சைத்தானின் வருகை

கேள்வி கேட்ட புதிய தேவர் இடை மறித்தார்."கச முசா சமாச்சாரமெல்லாம் நமது தேவர் குலத்திற்கே இலக்கணமல்லவா?அதெல்லாம் இருக்காது.வேறு ஏதாவதாக இருக்கும்.நான் கேட்கிறேனே."

மூத்த தேவர் அவரை விடவில்லை.

"பேசாமல் உட்கார மாட்டாய்?பொதுக்குழுவுக்கு வந்தோமா,வயிறாற சோம பானம் குடித்தோமா,அப்சரஸ்களின் நடனம் கண்டு களித்தோமா,நமது மாளிகைக்குத் திரும்பினோமா என்று இருக்கவேண்டும்.சும்மா உட்கார்ந்து நடப்பதை வேடிக்கை பார். அதுவரைக்கும் தான் நம் போன்ற சாதாரண உறுப்பினர்களுக்கு அனுமதி.மீறினால் கடும் தண்டனை கிடைக்கும்."என்றார்.

அதற்கு மேல் புதிய தேவரால் ஒன்றும் பேச முடியவில்லை.உட்கார்ந்து விட்டான்.

பிறகு முக்கியப் பொறுப்பில் உள்ள இதர தேவர்களில் சிலர் தேவேந்திரனின் கோரிக்கையைப் பலமாக ஆதரித்துப் பேசினார்கள்.அவர்களில் ஒருவர் புதிய தேவேந்திரனாகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறதல்லவா?

இறுதியாக மும்மூர்த்திகளும் சம்மதம் தெரிவித்தனர்.அடுத்ததாக வேறு யாரைத் தேவேந்திரனாகத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழுந்தது.

அப்போது முருகப் பெருமான் குறுக்கிட்டார்.

"எனக்குத் தெரிந்தவரையில் தேவேந்திரன் பதவிக்குத் தகுதியான தேவர் யாரும் தேவ லோகத்தில் இல்லை.எனவே புதிய தேவேந்திரனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை இப்போதுள்ள தேவேந்திரனுக்கே கொடுத்து விடலாம்"என்றார்.

முருகப் பெருமானே சொல்லிவிட்டதால் வேறு யாரும் குறுக்கிட்டுப் பேசவில்லை.

இப்போது தேவேந்திரன் முழி முழி என்று முழித்தான்.வேறு யாரைத் தேர்ந்தெடுப்பது?இங்கே உள்ள யாருக்குமே அந்தத் தகுதி இல்லை என்று முருகப் பெருமானே சொன்ன பிறகு அதை மீறி ஒரு நபரின் பெயரைச் சொல்லத் தைரியம் வரவில்லை.முருகப் பெருமானின் வார்த்தையை மறுத்துப் பேசவும் தேவேந்திரனுக்குத் தைரியம் வரவில்லை.

"என்ன தேவேந்திரா?நீ என்ன சொல்கிறாய்/"என்றார் பரந்தாமன்.

தேவேந்திரன் அவசர அவசரமாக எழுந்து,"சனி,சனி"என்று உளறி விட்டான்.

வந்ததே கோபம் சனி பகவானுக்கு.

விருட்டென்று எழுந்தார்,

"என்ன?என்னைப் போய் உனக்குப் பதிலாக இந்தத் தேவேந்திரப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கிறாயா?என்ன திமிர் உனக்கு.
நான் உண்டு என் வேலை உண்டு என்றிருந்தேன்.இனி உன்னை விடப் போவதில்லையடா"என்று சொல்லிக் கொண்டே தேவேந்திரனை நோக்கி விரைந்தார்.

"ஐயையோ!சனி பகவானே.உங்களைச் சொல்வேனா.முருகப் பெருமானின் கேள்விக்குச் சரி சரி என்பதற்குப் பதிலாக உங்கள்திருநாமத்தைத் தவறுதலாகக் கூறி விட்டேன்.அடியேன் பிழையைப் பொறுத்தருள வேண்டும்"என்று கூறிக்கொண்டே
சனிபகவானின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான் தேவேந்திரன்.

"ஹூம்.உன்னைப் பற்றி ஏற்கனவே கேள்விப் பட்டேன்.எடுத்ததற்கெல்லாம் நீ காலில் விழுகிறாய் என்று.எப்படியும் என் பெயரை நீ உரைத்தாய். அதுவும் ஒருமுறை அல்ல இருமுறை உரைத்தாய்.அதற்கான தண்டனையை நீ அனுபவித்தே ஆக வேண்டும்"
இவ்வாறு சனி பகவான் கூறியதும் ஈசனும் பரந்தாமனும் குறுக்கிட்டனர்.

"நீங்கள் சொன்னது மிகவும் சரியானது சனி பகவானே.ஆனால் என்ன இருந்தாலும் இவன் நம்மில் ஒருவன்.எனவே நீங்கள் அவசரப்பட்டு சாபம் எதுவும் கொடுத்து விடாதீர்கள்.பொறுங்கள்"என்றனர்.

தேவேந்திரனால் ஒன்றும் கூற முடியவில்லை.பேசாமல் எழுந்து நின்றான்.

இப்போது மீண்டும் முருகப் பெருமான் பேச ஆரம்பித்தார்.

"சரி.புதிய தேவேந்திரனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உனக்கே கொடுப்பதென்று முடிவாகியுள்ளது. அதே நேரத்தில் தேவ லோகத்தில் யாருக்கும் தேவேந்திரனாகும் தகுதி இல்லாததால் நீயே மற்ற உலகங்களுக்குச் சென்று தேடித் தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுத்து வா"

"அப்படியானால் இங்கே என் பணியை யார் பார்த்துக் கொள்வார்கள்?என்று கேட்டான் தேவேந்திரன்.

"பெரீய்ய்..ய பணி.காலையில் எழுந்ததிலிருந்து குடுவை குடுவையாக சோமபானம் அருந்துவது,ரம்பா,திலோத்திமா வகையறாக்களின் நடனங்களைக் கண்டு களிப்பது,மாலையானதும் அந்தப்புரத்திற்குச் சென்று தூங்குவது,இதைத்தவிர வேறு என்ன வேலை?எல்லாம் புதிய தேவேந்திரன் வந்தபின் பார்த்துக் கொள்ளலாம்.நீ உடனே கிளம்பு"என்றார் முருகப் பெருமான்.

"முருகப் பெருமானே.நீங்கள் சொல்வதை சிரமேற்கொண்டு நிறைவேற்றுகிறேன்.ஆனால்........"

"என்ன ஆனால்.......?"

"நான் ஒருவனாகச் சென்று தேடுவது மிகுந்த சிரமமாக இருக்கும் எனவே என்னுடன் நாரதரையும் துணைக்கு அனுப்பி வைத்தால் நலமாக இருக்கும்.துணைக்குத் துணையும் ஆகும்.அவ்வப்போது தகுந்த ஆலோசனைகளையும் கேட்டுக் கொள்ளவும் முடியும்."

"அதுவும் சரி தான் நாரதரே.நீங்களும் தேவேந்திரனுடன் சென்று புதிய தேவேந்திரன் பதவிக்குப் பொருத்தமான ஒருவரைத் தேர்ந்தெடுத்து வாருங்கள்."

"உத்தரவு முருகப் பெருமானே."என்றார் நாரதர்.

திடீரென்று ஒரு குரல் ஒலித்தது.

"வேண்டாம் முருகப் பெருமானே.நீங்கள் தேடும் நபர் எந்த உலகிலும் இல்லை.இங்கேயே ஒருவரைப் பார்த்துக்கொள்ளுங்கள்."

"யாரது?"

பதிலில்லை.

மீண்டும் முருகப்பெருமான் கேட்டார்."யாரது?"

ஒரு மயான அமைதி நிலவியது.

முருகப் பெருமான் தனது சக்திவேலைத் தூக்கினார்.

ஈசன் தனது நெற்றிக்கண்ணைத் திறப்பதற்கு ஆயத்தப்படுத்திக்கொண்டார்.
பரந்தாமன் தனது சுதர்சனச் சக்கரத்தை வலது ஆட்காட்டி விரலில் மாட்டிக்கொண்டார்.

இவ்வாறாக எல்லோரும் தயாராகிக் கொண்டிருக்கும் போதே அனைவரின் முன்னிலையில் தோன்றினான் சைத்தான்.

0 comments: