நாரதரின் அசத்தல் ஐடியா

"இதுவரை எடுத்த இரண்டு முயற்சிகளும் தோல்வி.இனி என்னசெய்வது?வேறு எங்கே போய் யாரைப் பார்ப்பது?"என்றார் நாரதர்.

"இந்திரலோகத்தில் யாரையாவது தேர்ந்தெடுக்கலாம் என்றாலோ யாருக்குமே தகுதி இல்லை என்று ஒரே அடியாக முருகப் பெருமான் அறிவித்து விட்டார்"என்று அலுத்துக் கொண்டான் தேவேந்திரன்.

"நீயே தேவேந்திரனாகத் தொடர்ந்து இருந்து விடேன்.பிரச்சனையும் முடியும்,எனக்கு அலைச்சலும் மிச்சம்"என்றார் நாரதர்.

"அது மட்டும் முடியாது நாரதரே.சொன்ன சொல்லைத் திரும்பப்பெற முடியாது."

"சரி.வேறு யாரைப் பார்க்கலாம்?பேசாமல் பூலோகத்திற்குச் செல்வோமா?அங்கே தான் பலவகையான நரபுருஷர்கள் இருக்கிறார்களே."

பூலோகமா என்று யோசித்தான் தேவேந்திரன்.

"என்ன தயக்கம்?நீ தான் பலமுறை பூலோகத்தில் வாழ்ந்திருக்கிறாயே.முன்பொருதடவை........"
"

போதும் நாரதரே,போதும்.முன்பொருதடவை என்று சொல்லிக் கொண்டே பழைய கதைகளை ஞாபகப்படுத்தாதீர்கள்.இப்போது ஆக வேண்டியதைப் பேசுவோம்"

"சரி.தேவேந்திரா,நன்றாக யோசனை செய்து பார்த்ததில் பூலோகத்திற்குச் சென்று தேடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்றே தோன்றுகிறது.போவோமா பூலோகம்"ஹம்சத்வனி ராகத்தில் பாடிக் கொண்டே கேட்டார் நாரதர்.

"ஆகட்டும் நாரதரே.பூலோகத்தில் எங்கே சென்று தேடுவது?"

"எல்லாம் நம் நற்றமிழ் நாட்டிலெ தான்.வேறெங்கே! என்றார் நாரதர்.

"சரி.நாம் இதே தோற்றத்தில் செல்வதா இல்லை...."

"இதே தோற்றத்தில் சென்றால் ஏதோ மோசடிப் பேர்வழிகள் என்று போலீசார் நம்மைப் பிடித்து கேஸ் போட்டு விடுவார்கள்."

"என்னது,என்னென்னமோ சொல்கிறீரே,போலீசார்...ம்..கேஸ்..என்று.என்ன அது."

"அந்தச் சொற்கள் ஆங்கிலம் என்றொரு மொழிக்குரியவை.போலீஸ் என்றால் தமிழில் காவல் துறை என்று அர்த்தம்.கேஸ் என்றால் வழக்கு என்று அர்த்தம்."

"அப்படியே தமிழிலேயே சொல்லி இருக்கலாமே நாரதரே,ஏன் திடீரென்று வேற்று மொழியைக் கலந்து பேசுகிறீர்கள்?"

"தேவேந்திரா.நாம் போவது தமிழ்நாடு.அதுவும் அதன் தலைநகரத்திற்குச் செல்கிறோம்.இங்கே ஏறத்தாழ அனைவருமே ஆங்கிலச் சொற்கள் கலந்து தான் பேசுவார்கள்.அதுவும் பிராம்மணார்த்திகள் ஆங்கிலத்திலேயே அங்கங்கே தமிழைக் கலந்து பேசுவார்கள்.நாம் தான் எச்சரிக்கையாகப் புரிந்து கொள்ள வேண்டும்"

"ஏன்?தமிழில் அதற்குறிய சொற்களே கிடையாதா?தமிழை விட ஆங்கிலம் அவ்வளவு வளமை வாய்ந்த மொழியா?"

"அப்படியெல்லாம் இல்லை.அந்தந்த மாநிலங்களில் அவரவர் மொழிகளில் மட்டுமே பேசுகின்றனர்.கர்நாடகத்தில் கன்னடம்,ஆந்திராவில் தெலுங்கு,கேரளாவில் மலையாளம்,வங்காளத்தில் வங்காளம்,ஒரிசாவில் ஒரியா.குஜராத்தில் குஜராத்தி,சில மாநிலங்களில் பெரும்பான்மையோர் இந்தி என அவரவர்கள் மொழிகளில் பேசுகிறார்கள்.ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்தக் கலப்படமொழி.இங்கே அப்படிப் பேசினால் தான் மற்றவர்கள் மதிப்பார்கள்.இந்தக் கலப்பட மொழிக்குத் தமிங்கிலீஸ் என்று பெயராம்."

"யார் இப்படியெல்லாம் தமிழைக் கேவலப்படுத்தியது?"

"ஹூம்?எல்லாம் நம்மை வைத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் தான்."

நாரதர் விலாவாரியாகத் தேவேந்திரனிடம் விளக்கினார்.

தேவேந்திரனுக்கு ஒரே திகைப்பாக இருந்தது."சரி நாரதரே.நமது தெய்வீக சக்தியைப் பயன்படுத்தி அத்தகைய புலமை பெற்றவர்களாக நம்மை மாற்றிக் கொள்வோம்"என்றான்.

"நான் எக்காலத்திலோ மாற்றிக் கொண்டு விட்டேன்.அடிக்கடி பூலோகப் பயணம் செய்கின்றவனல்லவா?நீ மாற்றிக்கொள்"

"சரி,நாரதரே,மாற்றிக்கொண்டு விட்டேன்.நடையும் தோற்றமும் மாறிவிட்டன.ஆனால் உடை?எப்படியும் பூலோகத்தில் சிறிது காலம் இருக்க வேண்டும்.அதற்கேற்றாற்போல் உடையும் அமைய வேண்டும்."

'நாமோ எந்த இடத்திலும் வேலை பார்க்கப் போவதில்லை.வேலையும் தர மாட்டார்கள் என்பது வேறு விஷயம்.தமிழ்நாட்டின் தேசீய உடை வேட்டி சட்டை தான்.அதை அணிந்துகொண்டு போனால் ஒரு பய மதிக்க மாட்டான்.ஹும்..?என்ன செய்யலாம்?'நாரருக்கு மின்னல் வெட்டினாற்போல ஒரு யோசனை உதித்தது.உதட்டில் புன்னகையும் தோன்றியது.'சபாஷ் நாரதா' என்று மனதுக்குள் தன்னைத் தானே பாராட்டிக் கொண்டார்.

"சீக்கிரம் சொல்லுங்கள் நாரதரே,என்ன உடை உடுத்தலாம்?"

"வேறென்ன அரசியல்வாதியின் உடை தான்"என்றார் நாரதர்.

"என்ன அரசியல்வாதியின் உடையா?அரசியல் வாதிக்கென்று ஒரு தனிப்பட்ட உடையா?

"அதெல்லாம் ஒன்றுமில்லை தேவேந்திரா.தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க உடை தான்.என்ன ஒரு சில சின்னஞ்சிறிய மாற்றங்களுடன் உடுத்தினால் அரசியல்வாதியின் உடை ஆகிவிடும்.வேட்டி தான்.ஆனால் என்றும் எப்போதும் வெள்ளை வெளேர் என்று இருக்க வேண்டும்.நாம் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களோ அந்தக் கட்சியை அடையாளப்படுத்திக் காட்டும் வண்ணங்கள் வேட்டியின் கரையாக இருக்க வேண்டும்.மேல் சட்டை முழுக்கை சட்டையாக இருக்க வேண்டும்.அதுவும் வெள்ளை வெளேர் தான்.சட்டையின் இடது பக்கத்தில் ஒரு பை.அதற்குள் என்ன வைக்கிறோமோ வைக்க மாட்டோமோ கட்சித் தலைவரின் உருவம் கொண்ட ஒரு அட்டை இருக்க வேண்டும்.அல்லது அவரது வாரிசுவின் உருவம் கூட இருக்கலாம்.ஆனால் பைக்குள் வைக்கும் அட்டை உருவம் மற்றவர்கள் பார்வைக்கு லேசாகத் தெரிய வேண்டும்.தோளில் ஒரு துண்டு கூடப் போர்த்திக் கொள்ளலாம்.அல்லது ஒரு பக்கமாகப் போட்டுக் கொள்ளலாம்.அதிலும் கட்சிக் கரையும்,சின்னமும் தெரிய வேண்டும்.அவ்வளவு தான்"

"அற்புதமாகச் சொல்கிறீர்கள் நாரதரே.அப்படியே உடுத்திக் கொள்வோம்.சரிஇங்கெல்லாம் எத்தனை கட்சிகள் இருக்கும்?ஏறத்தாழ..சீச்சீ..தமிழில் மட்டும் பேசிக் கொண்டிருக்கிறேனே.ஒரு ஆவரேஜா நான்கைந்து கட்சிகள் இருக்குமா?"

"நாசமாப் போச்சு.நான்கைந்தா?சொச்சம்?"

"நாரதரே.இதென்ன மொழி?

"ஓ!நாசங்கிறது சமஸ்கிருதம்.அதை நம்ம மொழின்னு இங்கிருக்கிறவா சொல்றா.சொச்சங்கிறது கலோக்கியலா சொல்றது.மீதம் என்ற சொல்லைத் தனியாகப் பயன்படுத்தாமல் 'மிச்சம் மீதம் என்கிறோமில்லையா!அந்த மிச்சத்தின் விகுதி சொச்சமாகி விட்டது"

"உங்கள் இலக்கணம் தவறு நரதரே.சொச்சமென்பது மிச்சத்தின்..."

நாரதர் குறுக்கிட்டார்."தவறோ சரியோ.அரசியல்வாதியின் பேச்சில் அர்த்தம்,தப்பு,தவறு கண்டுபிடிக்கக் கூடாது."

"பேசுவதில்கூட இவ்வளவு வசதி இருக்கிறதா?"

"பேசுவதில் மட்டுமா.இவர்கள் வாழ்றதைப் பார்த்தால் பிரமித்து போவாய்"

"சரி.உடை ஓகே.ஆனால் எந்தக் கட்சி உடை உடுத்துவது?"

"அது நம் விருப்பம் தேவேந்திரா.ஒரு நாளைக்கு ஒரு கட்சிக்கு ஒரு உடை."

"அது கூடாது நாரதரே.அவ்வாறு செய்வது தினம் தினம் கட்சி மாறுவதாக ஆகி விடுமல்லவா?"

"இங்கே என்ன வாழ்கிறதாம்.பலருக்கு அது தான் பொழைப்பே.பார்த்துக் கொண்டே வா?

"சரி முதலில் எந்தக் கட்சி உறுப்பினர் ஆகப் போகிறோம்?"

"இப்போதைக்குத் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் தி.மு..வில் தான்."

7 comments:

மணிவண்ணன் said...

ஆஹா...கதை சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது! கலக்குங்கள் கலக்குங்கள்.

துக்ளக்கில் ஒரு தொடர் வந்தது, சோவோ சத்யாவோ எழுதியது. அந்த சாயல் இருக்கிறது.

வெண்பூ said...

//"சரி முதலில் எந்தக் கட்சி உறுப்பினர் ஆகப் போகிறோம்?"

"இப்போதைக்குத் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் தி.மு.க.வில் தான்."
//

அப்படி போடு... இப்பதான் கதை முக்கிய நீரோட்டத்தை (மெயின் ஸ்ட்ரீம்) தொட்டிருக்கு.. கலக்குங்க.

Adhusari said...

Nalla pogudhu. ippadiye maintain pannunga!

விஜய்கோபால்சாமி said...

சர்தார், ரொம்ப காக்க வைக்காதிங்க.... ரெண்டு நாளைக்கு ஒரு போஸ்டாவது போடுங்க, முடியலைன்னா தெனம் ஒரு போஸ்டாவது போடுங்க... அந்த தேவேந்திரன் உங்ககிட்ட சிக்கிக்கிட்டு படுற பாட்டை நாங்களும் ரசிக்க வேண்டாமா

விஜய்கோபால்சாமி said...

சத்தார்,

கமெண்ட் மாடரேஷன் போடுங்க. ஏன்னா, கதை பார்ப்பனர், தி.மு.க, தேவர்களின் மோசடின்னு காண்ட்ரவர்ஷியலான டாபிக்ல போகுது. பாத்துங்கோ...

திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...

வாங்க மணிவண்ணன்,வெண்பூ,அதுசரி,மற்றும் விஜயகோபால்சாமி நன்றி.

திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...

வாங்க விஜயகோபால்சாமி.கதையின் கருவே நகைச்சுவையும் நையாண்டியுந்தானே.வாழ்க்கையோடு ஒட்டியதென்றால் எல்லாந்தான் வரும்.பார்ப்போம்.முடியாத பட்சத்தில் உங்களின் ஆலோசனையைக் கேட்காமலாபோய்விடுவேன்?