி......"என்ற நாரதரை இடைமறித்த சர்ப்பம்,"இல்லை இல்லை.அது பழைய பெயர்.இப்போது என்னை நகுஷ சர்ப்பம் என்றே அழையுங்கள்."என்றது.

"சரி சரி.நகுஷ சர்ப்பமே.உங்களுக்குப் பாதாள லோகத்தில் வசிக்குமாறு தானே சாபம்?இங்கே எப்படி வந்தீர்கள்?"

"நான் பாதாள லோகத்தில் தான் இருந்தேன்.இங்கே சர்ப்ப லோகத்தில் சர்ப்பங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து கிட்டத் தட்ட அழிந்துவிடும் நிலைக்கு வந்து விட்டதாம்.எனவே இது தொடர்பாக சர்ப்பராஜன் பிரம்மனிடம் முறையிட்டார்.பிரம்மனும் அகத்திய ரிஷியிடம் முறையிட்டார்.இருவரும் சேர்ந்து வந்து என்னிடம் முறையிட்டனர்.யார் எது கேட்டாலும் உடனே நிறைவேற்றிவைப்பதில் எனக்கு இணை யாருமில்லை அல்லவா?அதனால் தானே என்னைத் தேவேந்திரனாகவே தேர்ந்தெடுத்தீர்கள்?எனவே பிரம்மனும் அகத்திய ரிஷியும் கேட்டுக் கொண்டதன்பேரில் சர்ப்பங்களின் இனப் பெருக்கக் காலங்களில் மட்டும் நான் இங்கு வந்து இனப் பெருக்கம் செய்யும் பணியை மேற்கொண்டிருக்கிறேன்.மற்ற காலங்களில் மீண்டும் பாதாள லோகம் சென்று விடுவேன்."

நாரதர் வியந்தார்.நகுஷனுக்கு இப்படி ஒரு வாழ்வா?இனப் பெருக்கத்தின்போது சர்ப்பங்கள் ஒன்றை ஒன்று பலவாறாகப் பின்னிப் பிணைந்து பல நாட்கள் தொடர்ந்து இணை சேர்ந்திருக்குமே! என்று எண்ணியவாறே திரும்பிப் பார்த்தார்.அங்கே பூங்காவில் ஏராளமான சர்ப்பங்கள் நகுஷ சர்ப்பத்தின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தன.

"சரி நாரதரே,என்னைப் பார்க்க வந்ததில் ஏதேனும் விசேஷம் உண்டா?எனக்கு நிறைய வேலை இருக்கிறது."

"நகுஷ சர்ப்பமே.உன் சாபம் விமோசனம் அடையும் நாள் நெருங்கி விட்டது. நீ மறுபடியும் தேவேந்திரனாகும் பொன்னான வாய்ப்பு வந்திருக்கிறது.உடனே என்னுடன் புறப்படு."

"என்ன சொல்கிறீர்கள் நாரதரே?"

நாரதர் நடந்தவைகளை விளக்கிச் சொன்னார்.

"வேண்டாம் நாரதரே.எனக்கு அந்தப் பதவி வேண்டாம்.இங்கேயே மிகவும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.நானுண்டு,என் இனப் பெருக்கப் பணி உண்டு என்று மும்முரமாகக் கடமையே கண்ணாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.அங்கே வந்தால் நான் என்ன தான் முயன்றாலும் இந்திராணி கிடைக்க மாட்டாள்.வேறு வழி இல்லாமல் அவசரத்தில் நானும் ஏதாவது செய்யப் போக,மீண்டும் யாராவது சாபம் கொடுப்பார்கள்.இங்கே பாருங்கள்.நேரம் காலமென்றில்லாமல் இதேவேலையாக இருக்கிறேன்.அதுவும் ஒரு இணை இல்லை.பலப் பல இணைகள்.உங்களுக்குத் தான் ஏற்கனவே இது போன்ற அனுபவம் இருக்கிறதே.முன்னொரு சமயத்தில் கோபிகாஸ்திரீகள் ரூபங்களில் இருந்த கிருஷ்ணனுடன் போதும் போதும் என்ற அளவுக்குக் கணக்கு வழக்கில்லாமல் சரச சல்லாபம் புரிந்தவராயிற்றே.இந்த சுகத்தைப் பற்றி உங்களுக்கு நான் வேறு விளக்க வேண்டுமா?"

நாரதருக்கு என்னமோபோல் ஆகி விட்டது.இருந்தாலும் சமாளித்துக் கொண்டார்.

"அதெல்லாம் பழைய கதை நகுஷ சர்ப்பமே.இப்பொழுது நான் சொல்வதைக் கேள்.தயவு செய்து நீ வந்து....."

"மன்னியுங்கள் நாரதரே.எது கேட்டாலும் நிறைவேற்றி வைப்பவன் நான் என்பதைக் கூடத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.என்னால் வர முடியாது.அந்தத் தேவேந்திர வேலையும் வேண்டாம்.அங்கே கிடைக்கும் பொங்கச் சோறும் வேண்டாம்."

மேற்கொண்டு நாரதரால் எதுவும் பேச முடியவில்லை.நகுஷ சர்ப்பத்திடமும் சர்ப்ப ராஜனிடமும் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

நகுஷனைத் தேடி நாரதர் தூது

"சரி.என்னமோ அசரீரியாகச் சொன்னாயே,இப்போது சொல்.என்ன சொன்னாய்?"என்று கேட்டார் முருகப் பெருமான்.

"புதிய தேவேந்திரனைத் தேர்ந்தெடுப்பதற்காக எங்கும் சென்று அலைய வேண்டாம்.இங்கேயே உங்களுக்குள்ளேயே ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்றேன்.தேவேந்திரனாகும் தகுதி கொண்டவன் யாரும் வேறு எந்த உலகத்திலும் இல்லை."

"எங்களுக்கு அறிவுரை சொல்லும் தகுதி உனக்கு இல்லை.முதலில் இந்த இடத்தை விட்டுப் போய் விடு."

"நான் போகத்தான் போகிறேன்.எல்லாம் உங்கள் நன்மைக்குச் சொன்னேன்.விருப்பமிருந்தால் கேளுங்கள்.இல்லாவிட்டால் உங்கள் அனைவரின் தலைவிதி,"

"எங்களுக்கு நன்மை செய்ய அந்த ஆதிசக்தி இருக்கிறாள்.நீ வந்த வேலை முடிந்ததல்லவா?போ இங்கிருந்து."

சாத்தான் மறைந்து விட்டான்.

தேவ சபை அப்படியே உறைந்திருந்தது.

இப்போது நாரதர் தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்.
"எம்பிரானே,எனை ஈன்றத் தம்பிரானே,சத்குருவே,தேவர் குலவழித் தோன்றல்களே,எல்லோரும் சுய நினைவுக்கு வாருங்கள்.சாத்தான் வந்து போனது,புயல் அடித்து மழை ஓய்ந்தாற்போல் இருக்கிறது.அதைப் பற்றிப் பேச இது சரியான நேரமல்ல.நம் பிரச்சனையைத் தொடர்ந்து பேசுவோம்."

இப்போது பரந்தாமன் பேச ஆரம்பித்தார்."அது சரி நாரதா.நீ தான் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டாற்போல் ஓரிடத்தில் நிற்காமல் பல லோகங்களையும் சுற்றுபவனாயிற்றே,நீ சொல் பார்க்கலாம்,இவ்வளவு லோகங்களில் சகல சாஸ்திரங்களையும் படித்து அதன் படியே வாழ்ந்து கொண்டிருக்கும் யாரையாவது நீ பார்த்திருக்கிறாயா?"

"இல்லை பிரபோ.எனக்குத் தெரிந்து இல்லை...ஆனால்..."

"என்ன ஆனால்?"

"முன்பொருமுறை தேவேந்திரன் பதவி தற்காலிகமாகக் காலியாக இருந்தபோது நகுஷன் என்ற சக்கரவர்த்தியைப் பூலோகத்திலிருந்து தானே தேர்ந்தெடுத்தோம்?"

"ஆமாம்.அதற்கென்ன இப்போது?"

"இல்லை...வேறு யாரும் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் அந்த....

"அவனைத்தான் அகத்திய ரிஷி சபித்துப் பாதாள லோகத்தில் சர்ப்பமாக வாழும்படித் தள்ளி விட்டாரே!"

"ஆமாம்.நான் வேண்டுமானால் போய் அவனைக் கூட்டிவந்து......."

"அவன் தான் சர்ப்பமாக இருப்பானே நாரதா?"

"ஆமாம்.அகத்திய ரிஷியிடம் நாம் எல்லோரும் கேட்டுக் கொண்டால் அவனை மீண்டும் உரு மாற்றி விடலாமே!"

"அதுவும் நல்ல யோசனை தான் நாரதரே.என்ன சொல்கிறீர்கள் ஈசனே"

"சொல்வதற்கு என்ன இருக்கிறது பரந்தாமா.சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாருங்கள்.சபை கூடி வெகு நேரமாகிறது."

"சரி நாரதா.நீ உடனே கிளம்பு. முதலில் அகத்திய ரிஷியிடம் செல்.நகுஷனுக்கு அவர் அளித்த சாபத்திற்கு விமோசனம் என்ன என்பதை அவரிடமே கேள்.பிறகு நகுஷனிடம் சென்று விபரம் தெரிவித்து அவனையே அழைத்து வா."

"உத்தரவு பரந்தாமா."

"சரி.இனிமேல் புதிய தேவேந்திரனைத் தேர்ந்தெடுக்கும் பணியை மும்மூர்த்திகள் மட்டுமே பார்த்துக் கொள்வார்கள்.இதற்கான அதிகாரத்தை இப்பொதுக்குழு வழங்குகிறது.இதற்கு அடையாளமாக எல்லோரும் கரவொலி எழுப்புங்கள்."

அனைத்துத் தேவர்களும் கை தட்டினார்கள்.

"இத்துடன் இப்பொதுக்குழுவின் கூட்டம் முடிவடைகிறது.சபை கலையலாம்."என்றான் தேவேந்திரன்.

அடுத்த நொடியில் நாரதர் பாதாள லோகத்தில் இருந்தார்.அங்கிருக்கும் சகல ஜீவராசிகளிடமும் நகுஷசர்ப்பத்தைப் பற்றி விசாரித்தார்.நகுஷசர்ப்பம் அங்கில்லை.

முருகப் பெருமானுக்கும் சாத்தானுக்கும் இடையே காரசார விவாதம்

சாத்தானைப் பார்த்ததும் கூடியிருந்த தேவர்களுக்குக் கிலி பிடித்தது.மும்மூர்த்திகள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.அவர்களும் திகைத்துப் போயிருந்தார்கள்.

பொதுக்குழுவை வழிகாட்டி நடத்திக் கொண்டிருந்த முருகப் பெருமான் முதலில் சமாளித்துக் கொண்டு சாத்தானுடன் பேச ஆரம்பித்தார்.

"தேவர்கள் சபையில் உனக்கென்ன வேலை?யார் உன்னைக் கூப்பிட்டது?"

"என் வேலை இல்லாமல் ஈரேழு பதினான்கு லோகங்களும் இல்லை முருகப் பெருமானே.நான் எங்கும் இருப்பவன்.எங்கும் நிறைந்திருப்பவன்.என்னை யாரும் கூப்பிடத் தேவை இல்லை."

"யார் உனக்கு அந்த அதிகாரம் கொடுத்தது?"

"யாரும் கொடுக்கவில்லை.நானாக எடுத்துக் கொண்டேன்."

"விளக்கமாகச் சொல்."

"முருகப் பெருமானே.இரு தினங்களுக்கு முன்பு ஈசனுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு புதிர்க் கணக்குப் போட்டீர்களே!அதற்கு விநாயகப் பெருமான் விடை சொன்னாரே!ஞாபகம் இருக்கிறதா?"

முருகப் பெருமான் திகைத்தார்.'இவனுக்கு அந்நிகழ்ச்சி எவ்வாறு தெரிந்தது?'

சாத்தான் தொடர்ந்தான்."எனக்கு எவ்வாறு தெரிந்தது என்று தானே சந்தேகம்?நான் தான் சொன்னேனே.நானும் எங்கும் நிறைந்திருப்பவன் என்று.நானில்லாமல் எங்கும் எதுவும் இயங்காது."

"சரி.சொல்ல வந்ததைச் சொல்."

"விநாயகப் பெருமான் சொன்னது,ஈரேழு பதினான்கு லோகங்களையும் அதில் உள்ள சகல ஜீவராசிகளையும் படைத்து,காத்து,பின் அழித்து வரும் மும்மூர்த்திகளே முதன்மையானவர்கள்.அதற்குமுன்னரே இந்த மும்மூர்த்திகளையும் அவர்களின் பாரிகளையும்(மனைவிகள் என்று இக்காலத்தில் சொல்கிறோம்)படைத்ததே ஆதிபராசக்தி தான்.இவ்வுலகில் அனைத்திற்கும் மூலமாயும் முழுமுதலாயும் இருப்பவளே அந்த ஆதி பராசக்தி தான்"என்று சொன்னாரல்லவா?அந்த ஆதி சக்தி தோன்றியபோதே நானும் தோன்றி விட்டேன்."

"நீ பொய் உரைக்கிறாய்.நீயாக எப்படித் தோன்றிருக்க முடியும்?"

"இந்தக் கேள்வி உங்களுக்கே வேடிக்கையாக இல்லை?"

"இல்லை.உன்னை யாராவது தான் படைத்திருக்க முடியும்."

"அப்படியா.சரி.உங்களை யார் படைத்தது?"

"அங்கே அமர்ந்திருக்கிறாரே.அவரின் நெற்றிக்கண்ணிலிருந்து உருவானவன் நான்."

"அந்த ஈசனைப் படைத்தது யார்?"

"ஆதி சக்தி"

"அந்த ஆதி சக்தியைப் படைத்தது யார்?

"அது ..வந்து..."

"என்ன அது வந்து......சொல்லுங்கள்.அந்த ஆதிசக்தியைப் படைத்தது யார் என்று கேட்டேன்."

"ஆதி சக்தி இயற்கையாகத் தோன்றினவர்.அவர் சுயம்பு."

"ஏன்.நானும் இயற்கையாகத் தோன்றியிருக்க முடியாதா.நானும் சுயம்பாகத் தோன்றி இருக்க முடியாதா? சரி.இங்கேயே கேளுங்கள்.மும்மூர்த்திகளுட்பட முப்பெருந்தேவியர்களும் அனைத்துத் தேவர்களும் இங்கே கூடியிருக்கிறார்கள்.இவர்களையே கேளுங்கள்.யார் என்னைப் படைத்தது என்று."

முருகப் பெருமான் திரும்பிப்பார்த்தார்.மும்மூர்த்திகளின் முகங்களில் ஈயாடவில்லை.முப்பெருந்தேவியர்களின் முகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

மீண்டும் சாத்தான் பேசினான்.

"சரி.இங்கிருக்கும் யாராலும் பதில் கூற முடியவில்லையென்றால் அந்த ஆதி சக்தியையே கூப்பிடுங்கள்.அவளையே கேட்போம்."

முருகப் பெருமானால் ஒன்றும் பேச இயலவில்லை.

'சரி.நானே கூப்பிடுகிறேன்."என்று கூறிய சாத்தான் மிக மிக அமைதியாகக் கூப்பிட்டான்.

"ஆதிசக்தி.உடனே இங்கே வா."

என்ன ஆச்சரியம்?சாத்தானின் எதிரே ஆதி சக்தி பிரத்தட்சண்யமானாள்.

சாத்தானைத் தவிர அங்கு கூடியிருந்த அனைவருமே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர்.

சாத்தான் கேட்டான்."ஆதி சக்தி.முருகப் பெருமானின் சந்தேகத்தை நிவர்த்தி செய்."

ஆதி சக்தி கேட்டாள்."என்ன முருகா?"

முருகப் பெருமான் கேட்டார்.இந்தச் சாத்தானை யார் படைத்தது?"

"யாரும் படைக்கவில்லை முருகா.நான் தோன்றிய போதே சாத்தானும் தோன்றினான்.நல்லவைகளுக்கு எவ்வாறு நானும் என் வழித்தோன்றல்களும் பொறுப்பாகிறோமோ,அது போல் கெட்டவைகளுக்கு இந்தச் சாத்தான் பொறுப்பாகிறான்.எப்படி என்னை யாராலும் அழிக்க முடியாதோ அதேபோல இந்தச் சாத்தானையும் யாராலும் அழிக்க முடியாது."

ஆதிசக்தி மறைந்தாள்.

முருகப் பெருமான் முதன்முதலாகத் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

சைத்தானின் வருகை

கேள்வி கேட்ட புதிய தேவர் இடை மறித்தார்."கச முசா சமாச்சாரமெல்லாம் நமது தேவர் குலத்திற்கே இலக்கணமல்லவா?அதெல்லாம் இருக்காது.வேறு ஏதாவதாக இருக்கும்.நான் கேட்கிறேனே."

மூத்த தேவர் அவரை விடவில்லை.

"பேசாமல் உட்கார மாட்டாய்?பொதுக்குழுவுக்கு வந்தோமா,வயிறாற சோம பானம் குடித்தோமா,அப்சரஸ்களின் நடனம் கண்டு களித்தோமா,நமது மாளிகைக்குத் திரும்பினோமா என்று இருக்கவேண்டும்.சும்மா உட்கார்ந்து நடப்பதை வேடிக்கை பார். அதுவரைக்கும் தான் நம் போன்ற சாதாரண உறுப்பினர்களுக்கு அனுமதி.மீறினால் கடும் தண்டனை கிடைக்கும்."என்றார்.

அதற்கு மேல் புதிய தேவரால் ஒன்றும் பேச முடியவில்லை.உட்கார்ந்து விட்டான்.

பிறகு முக்கியப் பொறுப்பில் உள்ள இதர தேவர்களில் சிலர் தேவேந்திரனின் கோரிக்கையைப் பலமாக ஆதரித்துப் பேசினார்கள்.அவர்களில் ஒருவர் புதிய தேவேந்திரனாகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறதல்லவா?

இறுதியாக மும்மூர்த்திகளும் சம்மதம் தெரிவித்தனர்.அடுத்ததாக வேறு யாரைத் தேவேந்திரனாகத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழுந்தது.

அப்போது முருகப் பெருமான் குறுக்கிட்டார்.

"எனக்குத் தெரிந்தவரையில் தேவேந்திரன் பதவிக்குத் தகுதியான தேவர் யாரும் தேவ லோகத்தில் இல்லை.எனவே புதிய தேவேந்திரனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை இப்போதுள்ள தேவேந்திரனுக்கே கொடுத்து விடலாம்"என்றார்.

முருகப் பெருமானே சொல்லிவிட்டதால் வேறு யாரும் குறுக்கிட்டுப் பேசவில்லை.

இப்போது தேவேந்திரன் முழி முழி என்று முழித்தான்.வேறு யாரைத் தேர்ந்தெடுப்பது?இங்கே உள்ள யாருக்குமே அந்தத் தகுதி இல்லை என்று முருகப் பெருமானே சொன்ன பிறகு அதை மீறி ஒரு நபரின் பெயரைச் சொல்லத் தைரியம் வரவில்லை.முருகப் பெருமானின் வார்த்தையை மறுத்துப் பேசவும் தேவேந்திரனுக்குத் தைரியம் வரவில்லை.

"என்ன தேவேந்திரா?நீ என்ன சொல்கிறாய்/"என்றார் பரந்தாமன்.

தேவேந்திரன் அவசர அவசரமாக எழுந்து,"சனி,சனி"என்று உளறி விட்டான்.

வந்ததே கோபம் சனி பகவானுக்கு.

விருட்டென்று எழுந்தார்,

"என்ன?என்னைப் போய் உனக்குப் பதிலாக இந்தத் தேவேந்திரப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கிறாயா?என்ன திமிர் உனக்கு.
நான் உண்டு என் வேலை உண்டு என்றிருந்தேன்.இனி உன்னை விடப் போவதில்லையடா"என்று சொல்லிக் கொண்டே தேவேந்திரனை நோக்கி விரைந்தார்.

"ஐயையோ!சனி பகவானே.உங்களைச் சொல்வேனா.முருகப் பெருமானின் கேள்விக்குச் சரி சரி என்பதற்குப் பதிலாக உங்கள்திருநாமத்தைத் தவறுதலாகக் கூறி விட்டேன்.அடியேன் பிழையைப் பொறுத்தருள வேண்டும்"என்று கூறிக்கொண்டே
சனிபகவானின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான் தேவேந்திரன்.

"ஹூம்.உன்னைப் பற்றி ஏற்கனவே கேள்விப் பட்டேன்.எடுத்ததற்கெல்லாம் நீ காலில் விழுகிறாய் என்று.எப்படியும் என் பெயரை நீ உரைத்தாய். அதுவும் ஒருமுறை அல்ல இருமுறை உரைத்தாய்.அதற்கான தண்டனையை நீ அனுபவித்தே ஆக வேண்டும்"
இவ்வாறு சனி பகவான் கூறியதும் ஈசனும் பரந்தாமனும் குறுக்கிட்டனர்.

"நீங்கள் சொன்னது மிகவும் சரியானது சனி பகவானே.ஆனால் என்ன இருந்தாலும் இவன் நம்மில் ஒருவன்.எனவே நீங்கள் அவசரப்பட்டு சாபம் எதுவும் கொடுத்து விடாதீர்கள்.பொறுங்கள்"என்றனர்.

தேவேந்திரனால் ஒன்றும் கூற முடியவில்லை.பேசாமல் எழுந்து நின்றான்.

இப்போது மீண்டும் முருகப் பெருமான் பேச ஆரம்பித்தார்.

"சரி.புதிய தேவேந்திரனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உனக்கே கொடுப்பதென்று முடிவாகியுள்ளது. அதே நேரத்தில் தேவ லோகத்தில் யாருக்கும் தேவேந்திரனாகும் தகுதி இல்லாததால் நீயே மற்ற உலகங்களுக்குச் சென்று தேடித் தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுத்து வா"

"அப்படியானால் இங்கே என் பணியை யார் பார்த்துக் கொள்வார்கள்?என்று கேட்டான் தேவேந்திரன்.

"பெரீய்ய்..ய பணி.காலையில் எழுந்ததிலிருந்து குடுவை குடுவையாக சோமபானம் அருந்துவது,ரம்பா,திலோத்திமா வகையறாக்களின் நடனங்களைக் கண்டு களிப்பது,மாலையானதும் அந்தப்புரத்திற்குச் சென்று தூங்குவது,இதைத்தவிர வேறு என்ன வேலை?எல்லாம் புதிய தேவேந்திரன் வந்தபின் பார்த்துக் கொள்ளலாம்.நீ உடனே கிளம்பு"என்றார் முருகப் பெருமான்.

"முருகப் பெருமானே.நீங்கள் சொல்வதை சிரமேற்கொண்டு நிறைவேற்றுகிறேன்.ஆனால்........"

"என்ன ஆனால்.......?"

"நான் ஒருவனாகச் சென்று தேடுவது மிகுந்த சிரமமாக இருக்கும் எனவே என்னுடன் நாரதரையும் துணைக்கு அனுப்பி வைத்தால் நலமாக இருக்கும்.துணைக்குத் துணையும் ஆகும்.அவ்வப்போது தகுந்த ஆலோசனைகளையும் கேட்டுக் கொள்ளவும் முடியும்."

"அதுவும் சரி தான் நாரதரே.நீங்களும் தேவேந்திரனுடன் சென்று புதிய தேவேந்திரன் பதவிக்குப் பொருத்தமான ஒருவரைத் தேர்ந்தெடுத்து வாருங்கள்."

"உத்தரவு முருகப் பெருமானே."என்றார் நாரதர்.

திடீரென்று ஒரு குரல் ஒலித்தது.

"வேண்டாம் முருகப் பெருமானே.நீங்கள் தேடும் நபர் எந்த உலகிலும் இல்லை.இங்கேயே ஒருவரைப் பார்த்துக்கொள்ளுங்கள்."

"யாரது?"

பதிலில்லை.

மீண்டும் முருகப்பெருமான் கேட்டார்."யாரது?"

ஒரு மயான அமைதி நிலவியது.

முருகப் பெருமான் தனது சக்திவேலைத் தூக்கினார்.

ஈசன் தனது நெற்றிக்கண்ணைத் திறப்பதற்கு ஆயத்தப்படுத்திக்கொண்டார்.
பரந்தாமன் தனது சுதர்சனச் சக்கரத்தை வலது ஆட்காட்டி விரலில் மாட்டிக்கொண்டார்.

இவ்வாறாக எல்லோரும் தயாராகிக் கொண்டிருக்கும் போதே அனைவரின் முன்னிலையில் தோன்றினான் சைத்தான்.

பொதுக்குழு கூடியது

கையிலையில் முருகப் பெருமானைச் சந்தித்துப் பிரம்ம லோகத்தில் நடந்தவைகளை எடுத்துரைத்தார் நாரதர்.அனைவற்றையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்ட முருகப் பெருமான் நாரதரிடம் கேட்டார்.


"ஏன் நாரதரே,இந்தத் தேவேந்திரனுடைய நடத்தையே சரியில்லையே.எங்கே சென்றாலும் தன் அவசரப் புத்தியைக் காட்டிவிடுகிறான்.பெரியோர்கள் முன்னிலையில் அதுவும் மும்மூர்த்திகள் முன்னிலையிலேயே இப்படி நடந்து கொள்கிறானே.இப்போது இவனுக்குப் பதிலாக இன்னொருவனைத் தேவேந்திரனாகத் தேர்ந்தெடுத்து விட்டால் இவன் பாடு இன்னும் பொறுப்பில்லாமல் போய் விடுமே.சராசரித் தேவர்கள் மத்தியில் இவன் சேர்ந்து கொண்டாலும்....ம்...?வேறு வழி இல்லை.அதற்கு முன் இவனுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.சரி நீங்கள் சென்று வாருங்கள்.நான் யோசித்து நாளை பொதுக்குழுவுக்கு வருகிறேன்.அங்கு பார்த்துக் கொள்வோம்."என்றார் முருகப் பெருமான்.


நாரதரும் வந்த காரியம் நிறைவேறியது என்ற மனமகிழ்வுடன் புறப்பட்டார்.


மறுநாள்....


இந்திரலோகம் அமளி துமளிப்பட்டது.இருக்காதா பின்னே!தேவலோகத்தில் வசிக்கும் அனைத்துத் தேவர்களடங்கிய பொதுக்குழு அல்லவா கூடுகிறது?ஒருவர் விடாமல் வந்தனர் .மும்மூர்த்திகளின் முன்னிலையில் இந்த அவசர மற்றும் சிறப்புப் பொதுக்குழு கூடுகிறது என்றால் சும்மாவா?


இந்திர சபை நிரம்பி வழிந்தது.வழிந்தவர்களையெல்லாம் வெளியே பெரிய மைதானத்தில் அமர வைக்கப்பட்டனர்.பொதுக்குழுக் கூட்ட நடவடிக்கைகளை அனைவரும் கண்டு களிப்பதற்கு ஏதுவாக நூற்றைம்பதுக்கு நூறு பாத அளவு மாயக் கண்ணாடிகள் நாலாபுறமும் வைக்கப்பட்டிருந்தன. (தேவர்களின் பாத அளவு ரொம்பப் பெரிசு.நம்மூரில் ஒருவரின் பாதம் முக்கால் அடி என்று வைத்துக் கொள்ளுங்கள்.அப்படியென்றால் மாயக் கண்ணாடி அளவைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.)பத்து தேவர்களுக்கு ஒரு குடுவை என்ற எண்ணிக்கையில் பெரிய வாய் அகன்ற குடுவைகளில் சோம பானம் நிரப்பி வைக்கப் பட்டிருந்தது.அதைப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஊற்றிக்கொடுப்பதற்காக இந்திரலோகத்தின் ஏராளமான கிங்கரர்கள் அருகிலேயே நின்றிருந்தனர்.இரண்டு முறைக்கு மேல் சோமபானம் அருந்தி முடித்ததும் பொதுக்குழு உறுப்பினர்களைச் சந்தோசப்படுத்துவதற்காக ஆடற்கலையில் சிறப்புப் பயிற்சி பெற்ற ப்ஸ்ள் தயாராகத் தொலைவில் நின்றிருந்தனர்.என்னதான் அமிர்தமே அருந்தினாலும் சோமபானம் மாதிரி இல்லையாம்.அதற்காகவே பொதுக்குழு கூடும்போதெல்லாம் இந்த ஏற்பாடு.


மும்மூர்த்திகள் உட்பட அனைவரும் வந்து தங்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்.முப்பெரும் தேவியர்கள் வழக்கம்போல் உப்பரிக்கைகளில் இந்திராணியுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டனர்.



முதலில் தேவேந்திரன் எழுந்து விநாயகப் பெருமானைப் பணிவுடன் வணங்கி மரியாதை செய்து பொதுக்குழு எவ்வித விக்கினமும் இன்றி சிறப்பாக நடைபெறுவதற்கு ஆக்ஞை பெற்றான்.பின் மும்மூர்த்திகளையும் பணிவுடன் வணங்கி முதல் மரியாதை செய்தான்.பிறகு தேவகுருவான பிரகஸ்பதியிடம் ஆசிகள் பெற்றான்.அதன்பின் முருகப் பெருமான்,நந்தியெம்பெருமான்,வீரபத்திரர்,நாரதர்,நவக் கிரகங்கள் சார்பில் வந்திருந்த சனி பகவான் ஆகியோர்களைப் பணிவுடன் வணங்கி மரியாதைசெய்தான்.அதன்பின் வந்திருக்கும்ஏனையத் தேவர்கள் அனைவரையும் வணங்கினான்.


தேவேந்திரனின் இந்த சம்ப்ரதாயமான மரியாதைகளைக் கண்டு மும்மூர்த்திகள் உட்பட அனைவருமே மகிழ்ந்தனர்.


பிறகு தேவேந்திரன் பேச ஆரம்பித்தான்.


"இன்றைக்குக் கூட்டப்பட்டிருக்கும் இந்த அவசர மற்றும் சிறப்புப் பொதுக்குழுவிற்கு வருகை தந்திருக்கும் அனைத்துத் தேவர்களையும் பணிவோடும் அன்போடும் இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்.நான் தேவேந்திரனாகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டு ஏறத்தாழ ஒரு யுகமாகிறது.என் ஆட்சிக் காலத்தில் எல்லா லோகங்களிலும் தேவர்களின் பணிகள் எவ்விதக் குறையும் இல்லாமல் நடந்து வருகின்றன.தேவலோகத்தில் வாழும் அனைத்துத் தேவர்களும் ஏற்கனவே அனுபவித்துவரும் வசதிகளை மேம்படுத்தி இருக்கிறேன்."(கை தட்டல்)


"குறிப்பாகவும் சிறப்பாகவும் சொல்லப் போனால் சிவ லோகத்தில் உள்ள சிவனடியார்கள்,பூத கணங்கள் ஆகியோர்கள் குளிப்பதற்கான வசதிகள் குறைவு என்று ஒருமுறை ஈசன் அபிப்பிராயப்பட்டார்.மறுகணமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட நவீன குளியல் அறைகளைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தேன்.வெய்யில் காலங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு ஈசனின் தலையில் எந்நாளும் அமர்ந்திருக்கும் கங்கை நதியிடம் பேச்சுவார்த்தை நடத்தித் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்திருக்கிறேன்."(கை தட்டல்)


"அதேபோல் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் எம்பெருமான் பரந்தாமன் பாற்கடலில் தினமும் நிரப்பப்படும் பாலில் நிறையத் தண்ணீர் கலந்திருப்பதால் அவ்வளவு வெண்மையாகத் தெரியவில்லை என்றும்,மாலைக்குள் புளித்துப் போய்த் துர்நாற்றம் வீசுவதாகவும்,மேலும் பாற்கடல் தினமும் சரிவரச் சுத்தம் செய்யப்படுவதில்லை என்றும் சொன்னார்.புகார் தெரிவித்த அன்றே உடனடியாக அதிரடியாக நடவடிக்கை எடுத்தேன்.எப்படி?முன்பெல்லாம் வெளியிலிருந்து பாலைக் கொண்டுவந்து பாற்கடலை நிரப்புவார்கள்.இப்போதெல்லாம் போய்ப் பாருங்கள்.தினமும் இரவு பரந்தாமன் பள்ளியறைக்குப் புறப்பாடானதும் பாற்கடல் சுத்தம் செய்யப்படுகிறது.பிறகு நன்னீரால் நன்றாகக் கழுவப்படுகிறது.பின்னர் உடனுக்குடன் உலர்த்தப்படுகிறது.விடியும் வரை உலர்ந்ததும் விடியற்காலையில்காமதேனுவால் நேரடியாக முதல் பாலாகப் பீச்சப்பட்டு நிரப்பப்படுகிறது.நறுமணத்திற்காக ஏலம்,ஜாதிக்காய்,கற்பூரம் போன்ற வகையறாக்களும் சேர்க்கப்படுகின்றன."(நீண்ட கை தட்டல்)


"இப்படி எவ்வளவோ காரியங்கள் செய்திருப்பினும் நான் இந்த தேவேந்திரப் பதிவியில் ஒட்டிக் கொள்ள விரும்பவில்லை.காரணம் எனது அந்தரங்கக் குடும்ப வாழ்க்கை ரொம்பவே பாதிக்கிறது.எனவே நான் இந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்.எனக்குப் பதிலாக வேறொரு தேவரைத் தேவேந்திரனாகத் தேர்ந்தெடுக்கும்படி உங்கள் அனைவரையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.அனைத்துத் தேவர்களின் நாமம் வாழ்க!"


பொதுக்குழு உறுப்பினர்களனைவரும் ஏகோபித்துக் கை தட்டினர்.அவர்களுக்குத் தான் வேறு ஒன்றும் தெரியாதே!


அடுத்ததாகத் தேவர்களின் குலகுருவான பிரகஸ்பதி எழுந்து நின்று தேவேந்திரனின் கோரிக்கை கேட்டுத் தான் சொல்லொணாத் துயர் உற்றதாகவும் இனிமேல் அவரைப் பிரிந்து புது தேவேந்திரன் தேர்ந்தெடுக்கப்படும்வரை வாடப் போகும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டார்.


அப்போது புதிதாக உறுப்பினரான ஒரு தேவர் எழுந்து பேச ஆரம்பித்தார்.ஆனால் அருகில் இருந்த மூத்த தேவர்கள் புதிய தேவரின் கையைப் பிடித்து இழுத்து,'இந்த விஷயம் எல்லாம் மும்மூர்த்திகள்,அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்(இதில் தேவியர்களும் அடங்கும்) நாரதர் போன்றவர்கள் ஆகியோரால் மட்டுமே பேசி முடிவு செய்யப்படவேண்டியது.அநாவசியமாக நீ தலையிட்டால் அவர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்றுகூறி உட்கார வைத்தனர்.அப்பவும் விடவில்லை அந்தப் புதுத் தேவர்.


"அதென்ன அந்தரங்க வாழ்க்கை பாதிக்கப் படுகிறது என்றாரே?"


"ஏதாவது கசமுசா சமாச்சாரமாக இருக்கும்."

சரஸ்வதி கையில் எழுத்தாணி

தேவேந்திரனும் நாரதரும் அந்தப் பிரம்ம சபையின் எல்லா இடங்களிலும் தேடி விட்டார்கள்.ஹூஹும்.எழுத்தாணி கிடைக்கவே இல்லை.இருவரும் களைத்து விட்டனர்.இடுப்பைப் பிடித்தபடியே எழுந்த தேவேந்திரனும் நாரதரும் முனங்கிக் கொண்டே அருகில் இருந்த இருக்கைகளில் அமர்ந்தனர்.

தேவேந்திரன் கேட்டான்."ஏன் பிரம்ம தேவரே.எழுத்தாணி கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?"

பிரம்ம தேவன் திகைத்தார்.

"இதற்குத் தான் எதற்கும் உபரியாக இன்னொரு எழுத்தாணி வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்றது.அப்படி ஏதும் உபரியாக இல்லையா?

"என்ன தேவேந்திரா?உன்னிடமுள்ள ஐராவதத்திற்கு (வெள்ளை யானை) உபரியாக இன்னொரு ஐராவதம் இருக்கிறதா?வசிஷ்ட மகாமுனியிடமுள்ள காமதேனுவுக்கு உபரியாக இன்னொரு காமதேனு இருக்கிறதா?பரந்தாமனிடம் உள்ள சங்கு,சக்கரம்,ஈசனிடம் உள்ள திரிசூலம்,முருகப் பெருமானிடம் உள்ள சக்திவேல் ஆகியவைகளுக்கெல்லாம் உபரியாக இன்னொன்று இருக்கிறதா?இந்த எழுத்தாணியை என்னவென்று நினைத்தாய்?உன்னைப் போல் அதற்கும் உயிர் இருக்கிறது தேவேந்திரா.நீ பிறந்தபோதே உன் தலையில் உன் விதியை எழுதியதே இந்த எழுத்தாணி தான்"

தேவேந்திரனுக்கு அப்பாடா என்றிருந்தது."ஓஹோ!அப்படியானால் எங்காவது ஓரமாகப் படுத்துக்கொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருக்குமோ"என்று தனது அடுத்த சந்தேகத்தை வெளியிட்டான்.

இதற்குமேல் நாரதரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை."இந்தாப் பாரு தேவேந்திரா.உன் லொள்ளுவெல்லாம் அந்த இந்திர லோகத்தில் வைத்துக்கொள்.பிரம்ம தேவனிடம் ஏடாகூடமாகப் பேசி வாங்கிக் கட்டிக் கொள்ளாதே!வந்தோமா.நம்ம வேலையைப் பாத்தோமா போனோமான்னு இருக்க வேண்டும்.இல்லையெனில் நான் கிளம்புகிறேன்.நீயாச்சு.உன் வேலையாச்சு."

உடனே தேவேந்திரன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.

"இப்படியே ஏதாவது முறைகேடாகப் பேசுவது,மீறிப் போய் விட்டால் உடனே மன்னிப்புக் கேட்பது,காலில் விழுவதுங்கிறதே உனக்கு வேலையாகி விட்டது."என்று சலித்துக் கொண்டார் நாரதர்.

அப்போது சரஸ்வதி தேவி தலையைக் கோதிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.கையில் என்னமோ மின்னியது.

"அது என்ன கையில்"என்று பிரம்ம தேவன் கேட்டார்.

"நீங்க எப்பவும் கையில் வைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாணி தான் நாதா.இன்றைக்குத் தலைக்குக் குளித்தேன் நாதா.சிக்கெடுப்பதற்காக நான் வைத்திருக்கும் சிக்கெடுக்கியைக் காணவில்லை.எப்போதும் இரண்டு மூன்று சிக்கெடுக்கிகளை வைத்திருப்பேன்.(தேவேந்திரனின் முகத்தில்உபரி யோசனை மின்னி மறைந்தது.)இன்றைக்குப் பார்த்து ஒன்றைக் கூடக் காணோம்.சரி,உங்கள் எழுத்தாணியைத் தான் இன்றைக்கு மட்டும் உபயோகித்துக் கொள்வோமே என்று நான் தான் எடுத்தேன் நாதா.அதற்கென்ன இப்போது?"

"ஓ!அப்படியா!!சரி சரி.சிக்கு எடுத்தாயிற்றா?அதை இப்படிக் கொடு."என்று சொல்லிக் கொண்டே தன் கையில் வாங்கிக் கொண்டார் பிரம்ம தேவன்.

தேவேந்திரனுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது.'என்னடா,கொஞ்ச நேரத்திற்கு முன் இந்த எழுத்தாணிக்குப் பிரம்ம தேவன் கொடுத்த முக்கியத்துவம் என்ன,இப்போது சரஸ்வதி தேவியிடம் இருப்பதைக் கண்ட பின் கொஞ்சமும் அலட்டிக்காமல் புன்முறுவலுடன் கேட்கும் அதிசயந்தானென்ன!ஓ...ஹொ.(ஓஹோ இல்லை.ஓ...ஹொ தான்)சரி தான்.வீட்டுக்கு வீடு வாசற்படி.ஹூம்'

எழுத்தாணிப் பிரச்சனை இப்படியாகப் பொசுக்கென்று போனது.

"தேவேந்திரா,நாரதா.இருவரும் வந்த நோக்கம்?"பிரம்ம தேவன் வினவினார்.

தேவேந்திரனும் வந்த விசயத்தை எடுத்துரைத்தான்.

"சரி.ஈசன் சொன்னபடியே நாளை உனது சபையில் தேவர்களின் பொதுக்குழுவைக் கூட்டு.மும்மூர்த்திகள் மூவரும் வருகிறோம்.ஒரு நல்ல தீர்வு காணலாம்" என்றார் பிரம்ம தேவன்.

தேவேந்திரனும் நாரதரும் பிரம்மாதியத் தம்பதியினரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள்.

"சரி நாரதரே.நான் இந்திரலோகம் செல்கிறேன்.தாங்களும் வந்து சிரமப் பரிகாரம் செய்துகொண்டு செல்லலாமே?"

"இல்லை தேவேந்திரா.எனக்கு முக்கியமான பணி இருக்கிறது.விடை கொடு.

"என்ன முக்கியமான பணி?"

"அதை உன்னிடம் சொல்லக் கூடாது.எனக்கும் பரந்தாமனுக்கும் மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய ரகசியம்.நான் சென்று வருகிறேன்."

அதற்குமேல் தேவேந்திரனால் மறுத்துப் பேச முடியவில்லை."மிகவும் நன்றி நாரதரே.இவ்வளவு தூரம் என்னுடன் வந்து உதவி செய்ததற்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்.போய் வாருங்கள்.நாளை காலை பொதுக்குழுவுக்கு வந்து விடுங்கள்."என்று கூறி நாரதரை வழியனுப்பி வைத்தான்.

'கடமைப் பட்டிருக்கிறாயா. நாளை பார்க்கிறேன்.என்னை இந்த அளவுக்கு இன்றைக்கெல்லாம் அலைய வைத்ததற்கு உன்னை என்ன செய்கிறேன் பார்.நாளை பொதுக்குழுவில் வைத்துக் கொள்கிறேன்.'

அங்கிருந்து கிளம்பிய நாரதர் நேராக முருகப் பெருமானிடம் சென்றார்.

தலைவிதியை எழுதும் பிரம்ம தேவனின் எழுத்தாணி காணவில்லை

கைலாயத்திலிருந்து பிரம்ம லோகம் கூப்பிடு தூரம் தான்.......ஆக உடனே பிரம்ம லோகம் அடைந்து விட்டார்கள்.இங்கே வாயிற்காப்போன் போன்ற கட்டுக் காவல்களைக் காணோம்.அப்படியே உள்ளே சென்று பிரம்ம சபைக்கே போய் விட்டார்கள். பிரம்மன் வழக்கமாக அமர்ந்திருக்கும் இடத்தில்
காணோம்.சரசுவதியும்கூடக் காணோம்.

"பிரம்ம தேவா,பிரம்ம தேவா.."என்று கொஞ்சம் சத்தம் போட்டே கூப்பிட்டான் தேவேந்திரன்.

அப்படியெல்லாம் கூவி அழைக்கக் கூடாது என்று நாரதர் எச்சரிக்கை செய்ததைத் தேவேந்திரன் பொருட்படுத்தவில்லை.மீண்டும்
மீண்டும் கூவி அழைத்தான்.

பிரம்ம தேவர் கடைசியாக உள்ள ஒரு பெரிய்ய்ய..இருக்கைக்குப் பின்னால் இருந்து வெளியே வந்தார்.

"வா தேவேந்திரா.வாருங்கள் நாரதரே.இருவருக்கும் வணக்கம்.வந்து இங்கே
அமருங்கள்."

இருவரும் பிரம்ம தேவனுக்கு முகமன் கூறிவிட்டு அமர்ந்தனர்.

தேவேந்திரன் கேட்டான்."என்ன பிரம்ம தேவரே.ரொம்ப நேரம் கூப்பிட்டும் வராமல் அந்தப் பெரிய இருக்கையின் பின்னால் இருந்து வந்தீர்களே.என்ன விசயம்?"

"அது..வந்து தேவேந்திரா...சகல ஜீவராசிகளையும் படைக்கும்போது எனக்கு உதவியாக இருக்கும் எழுத்தாணியைத் தவறுதலாகக் கீழே போட்டு
விட்டேன்.எங்கே உருண்டு சென்றதோ காணவில்லை.அதைத் தான் தேடிக்
கொண்டிருந்தேன்."

இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டியது
அவசியமாகிறது.தன்னால் படைக்கப்படும் (குட்டி போடும் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!) ஒவ்வொரு ஜீவராசியும் கருவிலிருந்து வெளியே
வந்தவுடன் அதன் நெற்றியில் தன்னிடம் இருக்கும் எழுத்தாணியை
வைப்பார்.எழுத்தாணியானது அந்த உயிரின் தலைவிதியை அதுவாகவே ஆடோமாடிக்காக எழுதிவிடும்.அந்த எழுத்துக்களைப் பிரம்மதேவனே நினைத்தாலும் மாற்ற முடியாது.இது அந்தப் பிரம்மதேவனின் தலைவிதி
என்றும் வைத்துக் கொள்ளலாம்.அவ்வாறு எழுதப்படுவதை வைத்துத் தான் அந்த உயிரின் வாழ்க்கை அமையும்.

முட்டை போட்டுக் குஞ்சு பொறிக்கும் உயிர்களுக்குத் தலைவிதி எழுதுவது
வித்தியாசப்படும் என்றறிக.அத்தகைய உயிர்களுக்கு முட்டைக்குள்ளேயே தலைவிதி எழுதப்படும்.அதன்படி ஒரு முட்டை ஆம்லெட் ஆவதோ

ஆஃப் பாயில் ஆவதோ அல்லது வளர்ந்து மீண்டும் முட்டை போடுவதோ அந்தத் தலைவிதியைப் பொருத்துத் தான் அமையும்.

ஒவ்வொரு அரிசியின் மீதும் அது யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவரது பெயர் எழுதப்பட்டிருக்கும் என்று குரானில்
சொல்லப்பட்டிருக்கிறதாகச் சொல்லப்படுவதுபோல என்றும் அறிக.


இப்போது மீண்டும் பிரம்மலோகத்திற்குப் போவோம்.

நீங்களும் கொஞ்சம் தேடுவதில் உதவுங்களேன்."என்று பிரம்ம தேவன் கேட்டுக் கொண்டதன்பேரில் தேவேந்திரனும் நாரதரும் சேர்ந்து தேட ஆரம்பித்தார்கள்.நாரதர் தான் எப்போதும் தோளில் மாட்டி இருக்கும் தும்புராவைக் கழற்றி ஒரு இருக்கையில் வைத்தார்.தேவேந்திரனும் தனது கிரீடத்தை எடுத்து ஒரு இருக்கையில் வைத்தான்.இருவரும் இண்டு இடுக்கெல்லாம் தேடினார்கள்.பிரம்ம தேவனால் அவர்கள் தேடுவதைப் போலத் தேட முடியவில்லை.காரணம் அவருக்கு மூன்று தலைகள்.இருக்கைகளினுள்ளே நுழைய முடியாமல் முன் தலைக்கு இருபுறமும் உள்ள மற்ற இரு தலைகளும் தடுத்தன.ஏற்கனவே ஒரு தடவை அவசரப்பட்டுத் தேட முயன்றபோது இரு தலைகளும் ஒரு இருக்கையின் கால்களுக்குள் மாட்டிக்கொண்டன.அப்போது ஏற்பட்ட பெருங்காயம் இன்னும் ஆறவில்லை.இப்போது மீண்டும்....

பிரம்ம தேவன் எழுந்து நின்றுவிட்டார்,

வெகு நேரமாகியும் எழுத்தாணி கிடைக்கவே இல்லை.

முருகப் பெருமான் விடை அருளிய படலம்

தேவேந்திரனின் இப்பதிலைக் கேட்டதும் சபையே கலகலப்பானது.அங்கு கூடி இருந்த சிவனடியார்களும் பூத கணங்களும் பக பகவென்று சிரிக்க ஆரம்பித்தனர்.முருகப் பெருமானுக்குக் கோபம் கோபமாக வந்தது.இருந்தாலும் சபையின் கண்ணியம் கருதி அடக்கிக் கொண்டார்.

இப்போது ஈசன் பேசலானார்.

"முருகா.அனைவரின் விடைகளையும் கேட்டாயிற்றல்லவா? இவைகளில் எது சரியான விடை என்று நீயே விளக்கிச் சொல் பார்க்கலாம்."

"தந்தையே.நீங்கள், அம்மை உட்பட அனைவரது விடைகளுமே தவறு.சரியான விடை ஒன்றும் ஒன்றும் இரண்டு தான்."

அனைவரும் ஒருசேரக் குறுக்கிட்டனர்.

"பொறுங்கள்.பொறுங்கள்.விரிவாக விளக்குகிறேன்."

"முருகா.எங்கள் பொறுமையைச் சோதிக்காதே.நீ சொன்ன விடை ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது எங்களுக்கும் தெரியும்.நீ என்னமோ மிகப் பெரிய தத்துவம் பொதிந்திருக்கிறது என்றெல்லாம் சொன்னாயே என்று மண்டையைக் குழப்பிக் கொண்டு நாள் பூராவும் யோசித்து யோசித்து புதிதாக இன்னொரு விடையைக் கண்டுபிடித்தோம்.நீ என்னடாவென்றால் இப்படிப் போட்டு உடைக்கிறாயே"என்று உமையன்னை சலிப்புடன் கேட்டாள்.

"ஆமாம் அன்னையே.உங்கள் அனைவரையும் சோதிக்கவே இப்படிப் பீடிகை போட்டுக் கேட்டேன்.தத்துவம் பொதிந்திருக்கிறது என்றும்,ஒருவர் ஒரு விடை தான் சொல்ல வேண்டுமென்றெல்லாம் நிபந்தனை போட்டது எல்லாம் நீங்கள் எந்த அளவுக்குப் பகுத்தறிவை உபயோகிக்கிறீர்கள் என்று பார்க்கத்தான்.ஆனால் அனைவருமே குழம்பிப் போய் விட்டீர்கள்.நீங்கள் சொன்ன ஒவ்வொரு விடையும் தவறு என்று சொல்லிவிடலாம்.அது உங்களுக்கே தெரியும்.ஆனால் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற விடையை யாராலும் மறுக்க இயலாதே!"

யாரும் பதில் பேசவில்லை.

முருகப் பெருமான் தொடர்ந்தார்."ஆனால் இந்தத் தேவேந்திரன் இருக்கிறாரே.இவர் சொன்ன விடையைத் தான் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.நாரதராவது எனக்குத் தெரியவில்லை என்று ஒதுங்கிக் கொண்டார்.நீயும் அவ்வாறே செய்திருக்கலாம்"

தேவேந்திரனுக்குச் சுருக்கென்றது.

"பாதிவிடை தெரிந்ததாம்.ஒன்றும் ஒன்றும் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாமாம்.ஆனால் நிச்சயமாக இரண்டு கிடையாதாம்."

"தேவேந்திரா!இந்தப் பதிலைச் சொல்ல உன்னை என்ன செய்வதென்றே தெரியவில்லை.நீ தேவேந்திரப் பதவிக்கே தகுதி இல்லாதவன் என்பதைக் காட்டி விட்டாய்.இப்போதே உன்னை அப் பதவியிலிருந்து நீக்குகிறேன் பார்."என்று சொல்லிக் கொண்டே முருகப் பெருமான் தன் கையிலிருக்கும் வேலைத் தூக்கினார்.

அப்படியே நின்ற இடத்திலிருந்து நெடுஞ்சாண்கிடையாக முருகப் பெருமானின் காலடியில் விழுந்தான் தேவேந்திரன். "முருகப் பெருமானே!பொறுத்தருள வேண்டும்.நான் கையிலைக்கு வந்த காரணமே எனக்கு இந்தத் தேவேந்திரப் பதவி வேண்டாம் என்று முறையிடத்தான்.என் விருப்பம் இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நினைக்கவில்லை.இன்றே இப்பொழுதே என்னை தேவேந்திரப் பதவியிலிருந்து நீக்கிவிடுங்கள்.ஹூஹும்.இப்போதே நீக்கி விடுங்கள்.இதோ..உங்கள் கால்களைப் பிடித்துக் கொண்டேன்.என்னை நீக்காவிட்டால் நான் உங்கள் கால்களை விடப் போவதில்லை."என்று கதறி அழ ஆரம்பித்தான்.

முருகப் பெருமானுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.'என்னடா இது,புலி வாலைப் பிடித்த கதையாக இருக்கிறதே.இவனை என்ன தான் செய்யலாம்'என்று யோசித்துக் கொண்டே கூறினார்.

"என்ன இது தேவேந்திரா.எழுந்திரு.எடுத்ததற்கெல்லாம் இப்படி படீர் படீர் என்று இடம் காலம் பார்க்காமல் காலில் விழுகிறாயே.நன்றாகவா இருக்கிறது?"

"நன்றாகத்தான் இருக்கிறது முருகப் பெருமானே.என்னை இப்பதவியிலிருந்து விடுவித்தேன் என்று சொல்லுங்கள்.அல்லது விடுவிக்க ஏற்பாடு செய்கிறேன் என்றாவது சொல்லுங்கள்."

"சரி.எழுந்திரு."

தேவேந்திரன் எழுந்தான்.அனைவரையும் பணிவுடன் வணங்கிக் கொண்டே தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தான்.

சபை பழைய நிலைக்குத் திரும்பியது.

எல்லோரும் ஆசுவாசப்படுத்திக் கொண்டபிறகு தேவேந்திரன் ஆற அமரத் தன் கோரிக்கையைச் சொன்னான்.திருமாலின் சிபாரிசின்படியே இங்கு வந்திருப்பதாகவும் சொன்னான்.

தீவிரமான ஆலோசனைக்குப் பிறகு தேவேந்திரனின் கோரிக்கையை ஈசன் உட்பட அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

பிறகு ஈசன் தேவேந்திரனிடம்,"நீ இன்றே பிரம்ம லோகம் சென்று பிரம்மனிடம் முறையிட்டு வா. நாளை உன் இந்திர சபையில் அனைத்துத் தேவர்களின் பொதுக்குழு கூட்ட ஏற்பாடு செய்.பொதுக்குழுவில் பேசி வேறு ஒரு தேவேந்திரனைத் தேர்ந்தெடுப்போம்."என்றார்.

உடனே தேவேந்திரனும் நாரதரும் பிரம்ம லோகம் புறப்பட்டார்கள்.

ஒரு கேள்விக்குப் பல பதில்கள்.எது சரி?


கேள்வியைக் கேட்டதும் தேவேந்திரனுக்குத் தலை சுற்றியது.சரியான வம்பில் மாட்டிக் கொண்டோமோ என்று கலங்கினான்.'முருகப் பெருமான் கூறியவாறே கேள்வி சாதாரணமாகத்தான் தெரிகிறது என்றாலும் அதில் ஒரு மிகப் பெரிய தத்துவம் பொதிந்திருக்கிறது என்றும் கூறி விட்டாரே.அப்பொ...விடையும் சாதாரண விடையாக இருக்க முடியாது.இதை முதலில் மனதில் நன்றாக இருத்திக் கொள்ள வேண்டும்.சரி.தத்துவார்த்தமான விடை என்னவாக இருக்கும்?ரொம்பத் தான் யோசிக்க வேண்டி இருக்குமோ.அம்மையும் அப்பனும் நாள் பூராவும் கிறுக்குப் பிடித்தாற் போல் தூணிலும் சுவற்றிலும் எழுதி எழுதிப் பார்த்துக் கொண்டிருந்தது இதற்குத் தானோ.ஓஹோ.சரி தான். அப்ப அவர்கள் இருவரும்ஏறக் குறைய விடையைக் கண்டு பிடித்திருப்பார்கள்.எனக்குக் கிடைத்துள்ள சிறு கால அளவுக்குள் விடை காண வேண்டும்'.இவ்வாறு மும்முரமாக யோசனையில் இறங்கினான் தேவேந்திரன்.


நாரதரும் கிட்டத்தட்ட இதே நிலைக்குத் தான் ஆளாகி இருந்தார் என்பது அவர் முகம் சுளித்து யோசனை செய்யும் பாவத்திலேயே தெரிந்தது.


"சரி.முதலில் யார் விடை கூறுகிறீர்கள்?"என்று முருகப் பெருமான் அனைவரையும் பார்த்துக் கேட்டார்.


ஒவ்வொருவரும் அடுத்தவர்முகத்தைப் பார்த்துக் கொண்டனர்.யாரும் முன் வரவில்லை.


"சரி.நானே ஒவ்வொருவராகக் கேட்க ஆரம்பிக்கிறேன்.எந்த வில்லங்கமும் இன்றி எனது பணி நிறைவேற முழு முதற் கடவுளான விக்னேஸ்வரப் பெருமானை வணங்குகிறேன்.அவரே முதலில் விடை கூற வேண்டும் என்று அழைக்கிறேன்."


இவ்வாறு முருகப் பெருமான் கூறியதும் விநாயகப் பெருமான் இருக்கையிலிருந்து எழுந்து பேச ஆரம்பித்தார்.


"முதலில் அம்மைக்கும் அப்பனுக்கும் என் பணிவான வணக்கங்கள்.தம்பி முருகன் கேட்ட கேள்வியானது என்னை மிகவும் சிந்திக்க வைத்து விட்டது.எல்லா வேலைகளையும் ஒத்திவைத்துவிட்டு இதற்கெனவே தனி அறையில் உட்கார்ந்து யோசித்து ஒரு வழியாக விடை கண்டுபிடித்து விட்டேன்."


" சரி சொல்லுங்கள்."

"ஒன்றும் ஒன்றும் ஒன்று தான்."


"எவ்வாறு?"


"ஈரேழு பதினான்கு லோகங்களையும் அதில் உள்ள சகல ஜீவராசிகளையும் படைத்து,காத்து,பின் அழித்து வரும் மும்மூர்த்திகளே முதன்மையானவர்கள்.அதற்குமுன்னரே இந்த மும்மூர்த்திகளையும் அவர்களின் பாரிகளையும்(மனைவிகள் என்று இக்காலத்தில் சொல்கிறோம்)படைத்ததே ஆதிபராசக்தி தான்.இவ்வுலகில் அனைத்திற்கும் மூலமாயும் முழுமுதலாயும் இருப்பவளே அந்த ஆதி பராசக்தி தான்.எனவே ஒன்றிலிருந்து தோன்றிய மற்றொன்றோ அல்லது வேறு எதுவுமோ மீண்டும் அந்த ஒன்றிற்கே சென்றடையும் என்று வேதம் சொல்கிறது.எனவே ஒன்றும் ஒன்றும் ஒன்று தான்."


இவ்வாறு சொல்லிவிட்டு விநாயகப் பெருமான் தமது இருக்கையில் அமர்ந்தார்.பிறகு முருகப் பெருமானிடம் கேட்டார்.


"என்ன முருகா.என் விடை சரிதானே?"


"கொஞ்சம் பொறுங்கள் அண்ணா.மிக அழகாக உங்கள் விடையைச் சொல்லி விட்டீர்கள்.மற்றவர்களும் என்ன தான் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பதை அறிந்த பின்பு தான் இறுதியாக முடிவு சொல்ல முடியும்."என்றார் முருகப் பெருமான்.


"சரி.அடுத்ததாக மும்மூர்த்திகளில் ஒருவரும் வேதமே வடிவானவரும் என்னைப் பெற்றவருமான ஈசனே!உங்கள் விடை என்ன?"


"குழந்தாய்.நான் பார்த்துப் பிறந்த மகன் நீ..என்னிடமே..."


ஈசன் சொல்லி முடிப்பதற்குள் முருகப் பெருமான் குறுக்கிட்டார்.


"மன்னிக்க வேண்டும் ஐயனே.அந்தக் கதையெல்லாம் மிகப் பழைய சமாச்சாரம்.இப்போது விடை சொல்ல வேண்டிய நேரம்.நீங்கள் இப்போது விடை சொல்லாவிட்டால் உங்களுக்குத் தெரியவில்லை என்று பதிவு செய்துகொண்டுவிடுவேன்.பிறகு உங்கள் இஷ்டம்."


"பொறு மகனே.பொறு.இதோ என் விடையைச் சொல்லி விடுகிறேன்."
ஈசன் விடையைச் சொல்ல ஆரம்பித்தார்.


"ஒன்றும் ஒன்றும்.....ம்........பல கோடி...பல கோடி."


"எப்படி ஐயனே."


"அப்படிக் கேள்.ஆண் என்ற ஓருயிரும் பெண் என்ற ஓருயிரும் சேர்ந்து மற்றொரு உயிர் அல்லது உயிர்களாகிப் பின் அவைகளும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பல உயிர்களாகின்றன.இவ்வாறே உயிர்கள் பல கோடியாகப் பல்கிப் பெருகுகின்றன.இந்தப் பல கோடி உயிர்களுக்கும் மூல காரணம் நான் முதலில் சொன்ன ஒன்றும் ஒன்றும் தான்.அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்ததால் தானே பலகோடியானது?எனவே ஒன்றும் ஒன்றும் பல கோடி..பல கோடி.."


இவ்வாறு சொல்லிவிட்டு ஈசன் ஈஸ்வரியைப் பெருமிதத்துடன் பார்த்தார்.


ஈஸ்வரி அவரை'ஐயே...! இவ்வளவுதானா உங்கள் சரக்கு!!'என்பது போல் பார்த்தார்.ஈசனுக்கு என்னமோ போல் ஆகி விட்டது.சரி இவள் என்ன விடை சொல்கிறாள் என்பதைப் பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டார்.


அடுத்ததாக ஈஸ்வரியே பதில் சொல்ல ஆரம்பித்தார்.


"மகனே.மிகவும் அருமையான கேள்வியைக் கேட்டிருக்கிறாய்.சக்தியின் அம்சமான என் வேலை உடையவன் நீ ஒருவனன்றோ!.கார்த்திகைப் பெண்களிடம் நீ அருந்திய பால் போதாது என்று என்னிடமும் பால் அருந்தியவனல்லவா.அதனால் தான் என்னமோ ஞானபண்டிதனாகி இவ்வளவு ஞானம் பொருந்திய கேள்வியைக் கேட்டிருக்கிறாய்.நானும் நன்றாக யோசித்து இந்த விடையைக் கூறுகிறேன். கேட்டுக் கொள்.மற்ற அனைவரும் கேட்டுக் கொள்ளுங்கள்"


"அதாவது ஒன்றும் ஒன்றும் சூன்யம் தான்.ஆமாம்.ஒன்றுமே இல்லை.இவ்வுலகில் எல்லாமே அந்தச் சூன்யத்தில் தான் பிறக்கிறது.அந்தச் சூன்யத்தில் தான் போய் அழிகிறது.இறுதியில் மிஞ்சுவது என்ன?சூன்யந்தானே. எனவே ஒன்றும் ஒன்றும் சூன்யந்தான்."


இவ்வாறு கூறிவிட்டு,"மகனே.இந்தப் பதிலால் நீ திருப்தி அடைந்திருப்பாய் என்று எனக்குத் தெரியும்.இருப்பினும் மீதி இருக்கும் மற்றவர்களிடமும் கேள்.இறுதியில் என் விடை சரிதான் என்று கூறு."


முருகப் பெருமான் அம்மையிடம் ஒன்றும் சொல்லவில்லை.வீரபத்திரரை நோக்கித் திரும்பினார்.அவர் பேசுவதற்குள் வீரபத்திரரே எழுந்து பதில் சொல்ல ஆரம்பித்தார்.


"அஹா(ஆஹா இல்லை.அஹா தான்)என்ன முருகா.மிகவும் சுலபமான கேள்வி.இதற்குப் போய் ஒரு பகற்பொழுதுநேரம் அவகாசம் தேவையா.வெட்...கம்...இதற்கான விடையை நீ கேள்வி கேட்ட அந்தச் ஷணமே கண்டுபிடித்துவிட்டேன்.இருந்தாலும் அந்த ஈசருக்கும், அம்மைக்கும்,கேள்வி கேட்ட உனக்கும் மரியாதை தர வேண்டுமே என்பதற்காகத்தான் இவ்வளவு நேரம் பொறுமை காத்தேன்.இதோ என் விடை. ஒன்றும் ஒன்றும் பதினொன்று.அஹா!பதினொன்றே தான்."


"எவ்வாறு?"


"அஹா!எவ்வாறா?முதலில் ஒன்று என எழுது.பக்கத்தில் இன்னொரு ஒன்று எழுது.என்ன தெரிகிறது?பதினொன்று தானே!இதுக்குப் போயி அலட்டிக்கலாமா.அஹா!!"


முருகப் பெருமானே ஒரு நொடி அசந்து போனார்.


பிறகு நாரதரைப் பார்த்தார்.நாரதர் தயங்கியவாறே எழுந்து பேச ஆர்ம்பித்தார்.


"முருகப் பெருமானே கேள்வி என்னமோ சுலபமாகத்தான் தெரிகிறது.ஆனால் கூடி இருக்கும் இவர்களனைவரின் பதில்களை ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொரு விடையும் ஒவ்வொரு கோணத்தில் சரியாகப் படுகிறது.எனவே இவர்கள் அனைவரின் விடைகளுமே சரி தான்.எனக்கென்று தனியாக விடை இல்லை."


"என்ன நாரதா.மூவுலகையும் சுற்றுபவன் நீ.உனக்கென்று ஒரு விடை கண்டு பிடிக்க முடியவில்லையா?"


"இல்லை.முருகப் பெருமானே.என்னால் விடை காண இயலவில்லை."


"உண்மையை ஒப்புக் கொண்டமைக்கு மகிழ்ச்சி நாரதா.சரி இறுதியாக எஞ்சியது தேவேந்திரன் மட்டுமே.தேவேந்திரா.நீ என்ன விடை சொல்லப் போகிறாய்?சொல்வதைச் சீக்கிரம் சொல்."


தேவேந்திரன் பதற்றத்துடன் எழுந்தான்.


"முருகப் பெருமானே.அனைவரும் ஆளுக்கொரு விடை கூறி இருக்கிறார்கள்.எனக்குக் குழப்பமாக இருக்கிறது.ஆனால் பாதி விடை தெரிந்துவிட்டது."


அனைவரும் திடுக்கிட்டார்கள்.


"அப்படியா.மகிழ்ச்சி.நீ கண்டுபிடித்த விடை என்னவென்று சொல்."


"முருகப் பெருமானே.ஒன்றும் ஒன்றும் எவ்வளவோ தெரியவில்லை.ஆனால் நிச்சயமாக இரண்டு கிடையாது"

"முருகப் பெருமானின் கேள்விக்கு யார் வேண்டுமானாலும் பதில் கூறலாம்"

பரமசிவனால் ஒன்றும் பேச இயலவில்லை."சரி சரி அனைவரும் வாருங்கள்.சபையில் அமர்ந்து பேசலாம்"என்றார்.அனைவரும் சபைக்குச் சென்று தத்தம் இருக்கைகளில் அமர்ந்தனர்.

முருகப் பெருமான் எழுந்தார். அம்மையையும் அப்பனையும் பார்த்துப் பணிவுடன் வணங்கிப் பின் பேச ஆரம்பித்தார்.

"ஐயனே.இன்று காலையில் ஒரு கணக்குப் போட்டேனே. விடை காண மாலை வரை நேரம் தந்தேன்.அம்மை அப்பன் இருவரும் விடை கண்டாயிற்றா?"

"ஹூம்.பலவாறாக யோசித்து யோசித்து ஒரு வழியாக விடை கண்டிருக்கிறேன் முருகா."

சரி.அம்மையே.நீங்கள்...?"

"சரவணா.மூவுலகையும் ஆட்டிப் படைக்கும் எங்களை வைத்தே இன்று முழுதும் நீ விளையாடி விட்டாய்.நானும் அதி தீவிரமாக யோசித்து விடை கண்டுபிடித்திருக்கிறேன்."

"அதென்ன.இருவரும் ஆளுக்கொரு மூலையில் போய் இருந்தீர்களே.ஏன்?"

"இருவரும் சேர்ந்துதான் யோசிக்க ஆரம்பித்தோம்.கருத்து வேறுபாடு வந்து விட்டது.நீ வேற, ஒரு நபர் ஒரு விடையைத் தான் சொல்ல வேண்டும்,இரண்டாவது விடை சொல்லக் கூடாது என்று சொல்லிவிட்டாயா.எனவே ஆளுக்கொரு விடை காணலாமே என்பதும் ஒரு காரணம்."

அப்போது விநாயகப் பெருமான்,வீரபத்திரர் ஆகியோரும் வந்து அம்மையையும் அப்பனையும் வணங்கிப் பின் தத்தம் இருக்கைகளில் அமர்ந்தனர்.

முருகப் பெருமான் அவர்கள் இருவரையும் பணிவுடன் வணங்கினார்.

"அண்ணார்களே.நீங்கள் இருவரும் விடை கண்டீர்களா?"

"ஓ.நாங்களும் ஆளுக்கொரு விடையாகக் கண்டிருக்கிறோம்.சொல்லவா?"

இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த தேவேந்திரனால் பொறுக்க முடியவில்லை.

"இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும் முருகப் பெருமானே.அதென்ன அவ்வளவு சிக்கலான கணக்கு?கணக்கு என்னவென்று சொன்னால் நானும் பதில் சொல்கிறேனே!என்னதான் உங்கள் அனைவரது அறிவிற்கும் அனுபவத்திற்கும் முன்னால் நான் நிற்கக் கூட முடியாது என்றாலும் நானும்...நானும் கூட உங்களில் ஒருவன்தானே.என் அறிவையும் புத்திசாலித்தனத்தையும் வைத்துத் தானே என்னை தேவேந்திரனாகவே தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்?நான் கேட்டது தவறாக இருந்தால் அருள்கூர்ந்து என்னை மன்னிக்க வேண்டும்"

இவ்வாறு தேவேந்திரன் முறையிட்டதைக் கேட்டதும் முருகப் பெருமான் மகிழ்ந்து போனார்.பரமசிவனும்,பார்வதியும் கூடத் தலைகளை அசைத்துத் தங்களது ஒப்புதலைத் தெரிவித்தனர்.

முருகப் பெருமான் நாரதரைப் பார்த்தார்.

"என்ன நாரதரே.நீங்களும் இந்த ஆட்டத்தில் பங்கு கொள்கிறீர்களா?"

"எனக்கு அந்த அருகதை இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை.இருந்தாலும் கேள்வியைக் கேளுங்கள்.தெரிந்தால் விடை சொல்கிறேன்."

"சரி.ஆனால் அம்மனும் அப்பனும் ஒரு பகற்பொழுது முழுதும் அவகாசம் கேட்டார்கள்.உங்களுக்கு அப்படியெல்லாம் அவகாசம் தர இயலாதே."

"பரவாயில்லை முருகப் பெருமானே.முடிந்தால் சொல்கிறோம்.இல்லை என்றால் வாயை மூடிக் கொள்கிறோம்."

"சரி.கேள்வியைக் கேட்பதற்குமுன் சில நிபந்தனைகளைச் சொல்கிறேன்.அதற்குக் கட்டுப்பட்டுத்தான் விடை சொல்ல வேண்டும்.கேள்வி பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாகத் தோன்றலாம்.ஆனால் அதில் ஒரு மிகப் பெரிய தத்துவம் பொதிந்திருக்கிறது.எனவே மிகவும் ஜாக்கிரதையாகக் கவனித்து யோசித்து விடை கூறுங்கள்.அடுத்து விடைக்கான காரணமும் கூற வேண்டும்.ஒருவர் ஒரு விடை மட்டுமே கூறலாம்.இரண்டாவது விடை கூறக் கூடாது.இவ்வளவு தான்.சரி.கேள்வியைக் கேட்கட்டுமா?யார் வேண்டுமானாலும் பதில் கூறலாம்"

சரி என்று நாரதரும் தேவேந்திரனும் தலை அசைத்தனர்.

முருகப் பெருமான் கேள்வியைக் கேட்டார்.

"ஒன்றும் ஒன்றும் எவ்வளவு?"

"ந..மீ..தா.."வுக்குத் தேவேந்திரன் சொன்ன விளக்கம்

தேவேந்திரன் "ந..மீ..தா.."என்று அலறியது அந்த நடன அரங்கு மட்டுமல்ல அதையும் தாண்டிக் கையிலை எங்கும் ஒலித்தது.உடனே அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்த பூத கணங்களும் சிவனடியார்களும் விரைந்து சபையில் கூடினர்.தங்களது வழக்கமான பணிகளைச் சிரமேற்கொள்ள ஆரம்பித்தனர்.அதாவது வேத மந்திரங்கள் ஒலிக்க ஆரம்பித்தன.ஓம் நமசிவாய கோஷங்கள் முழங்கின.பரமசிவனும் திடுக்கிட்டு சுய நினைவுக்கு வந்து சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தார்.


"வா முருகா. நீ போட்ட கணக்கிற்குத் தான் விடையை யோசித்துக் கொண்டிருந்தேன்.நீ சொன்ன காலக்கெடு முடிந்துவிட்டதா?அந்தி சாயும் நேரமாயிற்றா?எங்கே உமையன்னை? என்னைத் தனியே விட்டுவிட்டு யோசிக்கச் சென்றாளே.அம்மையைப் பார்த்தாயா?விடை கண்டுபிடித்துவிட்டாளாமா?என்று அடுக்கடுக்காகக் கேட்டுக்கொண்டே வந்தவர் நாரதரைப் பார்த்தார்.


"என்ன நாரதா.நலந்தானா.வைகுண்டத்தில் என் மைத்துனைர் நலமா?"என்றார்.
முருகப்பெருமானும் நாரதரும் பரமசிவனை வணங்கினார்கள்.


"வைகுந்தத்தில் உங்கள் மைத்துனர் உள்பட அனைவரும் நலந்தான்" என்றார் நாரதர்.


"ஐயனே.நான் வந்து வெகு நேரமாகிறது.நீங்கள் ரொம்பத் தான் யோசனையில் ஆழ்ந்துவிட்டீர்கள்.வாருங்கள்.இருக்கைக்குச் செல்லலாம்."என்றார் முருகப் பெருமான்.


"ஆகட்டும்.அதுசரி..என்னமோ நமீதா நமீதா நமீதா என்று பலமுறை கூக்குரல்கேட்டதே.என்ன அது?"என்று வினவினார்.


"அது ஒன்றுமில்லை.உங்களைக் காணத் தேவேந்திரனும் வந்திருக்கிறான்.அவனும் வெகு நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறான்.அதோ உமையன்னையின் காலடியில் விழுந்து கிடப்பதைப் பாருங்கள்.அவன் தான் அப்படி அலறினான்."


முருகப் பெருமான் இவ்வாறு கூறியதும் பரமசிவன் திரும்பிப் பார்த்தார்.தேவேந்திரன் உமையன்னையின் காலடியில் விழுந்து கிடப்பதைக் கண்ணுற்றார்.அனைவரும் அங்கே சென்றனர்.


"தேவேந்திரா.என்ன இது?எழுந்திரு.என்ன ஆயிற்று உனக்கு" என்று ஆறுதல் கூறியவாறே பரமசிவன் தேவேந்திரனைத் தூக்கி எழுப்பினார்.


தேவேந்திரன் எழுந்து பரமசிவனின் காலடியில் மீண்டும் விழுந்தான்."ஐயனே,அப்பனே,கருணைக் கடலே.ஊழியும் நீயே.உலகும் நீயே.காலமும் நீயே.அனைவர்க்குக் காலனும் நீயே.உங்களைக் கண்டு என் பிரச்சனையைச் சொல்லித் தீர்வு காணவே வந்தேன்."


"அதுசரி.என்னமோ நமீதா.. நமீதா..என்று அலறினாயே..என்ன விஷயம்?".


அப்போது தான் தேவேந்திரனுக்கே உறைத்தது.


"அது வந்து...நீங்கள் ஏதோ நிஷ்டையில் இருந்தீர்களா.முருகப் பெருமான் நாரதர் நான் அனைவரும் வந்து வெகு நேரமாகியும் நீங்கள் சுய நினைவுக்கு வந்தபாடில்லை.அம்மையும் அவ்வாறே அமர்ந்திருந்தார்கள்.தற்செயலாக அம்மை என்னைப் பார்த்து 'வா தேவேந்திரா' என்ற பிறகு நான் உங்களைப் பார்த்தேன்.அப்போதும்கூட நீங்கள் சுயநினைவுக்கு வந்தபாடாகத் தெரியவில்லை.எனவே தான் "மசிவாயத்தை மீட்டுத் தாருங்கள்"என்று அம்மையிடம் சொல்ல வந்தேன்.அவ்வளவு நீளமாகச் சொல்வதற்குப் பதிலாகச் சுருக்கமாக ந..மீ..தா..என்று கத்திக் கொண்டே அம்மையின் காலடியில் விழுந்து விட்டேன்.என் எண்ணத்திலோ செயலிலோ பிழை இல்லை.இருந்தாலும் என்னை மன்னித்தருள வேண்டும்.


நாரதர் தேவேந்திரனைப் பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார்.

ந...மீ...தா...ந...மீ...தா...

கயிலைக்குள் நுழைந்தவர்கள் கண்ட காட்சி அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.நாள்தோறும் நமசிவாய கோஷங்களும் வேத மந்திரங்களும் முழங்கிக் கொண்டிருக்கும் கையிலை அப்போது மிகவும் அமைதியாக இருந்தது.நிசப்தம் என்றால் அவ்வளவு நிசப்தம்.

அம்மையும் அப்பனும் வழக்கமாக அமர்ந்திருக்கும் இடத்தில் காணோம்.முருகப் பெருமான் மெல்ல சுற்றும் முற்றும் பார்த்தார்.ரொம்ப நேரம் அங்குமிங்கும் தேடி ஒரு வழியாகக் கண்டுபிடித்து விட்டார்.

சிவபெருமான் நடன அரங்கின் ஒரு மூலையில் தூணைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்.பார்ப்பதற்குத் தூணுடன் பேசிக்கொண்டிருக்கிற மாதிரி தெரிந்தது.முருகன் அருகில் சென்றார்.அவர் பின்னாலேயே தேவேந்திரனும் நாரதரும் சென்றார்கள்.சிவபெருமான் அந்தத் தூணையே வெறித்துப் பார்த்தவண்ணம் இருந்தார்.கையில் ஒரு கரிக்கட்டை இருந்தது.

முருகப்பெருமானும் மற்றவர்களும் அந்தத் தூணைப் பார்த்தார்கள்.தூணில் மேலிருந்து கீழே வரை வெறும் எண்களால் எழுதியும் கிறுக்கியும் இருந்தன.தேவேந்திரன் தூணைச் சுற்றிச் சுற்றி வந்து பார்த்தான்.ஒரு இடம் விடாமல் கிறுக்கப்பட்டிருந்ததைக் கண்டு திகைத்துப் போனான்.
இதென்ன வந்த இடத்தில் இப்படி ஒரு சோதனை?என்னதான் சந்தேகம் இருந்தாலும் இப்படியா தூண் முழுதும் எழுதிப்பார்ப்பார்கள்?
தற்செயலாக அடுத்த தூணைப் பார்த்தான்.அங்கும் இதே கிறுக்கல் தான்.இப்படி நான்கைந்து தூண்களில் கண்டமேனிக்குக் கிறுக்கியிருந்ததைப் பார்த்த இந்திரன் நாரதரிடம் மெல்ல முணுமுணுத்தான்.

"என்ன நாரதரே.சங்கதி எப்படியோ போய்க்கொண்டிருக்கிறதே."

நாரதரும் திகைத்துப் போயிருப்பதாகவே தெரிந்தது.

"கொஞ்சம் பொறு தேவேந்திரா"என்று கூறியவாறே மீண்டும் முருகப் பெருமான் அருகில் சென்று நின்று கொண்டார்.

தேவேந்திரன் புத்தி வேறு வழியில் ஓடியது.

'சரி அப்பன் கிறுக்கனாகி விட்டார். அம்மையின் நிலை என்னவோ.தேடித் தான் பார்ப்போமே என்று மனதுக்குள் கூறியவாறே மற்ற இடங்களில் தேட ஆரம்பித்தான்.கண்டுபிடித்தும் விட்டான்.

நடன அரங்கின் கடைசியில் ஒரு மூலையில் உமையன்னை உட்கார்ந்திருந்தார்.சுவர் பூராவும் எண்களால் கிறுக்கி இருந்தன.தேவேந்திரன் அருகில் வந்ததையோ பணிவுடன் குனிந்து வணங்கியதையோ கவனித்ததாகத் தெரியவில்லை.

'ஐயையோ!அம்மைக்கும் அப்பனுக்கும் ஏதோ ஆகிவிட்டது.அலகிலா உலகையே பம்பரம் போல் ஆட்டுவிக்கும் அம்பலத்தான் தம்பதியர்களே இப்படிக் கிறுக்கர்களாகிவிட்டார்களென்றால்...யாரோ சூனியம் வைத்திருப்பார்களோ இவர்களுக்குப் பதிலாக நம்ம கதை போல் இன்னொரு சிவனைத் தேட வேண்டி வருமோ.....ஐயையோ!அப்படி ஒருவேளை தப்பித் தவறி நேரிட்டால் இன்னொரு அம்மையையும் அப்பனையும் தேடும் பணிதானே முதலில் பார்ப்பார்கள்.அப்படியானால் என் பிரச்சனை இரண்டாவதாகி விடுமே!மீண்டும் அந்தக் கிழவியின் தொந்தரவைத் தாங்க வேண்டுமா?நினைக்கவே பயமாக இருக்கிறதே.வயிற்றை என்னமோ செய்கிறதே.'

அப்போது உமையன்னை தற்செயலாக நிமிர்ந்து பார்த்தார்."வா தேவேந்திரா" என்றார்.

'அப்பாடா!அன்னைக்கு ஒன்றும் ஆகவில்லை' என்று நினைத்தவாறே பரமசிவன் நின்றிருக்கும் இடத்தைப் பார்த்தான்.அவரோ தொடர்ந்து தூணையே வெறித்துப் பார்த்த வண்ணம் இருந்தார்.அருகில் நின்றிருந்த முருகப் பெருமானும் நாரதரும் பரமசிவனைப் பார்த்தவாறே நின்றிருந்தார்கள்.

இப்போது தேவேந்திரனுக்கு மேலும் பயம் அதிகரித்துவிட்டது.அப்பன் ஆழ்ந்த சிந்தனைக்குள் போய்விட்டால் அவரை யார் எழுப்புவது?

முன்பொருமுறை பரமசிவன் இதேமாதிரி சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது உமையன்னை அவர் பின்னால் சென்று விளையாட்டாக அவரது கண்களிரண்டையும் தன் இரு கைகளால் பொத்திய நிகழ்ச்சி ஏனோ தேவேந்திரனுடைய நினைவுக்கு வந்து தொலைத்தது.அவன் மூளையில் ஏதோ ஒரு சுரப்பி தாறுமாறாகச் சுரந்தது.

உடனே தேவேந்திரன் "ந..மீ..தா...ந...மீ...தா..."என்று அலறியவாறே உமையன்னையின் காலடியில் சாஷ்டாங்கமாக விழுந்தான்.

தேவேந்திரன் புலம்பல்

வாசற்படியிலேயே உட்கார்ந்துவிட்டான் தேவேந்திரன்.'இருவரும் என்னத்தைக் கணக்குப் பண்ணி என்னத்தை விடை கண்டுபிடித்து எப்போது முருகனிடம் சொல்லி....ஹூம்.இன்றைக்கு வந்த காரியம் முடிந்தமாதிரி தான்' என்று நினைத்துக் கொண்டான்.

நாரதரைப்பார்த்தான்.அவரோ கையில் இருக்கும் தும்புராவை லேசாக மீட்டிய வண்ணம் இருந்தார்.வாயோ நாராயணா நாராயணா என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

"நாரதரே."

"என்ன தேவேந்திரா."

"நாராயணரைத் துதி பாடியது போதும்.இங்கே வாருங்கள்."

"வந்துவிட்டேன்.என்ன விஷயம்?"

தேவேந்திரனுக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது.இருக்காதாபின்னே?கூப்பிட்டகுரலுக்கு உடனே ஓடி வருகிறாரே இந்த நாரதர்!

"சரி.சரி.அங்கேயே போய் நில்லும்."

"சரி.தேவேந்திரா.அப்படியே ஆகட்டும்."

இப்போது தேவேந்திரனுக்கே இது கொஞ்சம் அதிகம் போலத் தெரிந்தது.
அவனே நாரதரின் அருகில் சென்றான்.

"நாரதரே."

திடுக்கிட்டுக் கண் விழித்தார் நாரதர்.

"என்ன தேவேந்திரா?"

"இல்லை.நாம் வந்து வெகு நேரம் ஆகிறது.அம்மையும் அப்பனும் எப்போது நம்மைக் கூப்பிடுவார்கள்?"

"அதுதான் நந்தி தேவரே சொல்லிவிட்டாரே,இருவரும் முருகப்பெருமான் போட்ட கணக்கிற்கு விடை கண்டுபிடித்தபிறகுதான் நம்மைக் கூப்பிடுவார்கள்."

"ஆடவல்லானுக்குத் தெரியாத கணக்கா நாரதரே?"

"இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம்."

தேவேந்திரன் யோசிக்க ஆரம்பித்தான்.'அப்படி என்ன கணக்காக இருக்கும்?நான் தான் பிரம்மத்தை முற்றிலும் உணர்ந்தவர்களில் ஈரேழு பதினான்கு லோகங்களிலும் முதன்மையானவன் ஆயிற்றே.என்னைக் கேட்டாலே ஒரு நொடிப் பொழுதில் விடை கண்டு விடுவேனே!
இப்படியே காத்துக்கொண்டிருப்பதிலேயே நாள் முழுதும் போய் விடுமோ'என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.

அப்போது முருகப் பெருமான் உள்ளே நுழைந்துகொண்டிருந்தார்.தேவேந்திரனும்,நாரதரும் அவசர அவசரமாக வணங்கினார்கள்.

முருகப் பெருமான் சிரித்தார்.
என்ன தேவேந்திரா.நலந்தானா?கணக்கு என்னவென்று சொல்லவா?விடை சொல்கிறாயா?

தேவேந்திரனுக்கு விதிர்விதித்துவிட்டது.

முருகப் பெருமானே.என்னை மன்னிக்க வேண்டும்.பிரம்மத்திற்குப் பொருள் கூறியவரே தாங்கள் தான்.நான் பார்க்கவந்த காரியம் தாமதப் பட்டுப் போகிறதே என்ற அச்சம் என்னை அவ்வாறு எண்ண வைத்து விட்டது.அடியேனை மன்னித்தருள வேண்டும்.

பரவாயில்லை.வாருங்கள்.அப்பனையும் அம்மையையும் காண்போம்.பிறகு என் கணக்கிற்கு விடை காணலாம்.

இவ்வாறு முருகப் பெருமான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாயிற்கதவுகள் திறந்தன.உள்ளே இருந்துவந்த பூதகணம் ஒன்று நந்தியிடம் ஏதோ முணுமுணுத்தது.உடனே நந்தி அனைவரையும் உள்ளே செல்ல அனுமதித்தார்.

பரந்தாமன் ஒப்புதலும் சிவலோகத்தில் தேவேந்திரன் காத்திருத்தலும்

தேவேந்திரனது கோரிக்கையில் நியாயம் இருப்பதைப் பரந்தாமன் உணர்ந்தார்.

"சரி.நான் என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?"

"நீங்களும் மற்ற மும்மூர்த்திகளான பரமசிவனும் பிரம்மனும் ஒன்றாகக் கூடி ஒரு முடிவு எடுங்கள்.எடுக்கும் முடிவு எனக்குச் சாதகமாக இருக்கவேண்டும் " என்றான் தேவேந்திரன். பரந்தாமன் நாரதரைப் பார்த்தார்.

"நீ என்ன சொல்கிறாய் நாரதா?"

"சொல்வதற்கு என்ன இருக்கிறது நாராயணா.உனக்குத் தெரியாதா?எல்லாம் உன் லீலா மகிமை."

"சரி தேவேந்திரா.நீ சிவலோகம் சென்று பரமசிவனிடம் உன் கோரிக்கையைச் சொல்லிவிட்டுஅப்படியே பிரம்மலோகத்திற்கும் ஒரு நடை சென்று பிரம்மனிடமும் சொல்லிவிட்டு உன் லோகத்திற்குப் போ."

"சுவாமி.சிவலோகத்தில் எதாவது ஏடாகூடமாக நடந்துவிட்டால்...அவர் கோபக்காரராயிற்றே.ஏதாவது சாபம் கொடுத்துவிட்டால்?பதவி விலகப் போகிற வேளையில் எனக்கு வில்லங்கம் ஏதும் வந்துவிடாதே."

"அதை நீ தான் சுதானமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.என் கையில் என்ன இருக்கிறது?"

தேவேந்திரன் பரந்தாமனின் கைகளைப் பார்த்தான்.இரண்டு உள்ளங்கைகளும் கன்னிப் போய் இருந்தன.'சரிதான்.தாயார் லட்சுமிக்குக் கை கால்களை அமுக்கி அமுக்கி இப்படி ஆகி இருக்கும்'என்று நினைத்துக் கொண்டான்.

"போய் வருகிறேன் பரந்தாமா.என்னை ஆசீர்வதியுங்கள்."

"போய் வா தேவேந்திரா.ஆசிகள்.எதற்கும் கூடவே நாரதரையும் அழைத்துக் கொண்டு செல்.ஒரு பாதுகாப்பாக இருக்கும்."

"உத்தரவு பரந்தாமா."

தேவேந்திரனும் நாரதரும் வெளியே வந்தனர்.

இருவரும் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் சிவலோகம் வந்தடைந்தனர்.
வாசலில் காவலுக்கு இருந்த நந்தி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.திடீரென்று தலையை இடப்பக்கமாகவும் வலப்பக்கமாகவும் வேகமாக அசைத்துக் கொண்டார்.மனதுக்குள் எழுதியதில் ஏதோ தப்புத் தப்பாக எழுதியதை மூஞ்சியினாலேயே அழிப்பது போலத் தோன்றியது தேவேந்திரனுக்கு.அதை நாரதரிடம் குசு குசு வென்று சொல்லியேவிட்டான்.நாரதர் தேவேந்திரனை ஒரு முறை முறைத்தார்.'ஏது இன்றைக்கு வாசப்படியிலேயே பொங்க வைத்துவிடுவான் போலிருக்கிறதே இந்த ஆயிரங்கண்ணன்'என்று மனதுக்குள் திட்டிக்கொண்டே சொன்னார்."பேசாமல் வந்தவேலையைப் பார்த்தோமா போனோமா என்று இருக்க வேண்டும்.இப்படி எல்லாம் அதிகப்பிரசங்கித்தனமாகவெல்லாம் யோசிக்கப்படாது"என்று எச்சரித்தார்.

சிறிது நேரம் கழித்து நந்திதேவர் கண்களைத் திறந்தார்.உடனே தேவேந்திரனும் நாரதரும் பணிவுடன் வணங்கினார்கள்.

"என்ன தேவேந்திரா?என்றைக்குமே வராத நீ இன்றைக்குக் காலை நேரத்திலயே வந்திருக்கிறாய்?அதுவும் நாரதருடன்.என்ன விசேஷம்?"

"விசேஷம் எல்லாம் ஒன்றுமில்லை நந்திதேவரே..."

"பின் என்ன மரியாதை நிமித்தமாக வந்திருக்கிறாயா,பேஷ் பேஷ்.தேவேந்திரன் என்றால் இப்படித்தான் பணிவுடன் இருக்க வேண்டும்.அவ்வப்போது எம்பெருமானை வந்து காணவேண்டும்."
(கண்டுக்க வேண்டும் என்று தேவேந்திரன் காதுகளில் விழுந்தது).

அப்படியே பேச்சை ஒப்பேற்றிவிடலாம் என்று தேவேந்திரன் முடிவு செய்தான்.

"ஆமாம்.நந்திதேவரே.எம்பெருமானைக் காணாத கண் என்ன கண்ணே" என்றுதான் கண்டு களிப்படைய வந்திருக்கிறேன்.தாங்கள் அனுமதி கொடுத்தால்..."

"அடடா.கொஞ்ச நேரம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா?"

"ஏன்?ஏதாவது சிக்கலா?"

"சிக்கலுமில்லை,விக்கலும் இல்லை.என் அப்பனுக்கே அப்பனான முருகப் பெருமான் ஒரு கணக்குக்கு விடை கேட்டிருக்கிறார்.அப்பனும் அம்மையும் உள்ளே கணக்குப் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்."

பரந்தாமனிடம் தேவேந்திரன் முறையிடுதல்

பாற்கடலில் லட்சுமி ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் படுத்திருந்தாள்.அருகில் காலடியில் விஷ்ணு அமர்ந்து அவளது இரு கால்களையும் அமுக்கி விட்டுக் கொண்டிருந்தார்.

முதலில் உள்ளே நுழைந்த தேவேந்திரனுக்கு இந்தக் காட்சியைப் பார்த்ததும் ஒரே அதிர்ச்சியாக இருந்தது.

அடச் சே!கொடுமை கொடுமை என்று இவரிடம் முறையிட வந்தால் இதென்ன வங்கொடுமையாக இருக்கிறதே!

அடுத்து நுழைந்த நாரதர் இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் தினந்தோறும் பார்ப்பவராதலால் இந்தக் காட்சியை வித்தியாசமாக
எடுத்துக் கொள்ளவில்லை.

"என்ன தேவேந்திரா.எங்கள் இருவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கிறாய்.அதுவும் லட்சுமியைக் கொஞ்சம் அதிகமாகவே பார்க்கிறாயே."

அதிர்ச்சியிலிருந்து மீண்ட தேவேந்திரன்,"இதென்ன,வித்தியாசமான காட்சியாக இருக்கிறதே.வழக்கமாக ஆதிசேஷன் மீது நீங்கள் தான் படுத்திருப்பீர்கள்.லட்சுமிதேவி உங்கள் கால்களை அமுக்கிக் கொண்டிருப்பாள்.ஆனால்..."

"அதெல்லாம் ஒன்றுமில்லை தேவேந்திரா.நீ சொல்வது வாஸ்தவம் தான்.இன்று காலை பாற்கடலைச் சுத்தம் செய்து மீண்டும் புதுப் பாலை நிரப்பவேண்டிய காமதேனு வரவில்லை.அதனால்.."

என்று சொல்லிக்கொண்டே லட்சுமியைப் பாசத்துடன் பார்த்தார்.

லட்சுமிக்கு வெட்கந்தாங்கவில்லை."போங்கள் சுவாமி.எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது."

"என்ன லட்சுமி.இதுற்குப் போய் இவ்வளவு வெட்கப் படுகிறாய்?"

தேவேந்திரனுக்கு ஒரே கிளுகிளுப்பாக இருந்தது.
"
சீக்கிரம் சொல்லுங்கள் பரந்தாமா.என்னால் பொறுக்க முடியவில்லை.என்னமோ செய்கிறது."

"அட.காமதேனு வராததால் நீயே...."

தேவேந்திரனுக்குக் கிறக்கத்தால் மயக்கமேவந்துவிடும்போலிருந்தது.

பரந்தாமன் தொடர்ந்தார்.

""காமதேனு வராததால் நீயே காமதேனு வீட்டுக்குச் சென்று என்னவென்று கேட்டுக் கையோடு கூட்டிக் கொண்டு வந்துவிடு என்றேன்.அவ்வாறே லட்சுமியும் காமதேனு வீட்டுக்குச் சென்று கூட்டிக் கொண்டு வந்தாள்.இன்று கருடாழ்வார் அவசர வேலையாக விடுப்பு எடுத்துக் கொண்டதால் எனது பழைய தேரை எடுத்துக் கொண்டு லட்சுமி சென்றாள்.வரும் வழியில் தேர் பழுதடைந்துவிட்டது.எனவே காமதேனுவுடன் நடந்தே வந்திருக்கிறாள்.பிறகு காமதேனு பாற்கடலை நிரப்பிவிட்டுப் போனபின் ஒரே ஆயாசமாக இருக்கிறது என்றாள்.அதனால் தான் லட்சுமியைப் படுக்கச் சொல்லி காலிரண்டையும் அமுக்கிவிட்டுக் கொண்டிருந்தேன்.

"சரி.நீ வந்த விஷயத்தைச் சொல்.எனக்கு அடுத்தடுத்து நிறைய வேலை இருக்கிறது."

தேவேந்திரனும் விஷயத்தைச் சொன்னான்.