பரந்தாமன் ஒப்புதலும் சிவலோகத்தில் தேவேந்திரன் காத்திருத்தலும்

தேவேந்திரனது கோரிக்கையில் நியாயம் இருப்பதைப் பரந்தாமன் உணர்ந்தார்.

"சரி.நான் என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?"

"நீங்களும் மற்ற மும்மூர்த்திகளான பரமசிவனும் பிரம்மனும் ஒன்றாகக் கூடி ஒரு முடிவு எடுங்கள்.எடுக்கும் முடிவு எனக்குச் சாதகமாக இருக்கவேண்டும் " என்றான் தேவேந்திரன். பரந்தாமன் நாரதரைப் பார்த்தார்.

"நீ என்ன சொல்கிறாய் நாரதா?"

"சொல்வதற்கு என்ன இருக்கிறது நாராயணா.உனக்குத் தெரியாதா?எல்லாம் உன் லீலா மகிமை."

"சரி தேவேந்திரா.நீ சிவலோகம் சென்று பரமசிவனிடம் உன் கோரிக்கையைச் சொல்லிவிட்டுஅப்படியே பிரம்மலோகத்திற்கும் ஒரு நடை சென்று பிரம்மனிடமும் சொல்லிவிட்டு உன் லோகத்திற்குப் போ."

"சுவாமி.சிவலோகத்தில் எதாவது ஏடாகூடமாக நடந்துவிட்டால்...அவர் கோபக்காரராயிற்றே.ஏதாவது சாபம் கொடுத்துவிட்டால்?பதவி விலகப் போகிற வேளையில் எனக்கு வில்லங்கம் ஏதும் வந்துவிடாதே."

"அதை நீ தான் சுதானமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.என் கையில் என்ன இருக்கிறது?"

தேவேந்திரன் பரந்தாமனின் கைகளைப் பார்த்தான்.இரண்டு உள்ளங்கைகளும் கன்னிப் போய் இருந்தன.'சரிதான்.தாயார் லட்சுமிக்குக் கை கால்களை அமுக்கி அமுக்கி இப்படி ஆகி இருக்கும்'என்று நினைத்துக் கொண்டான்.

"போய் வருகிறேன் பரந்தாமா.என்னை ஆசீர்வதியுங்கள்."

"போய் வா தேவேந்திரா.ஆசிகள்.எதற்கும் கூடவே நாரதரையும் அழைத்துக் கொண்டு செல்.ஒரு பாதுகாப்பாக இருக்கும்."

"உத்தரவு பரந்தாமா."

தேவேந்திரனும் நாரதரும் வெளியே வந்தனர்.

இருவரும் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் சிவலோகம் வந்தடைந்தனர்.
வாசலில் காவலுக்கு இருந்த நந்தி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.திடீரென்று தலையை இடப்பக்கமாகவும் வலப்பக்கமாகவும் வேகமாக அசைத்துக் கொண்டார்.மனதுக்குள் எழுதியதில் ஏதோ தப்புத் தப்பாக எழுதியதை மூஞ்சியினாலேயே அழிப்பது போலத் தோன்றியது தேவேந்திரனுக்கு.அதை நாரதரிடம் குசு குசு வென்று சொல்லியேவிட்டான்.நாரதர் தேவேந்திரனை ஒரு முறை முறைத்தார்.'ஏது இன்றைக்கு வாசப்படியிலேயே பொங்க வைத்துவிடுவான் போலிருக்கிறதே இந்த ஆயிரங்கண்ணன்'என்று மனதுக்குள் திட்டிக்கொண்டே சொன்னார்."பேசாமல் வந்தவேலையைப் பார்த்தோமா போனோமா என்று இருக்க வேண்டும்.இப்படி எல்லாம் அதிகப்பிரசங்கித்தனமாகவெல்லாம் யோசிக்கப்படாது"என்று எச்சரித்தார்.

சிறிது நேரம் கழித்து நந்திதேவர் கண்களைத் திறந்தார்.உடனே தேவேந்திரனும் நாரதரும் பணிவுடன் வணங்கினார்கள்.

"என்ன தேவேந்திரா?என்றைக்குமே வராத நீ இன்றைக்குக் காலை நேரத்திலயே வந்திருக்கிறாய்?அதுவும் நாரதருடன்.என்ன விசேஷம்?"

"விசேஷம் எல்லாம் ஒன்றுமில்லை நந்திதேவரே..."

"பின் என்ன மரியாதை நிமித்தமாக வந்திருக்கிறாயா,பேஷ் பேஷ்.தேவேந்திரன் என்றால் இப்படித்தான் பணிவுடன் இருக்க வேண்டும்.அவ்வப்போது எம்பெருமானை வந்து காணவேண்டும்."
(கண்டுக்க வேண்டும் என்று தேவேந்திரன் காதுகளில் விழுந்தது).

அப்படியே பேச்சை ஒப்பேற்றிவிடலாம் என்று தேவேந்திரன் முடிவு செய்தான்.

"ஆமாம்.நந்திதேவரே.எம்பெருமானைக் காணாத கண் என்ன கண்ணே" என்றுதான் கண்டு களிப்படைய வந்திருக்கிறேன்.தாங்கள் அனுமதி கொடுத்தால்..."

"அடடா.கொஞ்ச நேரம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா?"

"ஏன்?ஏதாவது சிக்கலா?"

"சிக்கலுமில்லை,விக்கலும் இல்லை.என் அப்பனுக்கே அப்பனான முருகப் பெருமான் ஒரு கணக்குக்கு விடை கேட்டிருக்கிறார்.அப்பனும் அம்மையும் உள்ளே கணக்குப் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்."

0 comments: