"தேவேந்திரப் பதவியும் வேண்டாம்.அங்கே கிடைக்கும் பொங்கச் சோறும் வேண்டாம்"

நகுஷ சர்ப்பத்தைக் காணாமல் திகைத்துப் போன நாரதர் பாதாள லோகத்திலிருந்து அதற்கு அருகாமையில் இருக்கும் சர்ப்ப லோகத்திற்குச் சென்றார்.நாரதரைக் கண்டதும் சர்ப்ப ராஜன் அவரை எதிர்கொண்டழைத்து உரிய மரியாதைகள் செய்து உள்ளே அழைத்துச் சென்றான்.நகுஷ சர்ப்பத்தைப் பற்றிச் சர்ப்ப ராஜனிடம் விசாரித்தார்.நகுஷ சர்ப்பம் அங்கே இருப்பதாக சர்ப்பராஜன் ஒப்புக்கொண்டான்.

சர்ப்ப ராஜனின் இந்தப் பதிலைக் கேட்டு நாரதர் திகைப்படைந்தார்.இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

"சர்ப்ப ராஜனே.என்னை அவனிடம் அழைத்துச் செல்லமுடியுமா?"

"அவ்வாறே ஆகட்டும்.ஆனால் அங்கு சென்றாலும் உடனே பார்க்க முடியாது.'

"ஏன்"

"அவர் எங்கள் சர்ப்பலோகத்தின் இனப் பெருக்கத்திற்குப் பேருதவி செய்து கொண்டுள்ளார்.எனவே உடனடியாகப் பார்க்க முடியாது.இருந்தாலும் அங்கே சென்று காத்திருப்போம்."

நாரதர் இந்தப் பதிலைக் கேட்டுத் திகைத்தார்.சிறிது நேரம் அவருக்கு ஒன்றும் புரியவில்லை.'என்னவானாலும் ஆகட்டும்,முதலில் நகுஷ சர்ப்பம் இங்கிருப்பதைத் தெரிந்து கொண்டாயிற்று.அங்கே போய்த்தான் பார்ப்போமே'என்று எண்ணியவராய் சர்ப்ப ராஜனைப் பின் தொடர்ந்தார்.

சில யோசனை தூரம் சென்றதும் நகுஷ சர்ப்பம் இருக்கும் இடத்தை அடைந்தனர்.அங்கே கண்ட காட்சி நாரதரைத் திகைக்க வைத்தது.

எங்கு பார்த்தாலும் பலவகையான சர்ப்பங்கள் அங்கே ஊர்ந்துகொண்டும் நெளிந்துகொண்டும் இருந்தன.சின்னஞ்சிறு குட்டி சர்ப்பங்கள் முதல் பெரிய வகை சர்ப்பங்கள் வரை பலநிலைகளில் உலவிக்கொண்டிருந்தன.அங்கிருந்த விசாலமான பூங்காவில் இரண்டு பெரிய சர்ப்பங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவாறே சரச சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.

"அதோ பாருங்கள் நாரதரே.நகுஷ சர்ப்பத்தின் விளையாட்டை.சல்லாபத்தில் அவரை மிஞ்ச வேறு சர்ப்பமே இல்லை.இவரால் தான் இன்றைக்கு சர்ப்பலோகமே வெகுவாகப் பல்கிப் பெருகி இருக்கிறது."என்றான் சர்ப்ப ராஜன்.

வெகுநேரம் கழித்து இரண்டு சர்ப்பங்களும் ஒரு வழியாகப் பிரிந்தன.அவைகளில் ஒன்றான நகுஷ சர்ப்பம் நாரதரைப் பார்த்ததும்,அங்கே வரிசையில் காத்திருந்த மற்ற சர்ப்பங்களிடம் ஏதோ சொல்லிவிட்டு நாரதரை நோக்கி வந்தது.

"வாருங்கள் நாரதரே,தங்கள் வரவு நல்வரவாகுக"என்று முகமன் கூறியவாறே நாரதரை வரவேற்றது.

"என்ன நகுஷச் சக்கரவர்த்தி......"என்ற நாரதரை இடைமறித்த சர்ப்பம்,"இல்லை இல்லை.அது பழைய பெயர்.இப்போது என்னை நகுஷ சர்ப்பம் என்றே அழையுங்கள்."என்றது.

"சரி சரி.நகுஷ சர்ப்பமே.உங்களுக்குப் பாதாள லோகத்தில் வசிக்குமாறு தானே சாபம்?இங்கே எப்படி வந்தீர்கள்?"

"நான் பாதாள லோகத்தில் தான் இருந்தேன்.இங்கே சர்ப்ப லோகத்தில் சர்ப்பங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து கிட்டத் தட்ட அழிந்துவிடும் நிலைக்கு வந்து விட்டதாம்.எனவே இது தொடர்பாக சர்ப்பராஜன் பிரம்மனிடம் முறையிட்டார்.பிரம்மனும் அகத்திய ரிஷியிடம் முறையிட்டார்.இருவரும் சேர்ந்து வந்து என்னிடம் முறையிட்டனர்.யார் எது கேட்டாலும் உடனே நிறைவேற்றிவைப்பதில் எனக்கு இணை யாருமில்லை அல்லவா?அதனால் தானே என்னைத் தேவேந்திரனாகவே தேர்ந்தெடுத்தீர்கள்?எனவே பிரம்மனும் அகத்திய ரிஷியும் கேட்டுக் கொண்டதன்பேரில் சர்ப்பங்களின் இனப் பெருக்கக் காலங்களில் மட்டும் நான் இங்கு வந்து இனப் பெருக்கம் செய்யும் பணியை மேற்கொண்டிருக்கிறேன்.மற்ற காலங்களில் மீண்டும் பாதாள லோகம் சென்று விடுவேன்."

நாரதர் வியந்தார்.நகுஷனுக்கு இப்படி ஒரு வாழ்வா?இனப் பெருக்கத்தின்போது சர்ப்பங்கள் ஒன்றை ஒன்று பலவாறாகப் பின்னிப் பிணைந்து பல நாட்கள் தொடர்ந்து இணை சேர்ந்திருக்குமே! என்று எண்ணியவாறே திரும்பிப் பார்த்தார்.அங்கே பூங்காவில் ஏராளமான சர்ப்பங்கள் நகுஷ சர்ப்பத்தின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தன.

"சரி நாரதரே,என்னைப் பார்க்க வந்ததில் ஏதேனும் விசேஷம் உண்டா?எனக்கு நிறைய வேலை இருக்கிறது."

"நகுஷ சர்ப்பமே.உன் சாபம் விமோசனம் அடையும் நாள் நெருங்கி விட்டது. நீ மறுபடியும் தேவேந்திரனாகும் பொன்னான வாய்ப்பு வந்திருக்கிறது.உடனே என்னுடன் புறப்படு."

"என்ன சொல்கிறீர்கள் நாரதரே?"

நாரதர் நடந்தவைகளை விளக்கிச் சொன்னார்.

"வேண்டாம் நாரதரே.எனக்கு அந்தப் பதவி வேண்டாம்.இங்கேயே மிகவும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.நானுண்டு,என் இனப் பெருக்கப் பணி உண்டு என்று மும்முரமாகக் கடமையே கண்ணாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.அங்கே வந்தால் நான் என்ன தான் முயன்றாலும் இந்திராணி கிடைக்க மாட்டாள்.வேறு வழி இல்லாமல் அவசரத்தில் நானும் ஏதாவது செய்யப் போக,மீண்டும் யாராவது சாபம் கொடுப்பார்கள்.இங்கே பாருங்கள்.நேரம் காலமென்றில்லாமல் இதேவேலையாக இருக்கிறேன்.அதுவும் ஒரு இணை இல்லை.பலப் பல இணைகள்.உங்களுக்குத் தான் ஏற்கனவே இது போன்ற அனுபவம் இருக்கிறதே.முன்னொரு சமயத்தில் கோபிகாஸ்திரீகள் ரூபங்களில் இருந்த கிருஷ்ணனுடன் போதும் போதும் என்ற அளவுக்குக் கணக்கு வழக்கில்லாமல் சரச சல்லாபம் புரிந்தவராயிற்றே.இந்த சுகத்தைப் பற்றி உங்களுக்கு நான் வேறு விளக்க வேண்டுமா?"

நாரதருக்கு என்னமோபோல் ஆகி விட்டது.இருந்தாலும் சமாளித்துக் கொண்டார்.

"அதெல்லாம் பழைய கதை நகுஷ சர்ப்பமே.இப்பொழுது நான் சொல்வதைக் கேள்.தயவு செய்து நீ வந்து....."

"மன்னியுங்கள் நாரதரே.எது கேட்டாலும் நிறைவேற்றி வைப்பவன் நான் என்பதைக் கூடத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.என்னால் வர முடியாது.அந்தத் தேவேந்திர வேலையும் வேண்டாம்.அங்கே கிடைக்கும் பொங்கச் சோறும் வேண்டாம்."

மேற்கொண்டு நாரதரால் எதுவும் பேச முடியவில்லை.நகுஷ சர்ப்பத்திடமும் சர்ப்ப ராஜனிடமும் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

0 comments: