நகுஷனைத் தேடி நாரதர் தூது

"சரி.என்னமோ அசரீரியாகச் சொன்னாயே,இப்போது சொல்.என்ன சொன்னாய்?"என்று கேட்டார் முருகப் பெருமான்.

"புதிய தேவேந்திரனைத் தேர்ந்தெடுப்பதற்காக எங்கும் சென்று அலைய வேண்டாம்.இங்கேயே உங்களுக்குள்ளேயே ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்றேன்.தேவேந்திரனாகும் தகுதி கொண்டவன் யாரும் வேறு எந்த உலகத்திலும் இல்லை."

"எங்களுக்கு அறிவுரை சொல்லும் தகுதி உனக்கு இல்லை.முதலில் இந்த இடத்தை விட்டுப் போய் விடு."

"நான் போகத்தான் போகிறேன்.எல்லாம் உங்கள் நன்மைக்குச் சொன்னேன்.விருப்பமிருந்தால் கேளுங்கள்.இல்லாவிட்டால் உங்கள் அனைவரின் தலைவிதி,"

"எங்களுக்கு நன்மை செய்ய அந்த ஆதிசக்தி இருக்கிறாள்.நீ வந்த வேலை முடிந்ததல்லவா?போ இங்கிருந்து."

சாத்தான் மறைந்து விட்டான்.

தேவ சபை அப்படியே உறைந்திருந்தது.

இப்போது நாரதர் தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்.
"எம்பிரானே,எனை ஈன்றத் தம்பிரானே,சத்குருவே,தேவர் குலவழித் தோன்றல்களே,எல்லோரும் சுய நினைவுக்கு வாருங்கள்.சாத்தான் வந்து போனது,புயல் அடித்து மழை ஓய்ந்தாற்போல் இருக்கிறது.அதைப் பற்றிப் பேச இது சரியான நேரமல்ல.நம் பிரச்சனையைத் தொடர்ந்து பேசுவோம்."

இப்போது பரந்தாமன் பேச ஆரம்பித்தார்."அது சரி நாரதா.நீ தான் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டாற்போல் ஓரிடத்தில் நிற்காமல் பல லோகங்களையும் சுற்றுபவனாயிற்றே,நீ சொல் பார்க்கலாம்,இவ்வளவு லோகங்களில் சகல சாஸ்திரங்களையும் படித்து அதன் படியே வாழ்ந்து கொண்டிருக்கும் யாரையாவது நீ பார்த்திருக்கிறாயா?"

"இல்லை பிரபோ.எனக்குத் தெரிந்து இல்லை...ஆனால்..."

"என்ன ஆனால்?"

"முன்பொருமுறை தேவேந்திரன் பதவி தற்காலிகமாகக் காலியாக இருந்தபோது நகுஷன் என்ற சக்கரவர்த்தியைப் பூலோகத்திலிருந்து தானே தேர்ந்தெடுத்தோம்?"

"ஆமாம்.அதற்கென்ன இப்போது?"

"இல்லை...வேறு யாரும் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் அந்த....

"அவனைத்தான் அகத்திய ரிஷி சபித்துப் பாதாள லோகத்தில் சர்ப்பமாக வாழும்படித் தள்ளி விட்டாரே!"

"ஆமாம்.நான் வேண்டுமானால் போய் அவனைக் கூட்டிவந்து......."

"அவன் தான் சர்ப்பமாக இருப்பானே நாரதா?"

"ஆமாம்.அகத்திய ரிஷியிடம் நாம் எல்லோரும் கேட்டுக் கொண்டால் அவனை மீண்டும் உரு மாற்றி விடலாமே!"

"அதுவும் நல்ல யோசனை தான் நாரதரே.என்ன சொல்கிறீர்கள் ஈசனே"

"சொல்வதற்கு என்ன இருக்கிறது பரந்தாமா.சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாருங்கள்.சபை கூடி வெகு நேரமாகிறது."

"சரி நாரதா.நீ உடனே கிளம்பு. முதலில் அகத்திய ரிஷியிடம் செல்.நகுஷனுக்கு அவர் அளித்த சாபத்திற்கு விமோசனம் என்ன என்பதை அவரிடமே கேள்.பிறகு நகுஷனிடம் சென்று விபரம் தெரிவித்து அவனையே அழைத்து வா."

"உத்தரவு பரந்தாமா."

"சரி.இனிமேல் புதிய தேவேந்திரனைத் தேர்ந்தெடுக்கும் பணியை மும்மூர்த்திகள் மட்டுமே பார்த்துக் கொள்வார்கள்.இதற்கான அதிகாரத்தை இப்பொதுக்குழு வழங்குகிறது.இதற்கு அடையாளமாக எல்லோரும் கரவொலி எழுப்புங்கள்."

அனைத்துத் தேவர்களும் கை தட்டினார்கள்.

"இத்துடன் இப்பொதுக்குழுவின் கூட்டம் முடிவடைகிறது.சபை கலையலாம்."என்றான் தேவேந்திரன்.

அடுத்த நொடியில் நாரதர் பாதாள லோகத்தில் இருந்தார்.அங்கிருக்கும் சகல ஜீவராசிகளிடமும் நகுஷசர்ப்பத்தைப் பற்றி விசாரித்தார்.நகுஷசர்ப்பம் அங்கில்லை.

0 comments: