"மகாபலிச் சக்கரவர்த்தியும் மறுத்தார்"

சர்ப்பலோகத்திலிருந்து புறப்பட்ட நாரதர் நேராக வைகுந்தத்திற்குச் சென்றார். சர்ப்பலோகத்தில் நகுஷ சர்ப்பத்தைச் சந்தித்ததையும் அது தேவேந்திரப் பதவியை ஏற்க மறுத்ததையும் பரந்தாமனிடம் எடுத்துரைத்தார்.

"ஏன் நாரதரே.பாதாள லோகம் வரை போய் வந்திருக்கிறீர்கள்.அப்படியே மகாபலியிடமும் தேவேந்திரப் பதவியை ஏற்கச் சம்மதமா என்று ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே"

"நாராயணா,நான் நகுஷனிடம் மட்டுமே கேட்டு வரச் சொல்லி எனக்கு உத்தரவு போட்டீர்கள்.நானாக மற்றவர்களிடம் எவ்வாறு கேட்பது?"

"சரி.தேவேந்திரப் பதவியை ஏற்கத் தகுதியான நபரைச் சந்திக்கவும்,அவரின் சம்மதம் பெறவும் இப்போது உனக்கு அனுமதி வழங்கினேன்.இனி ஒவ்வொரு முறையும் இங்கு வந்து என்னைக் கேட்க வேண்டாம்.இனிமேல் நீயும் தனியாகப் போகவும் வேண்டாம்.தேவேந்திரனையும் கூடவே அழைத்துச் செல்."

"உத்தரவு பரந்தாமா"

வைகுந்தத்திலிருந்து கிளம்பிய நாரதர் அடுத்ததாக இந்திரலோகத்திற்குச் சென்று தேவேந்திரனிடம் விபரம் தெரிவித்தார்.

"அது சரி,நாரதரே.பாதாளலோகத்திற்கு நானும் வர வேண்டுமா?நீங்கள் மட்டும் போய் வாருங்களேன்."என்றான் தேவேந்திரன்.

"ஏனப்பா உனக்கு அப்படி என்ன வேறு வேலை காத்திருக்கிறதா?

"அதெல்லாம் ஒன்றுமில்லை.மகாபலிச் சக்கரவர்த்தி பாதாள லோகத்திற்கு அனுப்பப்பட்டதற்குக் காரணமே நான் தானே!இப்போது நானே அவரைப் போய்ப் பார்ப்பது என்றால் என் கவுரவத்திற்குப் பங்கம் நேராதா?

இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒரு அரதப் பழசான சம்பவத்தை ஞாபகப் படுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது.அதாவது மகாபலிச் சக்கரவர்த்தி பூலோகத்தை மிகுந்த சீரும் சிறப்புமாக ஆண்டு கொண்டிருந்தான்.அவனது செல்வாக்கும்,புகழும் தேவலோகம் வரை சென்றது.அனைத்து லோகங்களிலும் மகாபலிச் சக்கரவர்த்தியின் புகழ் பரவியது.ஒரு அற்ப மானுடன் தன்னைக் காட்டிலும் புகழ் பெறுவதை காணச் சகிக்காத தேவேந்திரன் மகாபலியைச் சக்கரவர்த்திப் பதவியிலிருந்து நீக்குமாறு பரந்தாமனிடம் முறையிட்டான்.அவனது கோரிக்கையில் நியாயம் இருப்பதை அந்தப் பள்ளி கொண்ட பெருமாள் ஏற்றுக் கொண்டார்.இது என்ன நியாயமோ என்ன எழவோ என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா?ஒரு மனுஷன் நியாயமாகவும் புகழோடும் வாழ்ந்தாலே அந்த இந்திராதி தேவர்களுக்குப் பொறுக்காதே!எனவே அந்த விஸ்வரூபனாகிய பரந்தாமன் வாமன அவதாரம் எடுத்துக் கொண்டு மகாபலியிடம் வந்து மூன்றடி நிலம் கேட்டார்.
இப்போதெல்லாம் மகாபலி இருந்தால் என்ன செய்திருப்பார்?
வாமனனிடம்,'நீ போய் மூன்றடி நிலம் எதற்காக வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி ஒரு மனு எழுதி தாசில்தாரிடம் கொடுத்து பரிந்துரை பெற்று வா.அதற்குப் பின் மூன்றடி நிலம் தருகிறேன்'என்று சொல்லி இருப்பார்.தாசில்தாரிடம் பரிந்துரை பெறுவதற்கு முன் கிராம நிருவாக அலுவலரிடமும்,ரெவின்யூ இன்ஸ்பெக்டரிடமும் சென்று சிபாரிசு செய்யச் சொல்லி எழுதி வாங்க வேண்டும்.அது இந்த ஜன்மத்தில் நடக்காது.அதுக்குப் பதிலாக மூன்றடி நிலமும் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று மகாபலியிடம் சரண்டர் ஆகிவிட்டு வாமனன் திரும்பப் போயிருப்பான்.இது இந்தக் காலம்.

ஆனால் அந்தக் காலம் அப்படி இல்லையே!உடனே வாமனன் கேட்ட மூன்றடி நிலம் கொடுக்க மகாபலி தயாரானார்.அவரது குல குருவான சுக்கிராச்சாரியார் 'வந்திருப்பவன் பரந்தாமன்.ஏதோ மோசடி வேலை செய்வதற்காக வந்திருக்கிறான்.நீ மூன்றடி நிலம் கொடுக்காதே'என்று எச்சரிக்கை செய்தான்.அதற்கு மகாபலி 'என்னிடம் மூன்றடி நிலம் யாசகம் கேட்டு அந்தப் பரந்தாமனே வந்திருப்பது என்னை மேலும் பெருமையுடையவன் ஆக்குமே' என்று சொல்லிப் புளகாங்கிதம் அடைந்தான்.மூன்றடி நிலத்தைத் தாரை வார்த்துத் தருவதற்காகக் கையில் உள்ள நீர்ப் பாத்திரத்தை(கெண்டி என்று சொல்வார்களாம்!)எடுத்தபோது சுக்கிராச்சாரியார்,எப்படியாகிலும் அதைத் தடுக்க வேண்டும் என்று முனைந்து ஒரு குளவி ரூபத்தில் அந்த நீர்ப் பாத்திரத்தின் மூக்கில் அமர்ந்து கொண்டார்.பாத்திரத்தை எவ்வளவோ சாய்த்தும் நீர் வராததைக் கண்ணுற்ற பரந்தாமன் தனது ஞானக் கண்ணால் காரணத்தைத் தெரிந்து கொண்டு தன் கையில் வைத்திருக்கும் தர்ப்பைப் புல்லினால் பாத்திரத்தின் மூக்கில் குத்தோ குத்து என்று குத்தினார்.குளவி ரூபத்தில் இருந்த சுக்கிராச்சாரியாரின் ஒரு கண் அவுட் ஆனது.வலி பொறுக்கமாட்டாது குளவி அந்தப் பாத்திரத்தை விட்டுப் பறந்தது.அத்துடன் பரந்தாமனின் மானமும் காற்றில் பறந்தது.

நீரை வார்த்து மூன்றடி நிலம் கொடுத்தான் மகாபலி.உடனே வாமனன் விஸ்வரூபம் எடுத்தான்.ஒரு காலால் உலகை அளந்தான்.மறு காலால் ஆகாயம் அளந்தான்.ஈரடி அளந்தேன்.மூன்றாவது அடி நிலம் எங்கே என்று கேட்டான்.மகாபலிச் சக்கரவர்த்தி பரந்தாமனைப் பணிந்து "இதோ என் சிரசு.தங்கள் சீரடியை என் சிரசில் வைத்து மூன்றாம் அடியாக எடுத்துக் கொள்ளுங்கள்"என்றான்.அப்படியே மகாபலியின் தலையில் காலை வைத்த பரந்தாமன் "இனி நீ பாதாள லோகத்தில் சென்று அரசாள்வாயாக"என்று கூறிக்கொண்டே ஒரே அமுக்காக அமுக்கிவிட்டார்.அன்றைக்குப் பாதாள லோகத்திற்குப் போனவன் தான் இந்த மகாபலிச் சக்கரவர்த்தி.

இதைத் தான் தேவேந்திரன் நாரதரிடம் நினைவுபடுத்தினான்.நாரதர் அதை அலட்சியப்படுத்திவிட்டார்.'உனக்குக் காரியம் ஆகவேண்டுமானால் கவுரவத்தைப் பாராமல் வா என்னுடன்'என்றார்.தேவேந்திரனால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.நாரதருடன் புறப்பட்டான்.

இருவரும் பாதாளலோகம் வந்தடைந்தனர்.உடனே மகாபலிச் சக்கரவர்த்தியையும் பார்த்தனர்.

விபரம் முழுதும் தெரிந்துகொண்ட மகாபலிச் சக்கரவர்த்தி ஒரே வார்த்தையில் மறுத்துவிட்டார்.

"எனக்குக் கொடுத்துத் தான் பழக்கமே ஒழிய வாங்கிப் பழக்கமில்லை.பூலோகத்தில் எனக்கிருந்த பேரையும் புகழையும் வைத்துத் தானே தேவேந்திரன் என் மீது பொறாமை அடைந்தான்.அவ்வாறு வாழ்வாங்கு வாழ்ந்த எனக்கு இந்தத் தேவேந்திரப் பதவி தூசு.இன்றைக்கும் பூலோகத்தில் எனக்கு இருக்கும் மதிப்பையும் மரியாதையையும் போய்ப் பாருங்கள்,உங்களுக்கே தெரியும்.போய் வாருங்கள்.என்று சொல்லி விடை கொடுத்தான் மகாபலிச் சக்கரவர்த்தி.

கூசிக் குறுகிப் போனான் தேவேந்திரன்.

0 comments: