முருகப் பெருமானுக்கும் சாத்தானுக்கும் இடையே காரசார விவாதம்

சாத்தானைப் பார்த்ததும் கூடியிருந்த தேவர்களுக்குக் கிலி பிடித்தது.மும்மூர்த்திகள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.அவர்களும் திகைத்துப் போயிருந்தார்கள்.

பொதுக்குழுவை வழிகாட்டி நடத்திக் கொண்டிருந்த முருகப் பெருமான் முதலில் சமாளித்துக் கொண்டு சாத்தானுடன் பேச ஆரம்பித்தார்.

"தேவர்கள் சபையில் உனக்கென்ன வேலை?யார் உன்னைக் கூப்பிட்டது?"

"என் வேலை இல்லாமல் ஈரேழு பதினான்கு லோகங்களும் இல்லை முருகப் பெருமானே.நான் எங்கும் இருப்பவன்.எங்கும் நிறைந்திருப்பவன்.என்னை யாரும் கூப்பிடத் தேவை இல்லை."

"யார் உனக்கு அந்த அதிகாரம் கொடுத்தது?"

"யாரும் கொடுக்கவில்லை.நானாக எடுத்துக் கொண்டேன்."

"விளக்கமாகச் சொல்."

"முருகப் பெருமானே.இரு தினங்களுக்கு முன்பு ஈசனுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு புதிர்க் கணக்குப் போட்டீர்களே!அதற்கு விநாயகப் பெருமான் விடை சொன்னாரே!ஞாபகம் இருக்கிறதா?"

முருகப் பெருமான் திகைத்தார்.'இவனுக்கு அந்நிகழ்ச்சி எவ்வாறு தெரிந்தது?'

சாத்தான் தொடர்ந்தான்."எனக்கு எவ்வாறு தெரிந்தது என்று தானே சந்தேகம்?நான் தான் சொன்னேனே.நானும் எங்கும் நிறைந்திருப்பவன் என்று.நானில்லாமல் எங்கும் எதுவும் இயங்காது."

"சரி.சொல்ல வந்ததைச் சொல்."

"விநாயகப் பெருமான் சொன்னது,ஈரேழு பதினான்கு லோகங்களையும் அதில் உள்ள சகல ஜீவராசிகளையும் படைத்து,காத்து,பின் அழித்து வரும் மும்மூர்த்திகளே முதன்மையானவர்கள்.அதற்குமுன்னரே இந்த மும்மூர்த்திகளையும் அவர்களின் பாரிகளையும்(மனைவிகள் என்று இக்காலத்தில் சொல்கிறோம்)படைத்ததே ஆதிபராசக்தி தான்.இவ்வுலகில் அனைத்திற்கும் மூலமாயும் முழுமுதலாயும் இருப்பவளே அந்த ஆதி பராசக்தி தான்"என்று சொன்னாரல்லவா?அந்த ஆதி சக்தி தோன்றியபோதே நானும் தோன்றி விட்டேன்."

"நீ பொய் உரைக்கிறாய்.நீயாக எப்படித் தோன்றிருக்க முடியும்?"

"இந்தக் கேள்வி உங்களுக்கே வேடிக்கையாக இல்லை?"

"இல்லை.உன்னை யாராவது தான் படைத்திருக்க முடியும்."

"அப்படியா.சரி.உங்களை யார் படைத்தது?"

"அங்கே அமர்ந்திருக்கிறாரே.அவரின் நெற்றிக்கண்ணிலிருந்து உருவானவன் நான்."

"அந்த ஈசனைப் படைத்தது யார்?"

"ஆதி சக்தி"

"அந்த ஆதி சக்தியைப் படைத்தது யார்?

"அது ..வந்து..."

"என்ன அது வந்து......சொல்லுங்கள்.அந்த ஆதிசக்தியைப் படைத்தது யார் என்று கேட்டேன்."

"ஆதி சக்தி இயற்கையாகத் தோன்றினவர்.அவர் சுயம்பு."

"ஏன்.நானும் இயற்கையாகத் தோன்றியிருக்க முடியாதா.நானும் சுயம்பாகத் தோன்றி இருக்க முடியாதா? சரி.இங்கேயே கேளுங்கள்.மும்மூர்த்திகளுட்பட முப்பெருந்தேவியர்களும் அனைத்துத் தேவர்களும் இங்கே கூடியிருக்கிறார்கள்.இவர்களையே கேளுங்கள்.யார் என்னைப் படைத்தது என்று."

முருகப் பெருமான் திரும்பிப்பார்த்தார்.மும்மூர்த்திகளின் முகங்களில் ஈயாடவில்லை.முப்பெருந்தேவியர்களின் முகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

மீண்டும் சாத்தான் பேசினான்.

"சரி.இங்கிருக்கும் யாராலும் பதில் கூற முடியவில்லையென்றால் அந்த ஆதி சக்தியையே கூப்பிடுங்கள்.அவளையே கேட்போம்."

முருகப் பெருமானால் ஒன்றும் பேச இயலவில்லை.

'சரி.நானே கூப்பிடுகிறேன்."என்று கூறிய சாத்தான் மிக மிக அமைதியாகக் கூப்பிட்டான்.

"ஆதிசக்தி.உடனே இங்கே வா."

என்ன ஆச்சரியம்?சாத்தானின் எதிரே ஆதி சக்தி பிரத்தட்சண்யமானாள்.

சாத்தானைத் தவிர அங்கு கூடியிருந்த அனைவருமே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர்.

சாத்தான் கேட்டான்."ஆதி சக்தி.முருகப் பெருமானின் சந்தேகத்தை நிவர்த்தி செய்."

ஆதி சக்தி கேட்டாள்."என்ன முருகா?"

முருகப் பெருமான் கேட்டார்.இந்தச் சாத்தானை யார் படைத்தது?"

"யாரும் படைக்கவில்லை முருகா.நான் தோன்றிய போதே சாத்தானும் தோன்றினான்.நல்லவைகளுக்கு எவ்வாறு நானும் என் வழித்தோன்றல்களும் பொறுப்பாகிறோமோ,அது போல் கெட்டவைகளுக்கு இந்தச் சாத்தான் பொறுப்பாகிறான்.எப்படி என்னை யாராலும் அழிக்க முடியாதோ அதேபோல இந்தச் சாத்தானையும் யாராலும் அழிக்க முடியாது."

ஆதிசக்தி மறைந்தாள்.

முருகப் பெருமான் முதன்முதலாகத் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

3 comments:

யாத்ரீகன் said...

:-) இருட்டு என்று ஒன்றில்லை .. அது வெளிச்சம் இல்லாததே என்பதை போலா ;-) .. நல்லவை தோன்றியபோதே கேட்டவை என்று ஒன்று அதனூடே தோன்றியது ?

Subramanian said...

சபாஷ் யாத்திரீகன்.சிந்திக்க மட்டுமின்றி ஒப்பிடவும் ஆரம்பித்திருக்கிறீர்கள்.பாராட்டுகள். சாத்தான் செய்யப் போகும் விவாதங்களில் இதுவும் ஒன்று.

none said...

01. :-(( 02. :-))