தேவேந்திரனின் மனக்குறை

அன்று வழக்கத்திற்கு மாறாக இந்திரலோகம் களை கட்டியிருந்தது.
தேவேந்திரன் முன்பு மும்மூர்த்திகளும்(விஷ்ணு,சிவன் மற்றும் பிரம்மா)மற்ற மூர்த்திகளும் அவர்களது தொண்டரடிப்பொடியாழ்வார்களுடன் ஆஜராகி இருந்தனர்.

(மீண்டும் இந்த இடத்திற்கு வருவதற்குக் கொஞ்ச நாள் ஆகும்.)

தேவேந்திரனுக்குச் சந்தோசந்தாங்கவில்லை.பின்னே இருக்காதா?
லோகஷேமத்தைப் பரிபாலனம் செய்யும் வேலையை மும்மூர்த்திகளும் எடுத்துக் கொண்டபின் இந்திரனை யாரும் கவனிப்பதே இல்லை.ஈரேழு பதினான்கு லோகங்களையும் சஞ்சாரஞ் செய்யும் நாரதர் கூட மதிப்பதில்லை என்று இந்திரனுக்கு ஒரே காண்டு.ஒருநாள் யதேச்சையாக நாரதரைப் பாற்கடலில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

"என்ன நாரதரே.என் லோகத்திற்கு யாருமே வருவதில்லை.என்னை யாருமே மதிப்பதில்லை.யாரிடம் என் குறைகளைச் சொல்வது என்றே தெரியவில்லை"

"என்ன தேவேந்திரா.அடுக்கிக் கொண்டே போகிறாயே.என்ன விசேஷம்?நான் என்ன அந்நியனா.எங்கிட்டே சொல்லேன்.''

''முதலில் நீங்களே என்னை மதிப்பதில்லை.''

''என்ன?என்ன சொல்கிறாய் தேவேந்திரா?நான்....நான் உன்னை மதிப்பதில்லையா?''

''ஆ...மா!ஒரு நாளைக்கு ஓரிடத்தில் நிற்கக் கூட முடியாமல் ஒவ்வொரு இடமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.ஆனால் என் லோகத்திற்கு வருவதே இல்லை.அதனால் எங்கே என்ன நடக்கிறது என்ற தகவலும் சரிவர எனக்குக் கிடைப்பதுமில்லை.''

''அவற்றைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய் தேவேந்திரா.படைக்கும் தொழிலை பிரம்மா பார்த்துக் கொள்கிறார்.சகல ஜீவராசிகளையும் பரிபாலிக்கும் பணியை விஷ்ணு கவனித்துக் கொள்கிறார்.பூமிபாரம் அதிகமாகிவிடாமல் இருப்பதற்காக அழிக்கும் செயலைக் கண்ணும் கருத்துமாகப் பரமசிவன் பார்த்துக் கொள்கிறார்.இப்படி மும்மூர்த்திகள் அவரவர்கள் வேலையைப் பார்த்துக் கொள்கிறார்கள்.எனவே உனக்குக் கவலையும் இல்லை.வேலையும் இல்லை.அப்புறமென்ன?உன்பாட்டுக்கு ஆனந்தமாக
தேவலோகக் கன்னியர்களோடு ஆட்டம் பாட்டம் என்று இருக்க வேண்டியது தானே?''

''என்ன நாரதரே.கிண்டலடிக்கிறீரா?எவ்வளவு நாளைக்குத் தான் இப்படியே இருப்பது?வாழ்க்கையில் முதன்முதலாக வெறுப்பேற்படுவது இது தான் முதல்முறை.''

''என்ன சுவாரசியம் வேண்டும் உனக்கு?''

''பின்னே என்ன நாரதரே.முன்பெல்லாம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பலப் பல யுகங்களாக ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தன.அவர்கள் நம்முடன் சண்டை போட்டார்கள்.பல முறை வென்றார்கள்.நேரடியாக அவர்களை ஜெயிக்கமுடியாமல் மோசடி வேலைகளைச் செய்து அவர்களை ஒழித்தோம்.அப்பவெல்லாம் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருந்தது.அங்கே ஓட இங்கே ஓட அவன் மனைவியை இவன் தூக்கிச் செல்ல இவன் மனைவியை அவன் தூக்கிச் செல்ல ஒரே அமர்க்களமா இருந்ததே!பொழுது போனதே தெரியாதே!!''

''நீ...நீ..யாரைச் சொல்கிறாய் தேவேந்திரா!''

''ஐயையோ!நான் உங்களைச் சொல்லவில்லை.உண்மையில் நடந்ததைச் சொன்னேன்.''

''சரி.சரி.அதற்கென்ன இப்போது?''

''அதற்குப் பிறகு தானே என் சோகக் கதையே ஆரம்பமானது?விஷ்ணுவும் பரமசிவனும் மாறி மாறிப் பல அவதாரங்கள் எடுத்ததன் விளைவாகப் பூலோகத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.எங்கு பார்த்தாலும் அவர்களின் கோவில்களாகவே தெரிகிறது.ஆகா.அவர்களுக்குப் பூஜை என்ன,புனஸ்காரங்களென்ன,பாத யாத்திரை,பரிகாரங்கள் என்ன
அவர்களுக்குப் பல கோவில்களில் ஆறுகாலப் பூஜைகளும் நடக்கிறதாமே!''

''அவர்கள் மும்மூர்த்திகள்.இல்லை இல்லை.மும்மூர்த்திகளில் இருவர்.அவர்கள் வேலைகளை அவர்கள் செய்கிறார்கள்.
பூலோகத்தில் மக்கள் பட்ட துன்பங்களையும் துயரங்களையும் அவர்கள் தானே பாடுபட்டுத் துடைத்தெறிந்தார்கள்?
அதனால்தான் மக்களும் அவர்களை மறக்காமல் துதிக்கிறார்கள்,போற்றுகிறார்கள்.இதில் உனக்கென்ன பொறாமை?''

''ஒரு ஆமையும் இல்லை நாரதரே.அவர்களுக்கு மேடை போட்டுக் கூட பூஜையெல்லாம் செய்யட்டும்.அப்படியே எனக்கும் ஒரு மூலையில் ஒரு இடம் தரக் கூடாதோ?ஒரு காலத்தில் வருடா வருடம் இந்திரவிழா கொண்டாடுவார்கள்.விழா நாயகனே நான் தானே!அனைவருக்கும் உற்சாகம் கரை புரண்டோடும்.இப்பவெல்லாம் ஒரு மண்ணும் காணோம்.''

தேவேந்திரன் மேலும் தொடர்ந்தான்.


''வாழ்க்கையே ஒரு அர்த்தமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறதே சுவாமி.தினமும் சபையில் ரம்பா,திலோத்திமா,மேனகா,ஊர்வசி இவர்களின் அரதப் பழசான நாட்டியத்தைக் காணவே எரிச்சலாக இருக்கிறது.சரி மாளிகைக்குப் போய் உணவருந்தலாம் என்று உட்கார்ந்தால் பசியே எடுப்பதில்லை.ஏன் தான் அந்த பாழாய்ப் போன அமிர்தத்தைச் சாப்பிட்டோமோ என்றிருக்கிறது.''

''அப்படி எல்லாம் சொல்லக் கூடாது தேவேந்திரா.''

''அதை விடுங்கள். இரவு படுக்கச் சென்றால் அந்தக் கெழவி வந்து விடுகிறாள்."

0 comments: