ஒரு கேள்விக்குப் பல பதில்கள்.எது சரி?


கேள்வியைக் கேட்டதும் தேவேந்திரனுக்குத் தலை சுற்றியது.சரியான வம்பில் மாட்டிக் கொண்டோமோ என்று கலங்கினான்.'முருகப் பெருமான் கூறியவாறே கேள்வி சாதாரணமாகத்தான் தெரிகிறது என்றாலும் அதில் ஒரு மிகப் பெரிய தத்துவம் பொதிந்திருக்கிறது என்றும் கூறி விட்டாரே.அப்பொ...விடையும் சாதாரண விடையாக இருக்க முடியாது.இதை முதலில் மனதில் நன்றாக இருத்திக் கொள்ள வேண்டும்.சரி.தத்துவார்த்தமான விடை என்னவாக இருக்கும்?ரொம்பத் தான் யோசிக்க வேண்டி இருக்குமோ.அம்மையும் அப்பனும் நாள் பூராவும் கிறுக்குப் பிடித்தாற் போல் தூணிலும் சுவற்றிலும் எழுதி எழுதிப் பார்த்துக் கொண்டிருந்தது இதற்குத் தானோ.ஓஹோ.சரி தான். அப்ப அவர்கள் இருவரும்ஏறக் குறைய விடையைக் கண்டு பிடித்திருப்பார்கள்.எனக்குக் கிடைத்துள்ள சிறு கால அளவுக்குள் விடை காண வேண்டும்'.இவ்வாறு மும்முரமாக யோசனையில் இறங்கினான் தேவேந்திரன்.


நாரதரும் கிட்டத்தட்ட இதே நிலைக்குத் தான் ஆளாகி இருந்தார் என்பது அவர் முகம் சுளித்து யோசனை செய்யும் பாவத்திலேயே தெரிந்தது.


"சரி.முதலில் யார் விடை கூறுகிறீர்கள்?"என்று முருகப் பெருமான் அனைவரையும் பார்த்துக் கேட்டார்.


ஒவ்வொருவரும் அடுத்தவர்முகத்தைப் பார்த்துக் கொண்டனர்.யாரும் முன் வரவில்லை.


"சரி.நானே ஒவ்வொருவராகக் கேட்க ஆரம்பிக்கிறேன்.எந்த வில்லங்கமும் இன்றி எனது பணி நிறைவேற முழு முதற் கடவுளான விக்னேஸ்வரப் பெருமானை வணங்குகிறேன்.அவரே முதலில் விடை கூற வேண்டும் என்று அழைக்கிறேன்."


இவ்வாறு முருகப் பெருமான் கூறியதும் விநாயகப் பெருமான் இருக்கையிலிருந்து எழுந்து பேச ஆரம்பித்தார்.


"முதலில் அம்மைக்கும் அப்பனுக்கும் என் பணிவான வணக்கங்கள்.தம்பி முருகன் கேட்ட கேள்வியானது என்னை மிகவும் சிந்திக்க வைத்து விட்டது.எல்லா வேலைகளையும் ஒத்திவைத்துவிட்டு இதற்கெனவே தனி அறையில் உட்கார்ந்து யோசித்து ஒரு வழியாக விடை கண்டுபிடித்து விட்டேன்."


" சரி சொல்லுங்கள்."

"ஒன்றும் ஒன்றும் ஒன்று தான்."


"எவ்வாறு?"


"ஈரேழு பதினான்கு லோகங்களையும் அதில் உள்ள சகல ஜீவராசிகளையும் படைத்து,காத்து,பின் அழித்து வரும் மும்மூர்த்திகளே முதன்மையானவர்கள்.அதற்குமுன்னரே இந்த மும்மூர்த்திகளையும் அவர்களின் பாரிகளையும்(மனைவிகள் என்று இக்காலத்தில் சொல்கிறோம்)படைத்ததே ஆதிபராசக்தி தான்.இவ்வுலகில் அனைத்திற்கும் மூலமாயும் முழுமுதலாயும் இருப்பவளே அந்த ஆதி பராசக்தி தான்.எனவே ஒன்றிலிருந்து தோன்றிய மற்றொன்றோ அல்லது வேறு எதுவுமோ மீண்டும் அந்த ஒன்றிற்கே சென்றடையும் என்று வேதம் சொல்கிறது.எனவே ஒன்றும் ஒன்றும் ஒன்று தான்."


இவ்வாறு சொல்லிவிட்டு விநாயகப் பெருமான் தமது இருக்கையில் அமர்ந்தார்.பிறகு முருகப் பெருமானிடம் கேட்டார்.


"என்ன முருகா.என் விடை சரிதானே?"


"கொஞ்சம் பொறுங்கள் அண்ணா.மிக அழகாக உங்கள் விடையைச் சொல்லி விட்டீர்கள்.மற்றவர்களும் என்ன தான் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பதை அறிந்த பின்பு தான் இறுதியாக முடிவு சொல்ல முடியும்."என்றார் முருகப் பெருமான்.


"சரி.அடுத்ததாக மும்மூர்த்திகளில் ஒருவரும் வேதமே வடிவானவரும் என்னைப் பெற்றவருமான ஈசனே!உங்கள் விடை என்ன?"


"குழந்தாய்.நான் பார்த்துப் பிறந்த மகன் நீ..என்னிடமே..."


ஈசன் சொல்லி முடிப்பதற்குள் முருகப் பெருமான் குறுக்கிட்டார்.


"மன்னிக்க வேண்டும் ஐயனே.அந்தக் கதையெல்லாம் மிகப் பழைய சமாச்சாரம்.இப்போது விடை சொல்ல வேண்டிய நேரம்.நீங்கள் இப்போது விடை சொல்லாவிட்டால் உங்களுக்குத் தெரியவில்லை என்று பதிவு செய்துகொண்டுவிடுவேன்.பிறகு உங்கள் இஷ்டம்."


"பொறு மகனே.பொறு.இதோ என் விடையைச் சொல்லி விடுகிறேன்."
ஈசன் விடையைச் சொல்ல ஆரம்பித்தார்.


"ஒன்றும் ஒன்றும்.....ம்........பல கோடி...பல கோடி."


"எப்படி ஐயனே."


"அப்படிக் கேள்.ஆண் என்ற ஓருயிரும் பெண் என்ற ஓருயிரும் சேர்ந்து மற்றொரு உயிர் அல்லது உயிர்களாகிப் பின் அவைகளும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பல உயிர்களாகின்றன.இவ்வாறே உயிர்கள் பல கோடியாகப் பல்கிப் பெருகுகின்றன.இந்தப் பல கோடி உயிர்களுக்கும் மூல காரணம் நான் முதலில் சொன்ன ஒன்றும் ஒன்றும் தான்.அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்ததால் தானே பலகோடியானது?எனவே ஒன்றும் ஒன்றும் பல கோடி..பல கோடி.."


இவ்வாறு சொல்லிவிட்டு ஈசன் ஈஸ்வரியைப் பெருமிதத்துடன் பார்த்தார்.


ஈஸ்வரி அவரை'ஐயே...! இவ்வளவுதானா உங்கள் சரக்கு!!'என்பது போல் பார்த்தார்.ஈசனுக்கு என்னமோ போல் ஆகி விட்டது.சரி இவள் என்ன விடை சொல்கிறாள் என்பதைப் பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டார்.


அடுத்ததாக ஈஸ்வரியே பதில் சொல்ல ஆரம்பித்தார்.


"மகனே.மிகவும் அருமையான கேள்வியைக் கேட்டிருக்கிறாய்.சக்தியின் அம்சமான என் வேலை உடையவன் நீ ஒருவனன்றோ!.கார்த்திகைப் பெண்களிடம் நீ அருந்திய பால் போதாது என்று என்னிடமும் பால் அருந்தியவனல்லவா.அதனால் தான் என்னமோ ஞானபண்டிதனாகி இவ்வளவு ஞானம் பொருந்திய கேள்வியைக் கேட்டிருக்கிறாய்.நானும் நன்றாக யோசித்து இந்த விடையைக் கூறுகிறேன். கேட்டுக் கொள்.மற்ற அனைவரும் கேட்டுக் கொள்ளுங்கள்"


"அதாவது ஒன்றும் ஒன்றும் சூன்யம் தான்.ஆமாம்.ஒன்றுமே இல்லை.இவ்வுலகில் எல்லாமே அந்தச் சூன்யத்தில் தான் பிறக்கிறது.அந்தச் சூன்யத்தில் தான் போய் அழிகிறது.இறுதியில் மிஞ்சுவது என்ன?சூன்யந்தானே. எனவே ஒன்றும் ஒன்றும் சூன்யந்தான்."


இவ்வாறு கூறிவிட்டு,"மகனே.இந்தப் பதிலால் நீ திருப்தி அடைந்திருப்பாய் என்று எனக்குத் தெரியும்.இருப்பினும் மீதி இருக்கும் மற்றவர்களிடமும் கேள்.இறுதியில் என் விடை சரிதான் என்று கூறு."


முருகப் பெருமான் அம்மையிடம் ஒன்றும் சொல்லவில்லை.வீரபத்திரரை நோக்கித் திரும்பினார்.அவர் பேசுவதற்குள் வீரபத்திரரே எழுந்து பதில் சொல்ல ஆரம்பித்தார்.


"அஹா(ஆஹா இல்லை.அஹா தான்)என்ன முருகா.மிகவும் சுலபமான கேள்வி.இதற்குப் போய் ஒரு பகற்பொழுதுநேரம் அவகாசம் தேவையா.வெட்...கம்...இதற்கான விடையை நீ கேள்வி கேட்ட அந்தச் ஷணமே கண்டுபிடித்துவிட்டேன்.இருந்தாலும் அந்த ஈசருக்கும், அம்மைக்கும்,கேள்வி கேட்ட உனக்கும் மரியாதை தர வேண்டுமே என்பதற்காகத்தான் இவ்வளவு நேரம் பொறுமை காத்தேன்.இதோ என் விடை. ஒன்றும் ஒன்றும் பதினொன்று.அஹா!பதினொன்றே தான்."


"எவ்வாறு?"


"அஹா!எவ்வாறா?முதலில் ஒன்று என எழுது.பக்கத்தில் இன்னொரு ஒன்று எழுது.என்ன தெரிகிறது?பதினொன்று தானே!இதுக்குப் போயி அலட்டிக்கலாமா.அஹா!!"


முருகப் பெருமானே ஒரு நொடி அசந்து போனார்.


பிறகு நாரதரைப் பார்த்தார்.நாரதர் தயங்கியவாறே எழுந்து பேச ஆர்ம்பித்தார்.


"முருகப் பெருமானே கேள்வி என்னமோ சுலபமாகத்தான் தெரிகிறது.ஆனால் கூடி இருக்கும் இவர்களனைவரின் பதில்களை ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொரு விடையும் ஒவ்வொரு கோணத்தில் சரியாகப் படுகிறது.எனவே இவர்கள் அனைவரின் விடைகளுமே சரி தான்.எனக்கென்று தனியாக விடை இல்லை."


"என்ன நாரதா.மூவுலகையும் சுற்றுபவன் நீ.உனக்கென்று ஒரு விடை கண்டு பிடிக்க முடியவில்லையா?"


"இல்லை.முருகப் பெருமானே.என்னால் விடை காண இயலவில்லை."


"உண்மையை ஒப்புக் கொண்டமைக்கு மகிழ்ச்சி நாரதா.சரி இறுதியாக எஞ்சியது தேவேந்திரன் மட்டுமே.தேவேந்திரா.நீ என்ன விடை சொல்லப் போகிறாய்?சொல்வதைச் சீக்கிரம் சொல்."


தேவேந்திரன் பதற்றத்துடன் எழுந்தான்.


"முருகப் பெருமானே.அனைவரும் ஆளுக்கொரு விடை கூறி இருக்கிறார்கள்.எனக்குக் குழப்பமாக இருக்கிறது.ஆனால் பாதி விடை தெரிந்துவிட்டது."


அனைவரும் திடுக்கிட்டார்கள்.


"அப்படியா.மகிழ்ச்சி.நீ கண்டுபிடித்த விடை என்னவென்று சொல்."


"முருகப் பெருமானே.ஒன்றும் ஒன்றும் எவ்வளவோ தெரியவில்லை.ஆனால் நிச்சயமாக இரண்டு கிடையாது"

0 comments: