பொதுக்குழு கூடியது

கையிலையில் முருகப் பெருமானைச் சந்தித்துப் பிரம்ம லோகத்தில் நடந்தவைகளை எடுத்துரைத்தார் நாரதர்.அனைவற்றையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்ட முருகப் பெருமான் நாரதரிடம் கேட்டார்.


"ஏன் நாரதரே,இந்தத் தேவேந்திரனுடைய நடத்தையே சரியில்லையே.எங்கே சென்றாலும் தன் அவசரப் புத்தியைக் காட்டிவிடுகிறான்.பெரியோர்கள் முன்னிலையில் அதுவும் மும்மூர்த்திகள் முன்னிலையிலேயே இப்படி நடந்து கொள்கிறானே.இப்போது இவனுக்குப் பதிலாக இன்னொருவனைத் தேவேந்திரனாகத் தேர்ந்தெடுத்து விட்டால் இவன் பாடு இன்னும் பொறுப்பில்லாமல் போய் விடுமே.சராசரித் தேவர்கள் மத்தியில் இவன் சேர்ந்து கொண்டாலும்....ம்...?வேறு வழி இல்லை.அதற்கு முன் இவனுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.சரி நீங்கள் சென்று வாருங்கள்.நான் யோசித்து நாளை பொதுக்குழுவுக்கு வருகிறேன்.அங்கு பார்த்துக் கொள்வோம்."என்றார் முருகப் பெருமான்.


நாரதரும் வந்த காரியம் நிறைவேறியது என்ற மனமகிழ்வுடன் புறப்பட்டார்.


மறுநாள்....


இந்திரலோகம் அமளி துமளிப்பட்டது.இருக்காதா பின்னே!தேவலோகத்தில் வசிக்கும் அனைத்துத் தேவர்களடங்கிய பொதுக்குழு அல்லவா கூடுகிறது?ஒருவர் விடாமல் வந்தனர் .மும்மூர்த்திகளின் முன்னிலையில் இந்த அவசர மற்றும் சிறப்புப் பொதுக்குழு கூடுகிறது என்றால் சும்மாவா?


இந்திர சபை நிரம்பி வழிந்தது.வழிந்தவர்களையெல்லாம் வெளியே பெரிய மைதானத்தில் அமர வைக்கப்பட்டனர்.பொதுக்குழுக் கூட்ட நடவடிக்கைகளை அனைவரும் கண்டு களிப்பதற்கு ஏதுவாக நூற்றைம்பதுக்கு நூறு பாத அளவு மாயக் கண்ணாடிகள் நாலாபுறமும் வைக்கப்பட்டிருந்தன. (தேவர்களின் பாத அளவு ரொம்பப் பெரிசு.நம்மூரில் ஒருவரின் பாதம் முக்கால் அடி என்று வைத்துக் கொள்ளுங்கள்.அப்படியென்றால் மாயக் கண்ணாடி அளவைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.)பத்து தேவர்களுக்கு ஒரு குடுவை என்ற எண்ணிக்கையில் பெரிய வாய் அகன்ற குடுவைகளில் சோம பானம் நிரப்பி வைக்கப் பட்டிருந்தது.அதைப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஊற்றிக்கொடுப்பதற்காக இந்திரலோகத்தின் ஏராளமான கிங்கரர்கள் அருகிலேயே நின்றிருந்தனர்.இரண்டு முறைக்கு மேல் சோமபானம் அருந்தி முடித்ததும் பொதுக்குழு உறுப்பினர்களைச் சந்தோசப்படுத்துவதற்காக ஆடற்கலையில் சிறப்புப் பயிற்சி பெற்ற ப்ஸ்ள் தயாராகத் தொலைவில் நின்றிருந்தனர்.என்னதான் அமிர்தமே அருந்தினாலும் சோமபானம் மாதிரி இல்லையாம்.அதற்காகவே பொதுக்குழு கூடும்போதெல்லாம் இந்த ஏற்பாடு.


மும்மூர்த்திகள் உட்பட அனைவரும் வந்து தங்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்.முப்பெரும் தேவியர்கள் வழக்கம்போல் உப்பரிக்கைகளில் இந்திராணியுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டனர்.



முதலில் தேவேந்திரன் எழுந்து விநாயகப் பெருமானைப் பணிவுடன் வணங்கி மரியாதை செய்து பொதுக்குழு எவ்வித விக்கினமும் இன்றி சிறப்பாக நடைபெறுவதற்கு ஆக்ஞை பெற்றான்.பின் மும்மூர்த்திகளையும் பணிவுடன் வணங்கி முதல் மரியாதை செய்தான்.பிறகு தேவகுருவான பிரகஸ்பதியிடம் ஆசிகள் பெற்றான்.அதன்பின் முருகப் பெருமான்,நந்தியெம்பெருமான்,வீரபத்திரர்,நாரதர்,நவக் கிரகங்கள் சார்பில் வந்திருந்த சனி பகவான் ஆகியோர்களைப் பணிவுடன் வணங்கி மரியாதைசெய்தான்.அதன்பின் வந்திருக்கும்ஏனையத் தேவர்கள் அனைவரையும் வணங்கினான்.


தேவேந்திரனின் இந்த சம்ப்ரதாயமான மரியாதைகளைக் கண்டு மும்மூர்த்திகள் உட்பட அனைவருமே மகிழ்ந்தனர்.


பிறகு தேவேந்திரன் பேச ஆரம்பித்தான்.


"இன்றைக்குக் கூட்டப்பட்டிருக்கும் இந்த அவசர மற்றும் சிறப்புப் பொதுக்குழுவிற்கு வருகை தந்திருக்கும் அனைத்துத் தேவர்களையும் பணிவோடும் அன்போடும் இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்.நான் தேவேந்திரனாகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டு ஏறத்தாழ ஒரு யுகமாகிறது.என் ஆட்சிக் காலத்தில் எல்லா லோகங்களிலும் தேவர்களின் பணிகள் எவ்விதக் குறையும் இல்லாமல் நடந்து வருகின்றன.தேவலோகத்தில் வாழும் அனைத்துத் தேவர்களும் ஏற்கனவே அனுபவித்துவரும் வசதிகளை மேம்படுத்தி இருக்கிறேன்."(கை தட்டல்)


"குறிப்பாகவும் சிறப்பாகவும் சொல்லப் போனால் சிவ லோகத்தில் உள்ள சிவனடியார்கள்,பூத கணங்கள் ஆகியோர்கள் குளிப்பதற்கான வசதிகள் குறைவு என்று ஒருமுறை ஈசன் அபிப்பிராயப்பட்டார்.மறுகணமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட நவீன குளியல் அறைகளைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தேன்.வெய்யில் காலங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு ஈசனின் தலையில் எந்நாளும் அமர்ந்திருக்கும் கங்கை நதியிடம் பேச்சுவார்த்தை நடத்தித் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்திருக்கிறேன்."(கை தட்டல்)


"அதேபோல் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் எம்பெருமான் பரந்தாமன் பாற்கடலில் தினமும் நிரப்பப்படும் பாலில் நிறையத் தண்ணீர் கலந்திருப்பதால் அவ்வளவு வெண்மையாகத் தெரியவில்லை என்றும்,மாலைக்குள் புளித்துப் போய்த் துர்நாற்றம் வீசுவதாகவும்,மேலும் பாற்கடல் தினமும் சரிவரச் சுத்தம் செய்யப்படுவதில்லை என்றும் சொன்னார்.புகார் தெரிவித்த அன்றே உடனடியாக அதிரடியாக நடவடிக்கை எடுத்தேன்.எப்படி?முன்பெல்லாம் வெளியிலிருந்து பாலைக் கொண்டுவந்து பாற்கடலை நிரப்புவார்கள்.இப்போதெல்லாம் போய்ப் பாருங்கள்.தினமும் இரவு பரந்தாமன் பள்ளியறைக்குப் புறப்பாடானதும் பாற்கடல் சுத்தம் செய்யப்படுகிறது.பிறகு நன்னீரால் நன்றாகக் கழுவப்படுகிறது.பின்னர் உடனுக்குடன் உலர்த்தப்படுகிறது.விடியும் வரை உலர்ந்ததும் விடியற்காலையில்காமதேனுவால் நேரடியாக முதல் பாலாகப் பீச்சப்பட்டு நிரப்பப்படுகிறது.நறுமணத்திற்காக ஏலம்,ஜாதிக்காய்,கற்பூரம் போன்ற வகையறாக்களும் சேர்க்கப்படுகின்றன."(நீண்ட கை தட்டல்)


"இப்படி எவ்வளவோ காரியங்கள் செய்திருப்பினும் நான் இந்த தேவேந்திரப் பதிவியில் ஒட்டிக் கொள்ள விரும்பவில்லை.காரணம் எனது அந்தரங்கக் குடும்ப வாழ்க்கை ரொம்பவே பாதிக்கிறது.எனவே நான் இந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்.எனக்குப் பதிலாக வேறொரு தேவரைத் தேவேந்திரனாகத் தேர்ந்தெடுக்கும்படி உங்கள் அனைவரையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.அனைத்துத் தேவர்களின் நாமம் வாழ்க!"


பொதுக்குழு உறுப்பினர்களனைவரும் ஏகோபித்துக் கை தட்டினர்.அவர்களுக்குத் தான் வேறு ஒன்றும் தெரியாதே!


அடுத்ததாகத் தேவர்களின் குலகுருவான பிரகஸ்பதி எழுந்து நின்று தேவேந்திரனின் கோரிக்கை கேட்டுத் தான் சொல்லொணாத் துயர் உற்றதாகவும் இனிமேல் அவரைப் பிரிந்து புது தேவேந்திரன் தேர்ந்தெடுக்கப்படும்வரை வாடப் போகும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டார்.


அப்போது புதிதாக உறுப்பினரான ஒரு தேவர் எழுந்து பேச ஆரம்பித்தார்.ஆனால் அருகில் இருந்த மூத்த தேவர்கள் புதிய தேவரின் கையைப் பிடித்து இழுத்து,'இந்த விஷயம் எல்லாம் மும்மூர்த்திகள்,அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்(இதில் தேவியர்களும் அடங்கும்) நாரதர் போன்றவர்கள் ஆகியோரால் மட்டுமே பேசி முடிவு செய்யப்படவேண்டியது.அநாவசியமாக நீ தலையிட்டால் அவர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்றுகூறி உட்கார வைத்தனர்.அப்பவும் விடவில்லை அந்தப் புதுத் தேவர்.


"அதென்ன அந்தரங்க வாழ்க்கை பாதிக்கப் படுகிறது என்றாரே?"


"ஏதாவது கசமுசா சமாச்சாரமாக இருக்கும்."