ந...மீ...தா...ந...மீ...தா...

கயிலைக்குள் நுழைந்தவர்கள் கண்ட காட்சி அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.நாள்தோறும் நமசிவாய கோஷங்களும் வேத மந்திரங்களும் முழங்கிக் கொண்டிருக்கும் கையிலை அப்போது மிகவும் அமைதியாக இருந்தது.நிசப்தம் என்றால் அவ்வளவு நிசப்தம்.

அம்மையும் அப்பனும் வழக்கமாக அமர்ந்திருக்கும் இடத்தில் காணோம்.முருகப் பெருமான் மெல்ல சுற்றும் முற்றும் பார்த்தார்.ரொம்ப நேரம் அங்குமிங்கும் தேடி ஒரு வழியாகக் கண்டுபிடித்து விட்டார்.

சிவபெருமான் நடன அரங்கின் ஒரு மூலையில் தூணைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்.பார்ப்பதற்குத் தூணுடன் பேசிக்கொண்டிருக்கிற மாதிரி தெரிந்தது.முருகன் அருகில் சென்றார்.அவர் பின்னாலேயே தேவேந்திரனும் நாரதரும் சென்றார்கள்.சிவபெருமான் அந்தத் தூணையே வெறித்துப் பார்த்தவண்ணம் இருந்தார்.கையில் ஒரு கரிக்கட்டை இருந்தது.

முருகப்பெருமானும் மற்றவர்களும் அந்தத் தூணைப் பார்த்தார்கள்.தூணில் மேலிருந்து கீழே வரை வெறும் எண்களால் எழுதியும் கிறுக்கியும் இருந்தன.தேவேந்திரன் தூணைச் சுற்றிச் சுற்றி வந்து பார்த்தான்.ஒரு இடம் விடாமல் கிறுக்கப்பட்டிருந்ததைக் கண்டு திகைத்துப் போனான்.
இதென்ன வந்த இடத்தில் இப்படி ஒரு சோதனை?என்னதான் சந்தேகம் இருந்தாலும் இப்படியா தூண் முழுதும் எழுதிப்பார்ப்பார்கள்?
தற்செயலாக அடுத்த தூணைப் பார்த்தான்.அங்கும் இதே கிறுக்கல் தான்.இப்படி நான்கைந்து தூண்களில் கண்டமேனிக்குக் கிறுக்கியிருந்ததைப் பார்த்த இந்திரன் நாரதரிடம் மெல்ல முணுமுணுத்தான்.

"என்ன நாரதரே.சங்கதி எப்படியோ போய்க்கொண்டிருக்கிறதே."

நாரதரும் திகைத்துப் போயிருப்பதாகவே தெரிந்தது.

"கொஞ்சம் பொறு தேவேந்திரா"என்று கூறியவாறே மீண்டும் முருகப் பெருமான் அருகில் சென்று நின்று கொண்டார்.

தேவேந்திரன் புத்தி வேறு வழியில் ஓடியது.

'சரி அப்பன் கிறுக்கனாகி விட்டார். அம்மையின் நிலை என்னவோ.தேடித் தான் பார்ப்போமே என்று மனதுக்குள் கூறியவாறே மற்ற இடங்களில் தேட ஆரம்பித்தான்.கண்டுபிடித்தும் விட்டான்.

நடன அரங்கின் கடைசியில் ஒரு மூலையில் உமையன்னை உட்கார்ந்திருந்தார்.சுவர் பூராவும் எண்களால் கிறுக்கி இருந்தன.தேவேந்திரன் அருகில் வந்ததையோ பணிவுடன் குனிந்து வணங்கியதையோ கவனித்ததாகத் தெரியவில்லை.

'ஐயையோ!அம்மைக்கும் அப்பனுக்கும் ஏதோ ஆகிவிட்டது.அலகிலா உலகையே பம்பரம் போல் ஆட்டுவிக்கும் அம்பலத்தான் தம்பதியர்களே இப்படிக் கிறுக்கர்களாகிவிட்டார்களென்றால்...யாரோ சூனியம் வைத்திருப்பார்களோ இவர்களுக்குப் பதிலாக நம்ம கதை போல் இன்னொரு சிவனைத் தேட வேண்டி வருமோ.....ஐயையோ!அப்படி ஒருவேளை தப்பித் தவறி நேரிட்டால் இன்னொரு அம்மையையும் அப்பனையும் தேடும் பணிதானே முதலில் பார்ப்பார்கள்.அப்படியானால் என் பிரச்சனை இரண்டாவதாகி விடுமே!மீண்டும் அந்தக் கிழவியின் தொந்தரவைத் தாங்க வேண்டுமா?நினைக்கவே பயமாக இருக்கிறதே.வயிற்றை என்னமோ செய்கிறதே.'

அப்போது உமையன்னை தற்செயலாக நிமிர்ந்து பார்த்தார்."வா தேவேந்திரா" என்றார்.

'அப்பாடா!அன்னைக்கு ஒன்றும் ஆகவில்லை' என்று நினைத்தவாறே பரமசிவன் நின்றிருக்கும் இடத்தைப் பார்த்தான்.அவரோ தொடர்ந்து தூணையே வெறித்துப் பார்த்த வண்ணம் இருந்தார்.அருகில் நின்றிருந்த முருகப் பெருமானும் நாரதரும் பரமசிவனைப் பார்த்தவாறே நின்றிருந்தார்கள்.

இப்போது தேவேந்திரனுக்கு மேலும் பயம் அதிகரித்துவிட்டது.அப்பன் ஆழ்ந்த சிந்தனைக்குள் போய்விட்டால் அவரை யார் எழுப்புவது?

முன்பொருமுறை பரமசிவன் இதேமாதிரி சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது உமையன்னை அவர் பின்னால் சென்று விளையாட்டாக அவரது கண்களிரண்டையும் தன் இரு கைகளால் பொத்திய நிகழ்ச்சி ஏனோ தேவேந்திரனுடைய நினைவுக்கு வந்து தொலைத்தது.அவன் மூளையில் ஏதோ ஒரு சுரப்பி தாறுமாறாகச் சுரந்தது.

உடனே தேவேந்திரன் "ந..மீ..தா...ந...மீ...தா..."என்று அலறியவாறே உமையன்னையின் காலடியில் சாஷ்டாங்கமாக விழுந்தான்.

2 comments:

யாத்ரீகன் said...

இதுக்கு என்ன அர்த்தம் சொல்லப்போறீங்களோ ;-)

Subramanian said...

இன்னிக்கான பதிவைப் பாருங்கோ