தலைவிதியை எழுதும் பிரம்ம தேவனின் எழுத்தாணி காணவில்லை

கைலாயத்திலிருந்து பிரம்ம லோகம் கூப்பிடு தூரம் தான்.......ஆக உடனே பிரம்ம லோகம் அடைந்து விட்டார்கள்.இங்கே வாயிற்காப்போன் போன்ற கட்டுக் காவல்களைக் காணோம்.அப்படியே உள்ளே சென்று பிரம்ம சபைக்கே போய் விட்டார்கள். பிரம்மன் வழக்கமாக அமர்ந்திருக்கும் இடத்தில்
காணோம்.சரசுவதியும்கூடக் காணோம்.

"பிரம்ம தேவா,பிரம்ம தேவா.."என்று கொஞ்சம் சத்தம் போட்டே கூப்பிட்டான் தேவேந்திரன்.

அப்படியெல்லாம் கூவி அழைக்கக் கூடாது என்று நாரதர் எச்சரிக்கை செய்ததைத் தேவேந்திரன் பொருட்படுத்தவில்லை.மீண்டும்
மீண்டும் கூவி அழைத்தான்.

பிரம்ம தேவர் கடைசியாக உள்ள ஒரு பெரிய்ய்ய..இருக்கைக்குப் பின்னால் இருந்து வெளியே வந்தார்.

"வா தேவேந்திரா.வாருங்கள் நாரதரே.இருவருக்கும் வணக்கம்.வந்து இங்கே
அமருங்கள்."

இருவரும் பிரம்ம தேவனுக்கு முகமன் கூறிவிட்டு அமர்ந்தனர்.

தேவேந்திரன் கேட்டான்."என்ன பிரம்ம தேவரே.ரொம்ப நேரம் கூப்பிட்டும் வராமல் அந்தப் பெரிய இருக்கையின் பின்னால் இருந்து வந்தீர்களே.என்ன விசயம்?"

"அது..வந்து தேவேந்திரா...சகல ஜீவராசிகளையும் படைக்கும்போது எனக்கு உதவியாக இருக்கும் எழுத்தாணியைத் தவறுதலாகக் கீழே போட்டு
விட்டேன்.எங்கே உருண்டு சென்றதோ காணவில்லை.அதைத் தான் தேடிக்
கொண்டிருந்தேன்."

இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டியது
அவசியமாகிறது.தன்னால் படைக்கப்படும் (குட்டி போடும் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!) ஒவ்வொரு ஜீவராசியும் கருவிலிருந்து வெளியே
வந்தவுடன் அதன் நெற்றியில் தன்னிடம் இருக்கும் எழுத்தாணியை
வைப்பார்.எழுத்தாணியானது அந்த உயிரின் தலைவிதியை அதுவாகவே ஆடோமாடிக்காக எழுதிவிடும்.அந்த எழுத்துக்களைப் பிரம்மதேவனே நினைத்தாலும் மாற்ற முடியாது.இது அந்தப் பிரம்மதேவனின் தலைவிதி
என்றும் வைத்துக் கொள்ளலாம்.அவ்வாறு எழுதப்படுவதை வைத்துத் தான் அந்த உயிரின் வாழ்க்கை அமையும்.

முட்டை போட்டுக் குஞ்சு பொறிக்கும் உயிர்களுக்குத் தலைவிதி எழுதுவது
வித்தியாசப்படும் என்றறிக.அத்தகைய உயிர்களுக்கு முட்டைக்குள்ளேயே தலைவிதி எழுதப்படும்.அதன்படி ஒரு முட்டை ஆம்லெட் ஆவதோ

ஆஃப் பாயில் ஆவதோ அல்லது வளர்ந்து மீண்டும் முட்டை போடுவதோ அந்தத் தலைவிதியைப் பொருத்துத் தான் அமையும்.

ஒவ்வொரு அரிசியின் மீதும் அது யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவரது பெயர் எழுதப்பட்டிருக்கும் என்று குரானில்
சொல்லப்பட்டிருக்கிறதாகச் சொல்லப்படுவதுபோல என்றும் அறிக.


இப்போது மீண்டும் பிரம்மலோகத்திற்குப் போவோம்.

நீங்களும் கொஞ்சம் தேடுவதில் உதவுங்களேன்."என்று பிரம்ம தேவன் கேட்டுக் கொண்டதன்பேரில் தேவேந்திரனும் நாரதரும் சேர்ந்து தேட ஆரம்பித்தார்கள்.நாரதர் தான் எப்போதும் தோளில் மாட்டி இருக்கும் தும்புராவைக் கழற்றி ஒரு இருக்கையில் வைத்தார்.தேவேந்திரனும் தனது கிரீடத்தை எடுத்து ஒரு இருக்கையில் வைத்தான்.இருவரும் இண்டு இடுக்கெல்லாம் தேடினார்கள்.பிரம்ம தேவனால் அவர்கள் தேடுவதைப் போலத் தேட முடியவில்லை.காரணம் அவருக்கு மூன்று தலைகள்.இருக்கைகளினுள்ளே நுழைய முடியாமல் முன் தலைக்கு இருபுறமும் உள்ள மற்ற இரு தலைகளும் தடுத்தன.ஏற்கனவே ஒரு தடவை அவசரப்பட்டுத் தேட முயன்றபோது இரு தலைகளும் ஒரு இருக்கையின் கால்களுக்குள் மாட்டிக்கொண்டன.அப்போது ஏற்பட்ட பெருங்காயம் இன்னும் ஆறவில்லை.இப்போது மீண்டும்....

பிரம்ம தேவன் எழுந்து நின்றுவிட்டார்,

வெகு நேரமாகியும் எழுத்தாணி கிடைக்கவே இல்லை.

2 comments:

Anonymous said...

நல்ல கதை உண்மைத்தமிழன்...

கலர் எல்லாம் போட்டு பதிவு நல்லா இருந்தது...

Subramanian said...

வாங்க செந்தழல் ரவி.பாராட்டுக்கு நன்றிங்க.நிச்சயமாக,கண்டிப்பாக,
சத்தியமாக,எங்கப்புராணையாக,உண்மையாக உண்மைத் தமிழன் நான் இல்லேங்க.
அவரையும் என்னையும் வச்சு அனானி சனம் கும்மி அடிக்குதுன்னு போன பதிவிலே உண்மைத் தமிழன் அவர்கள் வருத்தப்பட்டிருந்தாருங்க.அப்படின்னா பாத்துக்குங்க.