முருகப் பெருமான் விடை அருளிய படலம்

தேவேந்திரனின் இப்பதிலைக் கேட்டதும் சபையே கலகலப்பானது.அங்கு கூடி இருந்த சிவனடியார்களும் பூத கணங்களும் பக பகவென்று சிரிக்க ஆரம்பித்தனர்.முருகப் பெருமானுக்குக் கோபம் கோபமாக வந்தது.இருந்தாலும் சபையின் கண்ணியம் கருதி அடக்கிக் கொண்டார்.

இப்போது ஈசன் பேசலானார்.

"முருகா.அனைவரின் விடைகளையும் கேட்டாயிற்றல்லவா? இவைகளில் எது சரியான விடை என்று நீயே விளக்கிச் சொல் பார்க்கலாம்."

"தந்தையே.நீங்கள், அம்மை உட்பட அனைவரது விடைகளுமே தவறு.சரியான விடை ஒன்றும் ஒன்றும் இரண்டு தான்."

அனைவரும் ஒருசேரக் குறுக்கிட்டனர்.

"பொறுங்கள்.பொறுங்கள்.விரிவாக விளக்குகிறேன்."

"முருகா.எங்கள் பொறுமையைச் சோதிக்காதே.நீ சொன்ன விடை ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது எங்களுக்கும் தெரியும்.நீ என்னமோ மிகப் பெரிய தத்துவம் பொதிந்திருக்கிறது என்றெல்லாம் சொன்னாயே என்று மண்டையைக் குழப்பிக் கொண்டு நாள் பூராவும் யோசித்து யோசித்து புதிதாக இன்னொரு விடையைக் கண்டுபிடித்தோம்.நீ என்னடாவென்றால் இப்படிப் போட்டு உடைக்கிறாயே"என்று உமையன்னை சலிப்புடன் கேட்டாள்.

"ஆமாம் அன்னையே.உங்கள் அனைவரையும் சோதிக்கவே இப்படிப் பீடிகை போட்டுக் கேட்டேன்.தத்துவம் பொதிந்திருக்கிறது என்றும்,ஒருவர் ஒரு விடை தான் சொல்ல வேண்டுமென்றெல்லாம் நிபந்தனை போட்டது எல்லாம் நீங்கள் எந்த அளவுக்குப் பகுத்தறிவை உபயோகிக்கிறீர்கள் என்று பார்க்கத்தான்.ஆனால் அனைவருமே குழம்பிப் போய் விட்டீர்கள்.நீங்கள் சொன்ன ஒவ்வொரு விடையும் தவறு என்று சொல்லிவிடலாம்.அது உங்களுக்கே தெரியும்.ஆனால் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற விடையை யாராலும் மறுக்க இயலாதே!"

யாரும் பதில் பேசவில்லை.

முருகப் பெருமான் தொடர்ந்தார்."ஆனால் இந்தத் தேவேந்திரன் இருக்கிறாரே.இவர் சொன்ன விடையைத் தான் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.நாரதராவது எனக்குத் தெரியவில்லை என்று ஒதுங்கிக் கொண்டார்.நீயும் அவ்வாறே செய்திருக்கலாம்"

தேவேந்திரனுக்குச் சுருக்கென்றது.

"பாதிவிடை தெரிந்ததாம்.ஒன்றும் ஒன்றும் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாமாம்.ஆனால் நிச்சயமாக இரண்டு கிடையாதாம்."

"தேவேந்திரா!இந்தப் பதிலைச் சொல்ல உன்னை என்ன செய்வதென்றே தெரியவில்லை.நீ தேவேந்திரப் பதவிக்கே தகுதி இல்லாதவன் என்பதைக் காட்டி விட்டாய்.இப்போதே உன்னை அப் பதவியிலிருந்து நீக்குகிறேன் பார்."என்று சொல்லிக் கொண்டே முருகப் பெருமான் தன் கையிலிருக்கும் வேலைத் தூக்கினார்.

அப்படியே நின்ற இடத்திலிருந்து நெடுஞ்சாண்கிடையாக முருகப் பெருமானின் காலடியில் விழுந்தான் தேவேந்திரன். "முருகப் பெருமானே!பொறுத்தருள வேண்டும்.நான் கையிலைக்கு வந்த காரணமே எனக்கு இந்தத் தேவேந்திரப் பதவி வேண்டாம் என்று முறையிடத்தான்.என் விருப்பம் இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நினைக்கவில்லை.இன்றே இப்பொழுதே என்னை தேவேந்திரப் பதவியிலிருந்து நீக்கிவிடுங்கள்.ஹூஹும்.இப்போதே நீக்கி விடுங்கள்.இதோ..உங்கள் கால்களைப் பிடித்துக் கொண்டேன்.என்னை நீக்காவிட்டால் நான் உங்கள் கால்களை விடப் போவதில்லை."என்று கதறி அழ ஆரம்பித்தான்.

முருகப் பெருமானுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.'என்னடா இது,புலி வாலைப் பிடித்த கதையாக இருக்கிறதே.இவனை என்ன தான் செய்யலாம்'என்று யோசித்துக் கொண்டே கூறினார்.

"என்ன இது தேவேந்திரா.எழுந்திரு.எடுத்ததற்கெல்லாம் இப்படி படீர் படீர் என்று இடம் காலம் பார்க்காமல் காலில் விழுகிறாயே.நன்றாகவா இருக்கிறது?"

"நன்றாகத்தான் இருக்கிறது முருகப் பெருமானே.என்னை இப்பதவியிலிருந்து விடுவித்தேன் என்று சொல்லுங்கள்.அல்லது விடுவிக்க ஏற்பாடு செய்கிறேன் என்றாவது சொல்லுங்கள்."

"சரி.எழுந்திரு."

தேவேந்திரன் எழுந்தான்.அனைவரையும் பணிவுடன் வணங்கிக் கொண்டே தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தான்.

சபை பழைய நிலைக்குத் திரும்பியது.

எல்லோரும் ஆசுவாசப்படுத்திக் கொண்டபிறகு தேவேந்திரன் ஆற அமரத் தன் கோரிக்கையைச் சொன்னான்.திருமாலின் சிபாரிசின்படியே இங்கு வந்திருப்பதாகவும் சொன்னான்.

தீவிரமான ஆலோசனைக்குப் பிறகு தேவேந்திரனின் கோரிக்கையை ஈசன் உட்பட அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

பிறகு ஈசன் தேவேந்திரனிடம்,"நீ இன்றே பிரம்ம லோகம் சென்று பிரம்மனிடம் முறையிட்டு வா. நாளை உன் இந்திர சபையில் அனைத்துத் தேவர்களின் பொதுக்குழு கூட்ட ஏற்பாடு செய்.பொதுக்குழுவில் பேசி வேறு ஒரு தேவேந்திரனைத் தேர்ந்தெடுப்போம்."என்றார்.

உடனே தேவேந்திரனும் நாரதரும் பிரம்ம லோகம் புறப்பட்டார்கள்.

8 comments:

உண்மைத்தமிழன் said...

சர்தார் அவர்களே..

நான்தான் நீங்கள் என்று நினைத்து எனக்கு அன்பார்ந்த அனானி நண்பர்கள் குமுறித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். எழுத்தைப் பார்த்து இல்லை என்பதை உணர்வார்கள் என்று நினைத்தேன். திருந்தியபாடில்லை.

எனக்காக கொஞ்சம், தங்களது திருமுகத்தைக் காட்டக் கூடாதா..?

வெண்பூ said...

பூலோகத்துக்கு வந்து தேவேந்திரா எந்த கட்சியில சேரப் போறாருன்னு எனக்கு இப்பவே தெரிஞ்சிடுச்சே....
//தேவேந்திரா.எழுந்திரு.எடுத்ததற்கெல்லாம் இப்படி படீர் படீர் என்று இடம் காலம் பார்க்காமல் காலில் விழுகிறாயே//

வெண்பூ said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
சர்தார் அவர்களே..

நான்தான் நீங்கள் என்று நினைத்து எனக்கு அன்பார்ந்த அனானி நண்பர்கள் குமுறித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். எழுத்தைப் பார்த்து இல்லை என்பதை உணர்வார்கள் என்று நினைத்தேன்.
//

கண்டிப்பாக இது உண்மைத்தமிழன் எழுதியதில்லை என்பதற்கு பதிவின் நீளமே ஒரே சாட்சி...

Subramanian said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
சர்தார் அவர்களே..

//எனக்காக கொஞ்சம், தங்களது திருமுகத்தைக் காட்டக் கூடாதா..?//

என் உண்மையான பக்தரே!உங்கள் பக்தியை மெச்சினேன்.
கடவுளைக் கண்டவா விண்டிலர்;விண்டவர் கண்டிலர் என்பர் உண்மையான அடியார்கள்.

இம்மாத இறுதியில் இந்தியா வருகிறேன்.சென்னைக்கு வந்ததும் நானே உங்கள் முன் பிரத்தட்சண்யமாகிறேன்.அப்போது என் திருமுகத்தைக் கண்ணாறக் காணலாம்.வேண்டும் வரங்கள் அருளுகிறேன்.ஆனால் ஒன்று.என்னைக் கண்டதைக் கண்டபடி யாரிடமும் சொல்லப்படாது.
இப்படிக்கு,
முருகப் பெருமான்.

Subramanian said...

வாங்க வெண்பூ.(என்ன அழகான பெயர்.!)

நான் அவரில்லை தான்.

தேவேந்திரன் பூலோகத்திற்கு வந்தபின் என்ன செய்யப் போகிறான் என்பது(இப்போதைக்கு)எனக்கே தெரியாதே!

யாத்ரீகன் said...

என்னங்க இது .. கடந்த ரெண்டு பகுதியில ஒரு கிளு கிளுப்பே இல்ல ;-) ஆனா சுவாரசியமா எழுதுறீங்க :-)

Subramanian said...

வாங்க யாத்திரீகன்.
கிளுகிளுப்பு என்பது தேவைப்படும் இடத்தில் மட்டுமே தூவப்படும்.உப்பு மாதிரி.

யாத்ரீகன் said...

:-) சரிதான் ..