சரஸ்வதி கையில் எழுத்தாணி

தேவேந்திரனும் நாரதரும் அந்தப் பிரம்ம சபையின் எல்லா இடங்களிலும் தேடி விட்டார்கள்.ஹூஹும்.எழுத்தாணி கிடைக்கவே இல்லை.இருவரும் களைத்து விட்டனர்.இடுப்பைப் பிடித்தபடியே எழுந்த தேவேந்திரனும் நாரதரும் முனங்கிக் கொண்டே அருகில் இருந்த இருக்கைகளில் அமர்ந்தனர்.

தேவேந்திரன் கேட்டான்."ஏன் பிரம்ம தேவரே.எழுத்தாணி கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?"

பிரம்ம தேவன் திகைத்தார்.

"இதற்குத் தான் எதற்கும் உபரியாக இன்னொரு எழுத்தாணி வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்றது.அப்படி ஏதும் உபரியாக இல்லையா?

"என்ன தேவேந்திரா?உன்னிடமுள்ள ஐராவதத்திற்கு (வெள்ளை யானை) உபரியாக இன்னொரு ஐராவதம் இருக்கிறதா?வசிஷ்ட மகாமுனியிடமுள்ள காமதேனுவுக்கு உபரியாக இன்னொரு காமதேனு இருக்கிறதா?பரந்தாமனிடம் உள்ள சங்கு,சக்கரம்,ஈசனிடம் உள்ள திரிசூலம்,முருகப் பெருமானிடம் உள்ள சக்திவேல் ஆகியவைகளுக்கெல்லாம் உபரியாக இன்னொன்று இருக்கிறதா?இந்த எழுத்தாணியை என்னவென்று நினைத்தாய்?உன்னைப் போல் அதற்கும் உயிர் இருக்கிறது தேவேந்திரா.நீ பிறந்தபோதே உன் தலையில் உன் விதியை எழுதியதே இந்த எழுத்தாணி தான்"

தேவேந்திரனுக்கு அப்பாடா என்றிருந்தது."ஓஹோ!அப்படியானால் எங்காவது ஓரமாகப் படுத்துக்கொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருக்குமோ"என்று தனது அடுத்த சந்தேகத்தை வெளியிட்டான்.

இதற்குமேல் நாரதரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை."இந்தாப் பாரு தேவேந்திரா.உன் லொள்ளுவெல்லாம் அந்த இந்திர லோகத்தில் வைத்துக்கொள்.பிரம்ம தேவனிடம் ஏடாகூடமாகப் பேசி வாங்கிக் கட்டிக் கொள்ளாதே!வந்தோமா.நம்ம வேலையைப் பாத்தோமா போனோமான்னு இருக்க வேண்டும்.இல்லையெனில் நான் கிளம்புகிறேன்.நீயாச்சு.உன் வேலையாச்சு."

உடனே தேவேந்திரன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.

"இப்படியே ஏதாவது முறைகேடாகப் பேசுவது,மீறிப் போய் விட்டால் உடனே மன்னிப்புக் கேட்பது,காலில் விழுவதுங்கிறதே உனக்கு வேலையாகி விட்டது."என்று சலித்துக் கொண்டார் நாரதர்.

அப்போது சரஸ்வதி தேவி தலையைக் கோதிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.கையில் என்னமோ மின்னியது.

"அது என்ன கையில்"என்று பிரம்ம தேவன் கேட்டார்.

"நீங்க எப்பவும் கையில் வைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாணி தான் நாதா.இன்றைக்குத் தலைக்குக் குளித்தேன் நாதா.சிக்கெடுப்பதற்காக நான் வைத்திருக்கும் சிக்கெடுக்கியைக் காணவில்லை.எப்போதும் இரண்டு மூன்று சிக்கெடுக்கிகளை வைத்திருப்பேன்.(தேவேந்திரனின் முகத்தில்உபரி யோசனை மின்னி மறைந்தது.)இன்றைக்குப் பார்த்து ஒன்றைக் கூடக் காணோம்.சரி,உங்கள் எழுத்தாணியைத் தான் இன்றைக்கு மட்டும் உபயோகித்துக் கொள்வோமே என்று நான் தான் எடுத்தேன் நாதா.அதற்கென்ன இப்போது?"

"ஓ!அப்படியா!!சரி சரி.சிக்கு எடுத்தாயிற்றா?அதை இப்படிக் கொடு."என்று சொல்லிக் கொண்டே தன் கையில் வாங்கிக் கொண்டார் பிரம்ம தேவன்.

தேவேந்திரனுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது.'என்னடா,கொஞ்ச நேரத்திற்கு முன் இந்த எழுத்தாணிக்குப் பிரம்ம தேவன் கொடுத்த முக்கியத்துவம் என்ன,இப்போது சரஸ்வதி தேவியிடம் இருப்பதைக் கண்ட பின் கொஞ்சமும் அலட்டிக்காமல் புன்முறுவலுடன் கேட்கும் அதிசயந்தானென்ன!ஓ...ஹொ.(ஓஹோ இல்லை.ஓ...ஹொ தான்)சரி தான்.வீட்டுக்கு வீடு வாசற்படி.ஹூம்'

எழுத்தாணிப் பிரச்சனை இப்படியாகப் பொசுக்கென்று போனது.

"தேவேந்திரா,நாரதா.இருவரும் வந்த நோக்கம்?"பிரம்ம தேவன் வினவினார்.

தேவேந்திரனும் வந்த விசயத்தை எடுத்துரைத்தான்.

"சரி.ஈசன் சொன்னபடியே நாளை உனது சபையில் தேவர்களின் பொதுக்குழுவைக் கூட்டு.மும்மூர்த்திகள் மூவரும் வருகிறோம்.ஒரு நல்ல தீர்வு காணலாம்" என்றார் பிரம்ம தேவன்.

தேவேந்திரனும் நாரதரும் பிரம்மாதியத் தம்பதியினரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள்.

"சரி நாரதரே.நான் இந்திரலோகம் செல்கிறேன்.தாங்களும் வந்து சிரமப் பரிகாரம் செய்துகொண்டு செல்லலாமே?"

"இல்லை தேவேந்திரா.எனக்கு முக்கியமான பணி இருக்கிறது.விடை கொடு.

"என்ன முக்கியமான பணி?"

"அதை உன்னிடம் சொல்லக் கூடாது.எனக்கும் பரந்தாமனுக்கும் மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய ரகசியம்.நான் சென்று வருகிறேன்."

அதற்குமேல் தேவேந்திரனால் மறுத்துப் பேச முடியவில்லை."மிகவும் நன்றி நாரதரே.இவ்வளவு தூரம் என்னுடன் வந்து உதவி செய்ததற்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்.போய் வாருங்கள்.நாளை காலை பொதுக்குழுவுக்கு வந்து விடுங்கள்."என்று கூறி நாரதரை வழியனுப்பி வைத்தான்.

'கடமைப் பட்டிருக்கிறாயா. நாளை பார்க்கிறேன்.என்னை இந்த அளவுக்கு இன்றைக்கெல்லாம் அலைய வைத்ததற்கு உன்னை என்ன செய்கிறேன் பார்.நாளை பொதுக்குழுவில் வைத்துக் கொள்கிறேன்.'

அங்கிருந்து கிளம்பிய நாரதர் நேராக முருகப் பெருமானிடம் சென்றார்.

2 comments:

யாத்ரீகன் said...

>>> கொஞ்ச நேரத்திற்கு முன் இந்த எழுத்தாணிக்குப் பிரம்ம தேவன் கொடுத்த முக்கியத்துவம் என்ன,இப்போது சரஸ்வதி தேவியிடம் இருப்பதைக் கண்ட பின் கொஞ்சமும் அலட்டிக்காமல் புன்முறுவலுடன் கேட்கும் அதிசயந்தானென்ன!ஓ...ஹொ.(ஓஹோ இல்லை.ஓ...ஹொ தான்)சரி தான்.வீட்டுக்கு வீடு வாசற்படி.ஹூம் <<

:-)))))

Subramanian said...

வாங்க யாத்தீரீகன்.நன்றி