கலைஞருடன் அறிமுகம்

சிறிது நேரம் கழித்து சாயிபாபா வெளியே வந்தார்.உடனே அனைத்துக் கூட்டமும் முண்டி அடித்துக் கொண்டு சாயிபாபாவை நோக்கி முன்னேறியது.

பார்த்தான் தேவேந்திரன்.இப்போது விட்டால் அடுத்த சந்தர்ப்பம் கிடைப்பது சிரமம் என்பதை உணர்ந்தான்.உடனே நாரதரையும் இழுத்துக் கொண்டு கூட்டத்தில் மின்னலைப் போல முன்னேறி வாசலை அடைவதற்கும் சாயிபாபா வாசல் முதல்படியில் காலை வைத்தவாறே இறங்குவதற்கும் சரியாக இருந்தது.சாயிபாபாவின் கண்கள் தேவேந்திரனை நேருக்கு நேராகச் சந்தித்தன.இது போதாதா?தேவேந்திரனின் கண்களின் ஆகர்ஷணத்தைத் தாங்கமுடியாமல் சாயிபாபா திக்பிரமை பிடித்தவராய் நின்றார்.தேவேந்திரன் சாயிபாபாவின் அருகில் சென்று அவரது காதுகளில் ஏதோ ஓதினான்.உடனே சாயிபாபா சுயநினைவு வந்தவராய் தேவேந்திரனது இரு கைகளையும் பற்றிக் கொண்டு திரும்பி மீண்டும் கலைஞரின் வீட்டுக்குள் நுழைந்தார்.நாரதரும் இருவரையும் பின் தொடர்ந்தார்.சாயிபாபாவை வழியனுப்புவதற்காக வாசல் வரை வந்த துரைமுருகனுக்கு ஒன்றும் புரியவில்லை.அவரும் பின் தொடர்ந்தார்.

உள்ளே சென்ற சாயிபாபா நேராகக் கலைஞர் அமர்ந்திருந்த சோபாவின் அருகே சென்றார்.தேவேந்திரனின் இரு கைகளையும் இறுகப் பிடித்துக் கொண்டு கலைஞரிடம் நீட்டியவாறே ஏதோ சொன்னார்.சாயிபாபாவின் பின்னால் நின்றிருந்த அல்லக்கைகளுக்கே சாயிபாபா சொன்னது ஒன்றும் புரியவில்லை.எனவே அவர்கள் சாயிபாபா சொன்னதை மொழிபெயர்க்க முடியாமல் முழித்தனர்.அவர்கள் திணறலைக் கண்ட சாயிபாபா மீண்டும் கலைஞரிடம் ஏதோ சொன்னார்.ஹூஹும்!யாருக்கும் புரியவில்லை.பிறகு தேவேந்திரனின் இரு கைகளையும் கலைஞரிடம் ஒப்படைப்பதுபோல சாயிபாபா பாவனை செய்து அப்படியே தேவேந்திரனின் கண்களைப் பார்த்தார்.தேவேந்திரனின் கண்களில் முன்பு இருந்த ஆகர்ஷண சக்தி இப்போது இல்லை.உடனே சாயிபாபா இரு கரங்களையும் ஆசீர்வாதம் செய்வது போல உயர்த்தியபடி சிரித்துக் கொண்டே மீண்டும் வெளியேறினார்.வழியனுப்புவதற்காகத் துரைமுருகன் சாயிபாபாவைப் பின்தொடர்ந்தார்.

இப்போது கலைஞரின் முன் தேவேந்திரனும் நாரதரும் நின்றிருந்தனர்.சுற்றிலும் கலைஞரின் குடும்பத்தினர்கள் நின்றிருந்தார்கள்.கலைஞர் இருவரையும் பார்த்துச் சிரித்தவாறே,"உக்காருங்க"என்றார்.இருவரும் அவரின் வலது பக்கத்தில் உள்ள நீண்ட சோபாவில் அமர்ந்தார்கள்.

ஸ்டாலின் தொண்டையைச் செறுமிக் கொண்டே பேச ஆரம்பித்தார்.

"நீங்க இருவரும் சாயிபாபாவுக்கு வேண்டியவர்களோ?"

ஆமாம் என்பதற்கு அடையாளமாகத் தேவேந்திரன் தலையசைத்தான்.

"நான் அப்பவே நினெச்சேன்.சாயிபாபா கையெப் பிடிச்சிகிட்டு வந்தப்பவே நெனச்சேன் ரெண்டு பேரும் அவருக்கு ரொம்ப வேண்டியவங்கன்னு."

"ஆமாங்க"என்றான் தேவேந்திரன்.

"பரவாயில்லையே.தமிழ் பேசுறீங்களே.சரி.உங்க பேரு?"

"எம்பேரு இந்திரன்.ஆந்திராவிலெ தேவகிரின்ற ஊரு.எம்பேரோட ஊரு பேரையுந்சேத்து தேவேந்திரன்னு மாத்திகிட்டேன்.இவரு என் பிஏ.பேரு நாரதரு"

'என்னடா பேரு நாரதருன்னு சொல்றாரு.ஒருவேளை ரெட்டிகாருன்னு சொல்றமாதிரி ஏதோ ஒரு "ரு".இதப் போயி விளக்கம் கேட்டா தப்பா நெனப்பாங்களோ.சரி.மேலே பேசுவோம்'இவ்வாறாக ஸ்டாலினின் சிந்தனை ஓடியது.

"ரெம்ப(ரொம்ப இல்லை.ரெம்ப தான்)மகிழ்ச்சி.என்ன தொழில் பண்றீங்க?"

"தொழிலா?ஏதொ ஒரு பத்துப் பதினெஞ்சு நாடுகள்ளெ கோல்டு பிசினெஸ் பண்ணிகிட்ருக்கேன்.சாயிபாபாவுக்குத் தங்க மோதிரம்,செயின்,சின்னச் சின்னதா சாமி சிலைகள்,சிவலிங்கம்ன்னு சப்ளை செய்றது நாந்தான்.ஹோல்சேல் ஏஜண்ட்னு வச்சுக்குங்களேன்."

0 comments: